இடுகைகள்

திடீரென்று தான்..

திடீரென்றுதான் தேவைப்படுகிறது ஒரு மழையும் ஒரு காஃபியும்... ஞாபகங்களை அவ்வப்போது மீட்டுக்கொள்ள பாதியில் விட்டுப்போன உரையாடல்களைத் திடீரென்றுதான் தொடரும்படி தோன்றுகிறது... கேட்ட மாத்திரத்தில் பூவைத் தராத எந்தத் தாவரத்தின் மீதும் என் 'திடீர்கள்" கவலைகளைக் கொட்டுவதில்லை.... திடீரென்றுதான் தேவைப்படுகிறது துயரத்தின் நாண்களையெல்லாம் அதிர்வுறச் செய்யும் மாபெருமிசை... ஒரு குரலில் குழைந்தபடிக் காணாமல் போவது என்னமோ என் "திடீர்'களுக்கு வாய்ப்பதேயில்லை... எல்லாப் பிரயத்னமும் அறுந்துபோன ஒரு பட்டத்தின் நாண் பற்றும் இறுதித் தொடுகையில் வழிகிறது என் "திடீர்"களின் வானம்... திடீரென்று தான் தோன்றுகிறது இங்கு தானே எங்கோ இருக்கிறாய்..... குரல் கேட்கிறது தானே.. ஏனெனில் திடீரென இப்பொழுதெல்லாம் மழை குரலைக் கவ்வுகிறது...

ஸோ கால்ட் இண்டெலெக்சுவல்ஸ்

கொஞ்சம் விலகியே நில்லுங்கள்! உங்கள் புன்னகை எங்களுக்குத் தேவையில்லை. உங்கள் பெயருக்கு முன்னால் "மேட்டிமை பொருந்திய" என எதுவும் இல்லாத உங்களின் புன்னகை எங்களுக்குத் தேவையில்லை. ஏனெனில் நாங்கள் "ஸோ கால்ட் இண்டெலெக்சுவல்ஸ்" நீங்கள் அப்பழுக்கற்ற பார்வையுடனும் மிருதுவான அன்புடனுமே சதா எங்களைப் பார்த்துக்கொண்டிருக்கிறீர்... "கிரீடங்கள்" அணியாத பார்வைகளை நாங்கள் பார்ப்பதே இல்லை... பிறிதொருவரின் கூடாரத்தில் நுழையும் வாதைகளைக் கண்டுப் பதறும் மென்மனத்துக்காரர்களாக இருக்கிறீர்கள்.... நாங்கள் வெறும் கூடாரங்களின் திசைகளில் அருவருப்பை உமிழ்பவர்கள் ஏனெனில் நாங்கள் "ஸோ கால்ட் இண்டெலெக்சுவல்ஸ்". "மேட்டிமை பொருந்திய" இன்னாரென யாரை அழைத்தாலும் புன்னகைத்து தங்கள்பால் சிறிது வெளிச்சப்பிச்சைக் கேட்கும் "வெளிச்சவாதி" களின் கைகளைப் பற்றி நீங்கள் செய்யப்போவதென்ன.... இல்லாதவர்களை அரவணைத்துக்கொண்டு எதிர்பார்ப்பற்ற பிரியங்களைச் செலுத்தும் உங்களின் விலாசங்கள் எங்களுக்குத் தேவையில்லை... பெருந்திரள...

மனப்பிறழ்வுக்காரர்கள்

மனப்பிறழ்வுக்காரர்களிடம் ஓர் அதிசயம் இருக்கிறது. எப்பொழுதும் தன் மேல் ப்ரியமாய் இருந்தவர்கள் தங்களின் ப்ரியங்களை நிறுத்திய நாளோடு நின்று போயிருக்கிறார்கள். தாள முடியாத ஒற்றை நிகழ்விலோ ஒற்றை வார்த்தையிலோ வீழ்ந்தவர்கள் தான் காணாமல் போவதாகத் தன்னை அணிந்துகொள்கிறார்கள்... மனப்பிறழ்வுக்காரர்களிடம் ஒரு லாவகம் இருக்கிறது. யாருக்கோ சொல்ல நினைத்த வார்த்தைகளோடு வேற்றுலகத்தில் பிரசவித்துக்கொள்கிறார்கள்... அவர்களால் தன் கடந்தகால துரோகங்களுக்காகச் சத்தமாக அழ முடிகிறது... ப்ரியக்காரர்களின் புறக்கணிப்பை அசைபோட்டு அவர்களால் தூங்க முடிகிறது... மனப்பிறழ்வுக்காரர்களிடம் யாசிக்க ஒன்று தேவையாயிருக்கிறது... காரணமற்று தன்னைத் தன்னிலிருந்து விடுவித்துக் கொள்ளும் தானற்ற நிலை அது.. இன்னொரு அன்பும் வலியும் வந்துவிடாத பிறழ்வு வரமது... 23/12/17

தேநீர் கோப்பை

ஒரு சேரக் கைகளை ஆறத் தழுவலாம்.. எதிரெதிர் அமர்கையில் ஒரு தேநீர் வரும் நேரம்வரை பார்வைப் பருகலாம்.. தூரம் குறையும்படியான எல்லா இத்யாதிகளையும் முன்னெடுக்கலாம்... உரசிக்கொண்டு பரிமாறப்படும் தேநீர் குடுவைகள் உன்னென் தூரமென்க... உனக்கான ஒன்றை நானும் எனக்கானதை நீயுமென குடுவைகள் பகிரப்படும்... உன்னிதழ் சேரும் முதல் மிடறு தேநீர் அன்பிலுய்யும் மாமழையெனல் சராசரிக் கவிதை... வெற்றுக்கோப்பை நிரம்பி முடிகிறது உன்னைப் பருகி.... ஒரு தேநீர்கோப்பையால் சாத்தியப்படுகிறது பகிரப்படாத வார்த்தைகளைச் சொட்டிக்கொள்ள.... 23/12/15

உங்களைப்போல் ஒருவர்

உங்களைப் போல் ஒருவர்தான் விலாசம் சொன்னதும் மிக வாஞ்சையாக விடை பெறுகிறார். உங்களைப் போல் ஒருவர் தான் உணவு விடுதியில் எனக்குப் பிடிக்கும் எனத் தெரியாமலேயே கூடுதலாக ஒரு சிட்டிகை முள்ளங்கிச் சாம்பார் இட்டுவிட்டு கண்ணடிக்கிறார்... உங்களைப் போல் ஒருவர்தான் சில்லரைகளை என்னிடமிருந்து நடத்துனருக்குக் கடத்தி பயணச் சீட்டைத் தருவதற்கு முன்னே ப்ரியமாய் சிரிக்கிறார்... உங்களைப் போல் ஒருவர்தான் வங்கியில் பேனாவைக் கேட்பதற்கு முன் ஒரு குழந்தையைப் போல் தயங்குகிறார்... ஒன்று மட்டும்தான் பிடிபடவே இல்லை.. நீங்கள் மட்டும்தான் என்னிடம் உங்களைப் போலவே இல்லை. 27/12/18

ஆமென்

நீங்கள் தானே பாவமன்னிப்பு கோரினீர்.... நீங்கள் தானே பெருமெழுகொன்றைப் பேரம்பேசி வாங்கியபின் எரிந்தொழுகும்வரை நெடிய வேண்டுதலை வேண்டினீர்... நீங்கள் தானே யாசகக் கைககளில் அவலப் பார்வைகளை நிரப்பினீர்... நீங்கள் தானே ஏதுமற்றவர்களுக்கான அன்னதானக் கூடங்களில் பங்கிட்டீர்.... மன்னிக்கவும். சமாதானத்துடனே போ உன் வேண்டுதல் ஏற்கப்பட்டதென்ற வசனத்தைத் தவிர்த்து தேவ செய்தியைத் துதியுங்கள். ஆமென். 27/12/19

இஸ்கான் உணவு திட்டம்

இஸ்கானுக்கு காலை உணவு திட்டத்தைக் கொடுத்தது போக மதிய உணவுத் திட்டத்தையும் கொடுக்கவேண்டும் எனப் பரிந்துரையாம். நல்ல விசயம். நல்ல முன்னெடுப்பு. அரசு இந்தமாதிரியான புரட்சிகர நடவடிக்கைககளை எடுக்கும்போது நாம் ஆதரிக்கவேண்டும். நிற்க. இரு தினங்களுக்கு முன் நண்பர் இளங்கோ பகிர்ந்த ந்யூஸ்18 விவாத வீடியோவில் ஜெயரஞ்சன் சார் சத்துணவுத் திட்டம் கடந்துவந்த வரலாறைக் குறிப்பிட்டார்.. 1920களிலேயே ஜஸ்டிஸ் பார்ட்டி படிப்பு சொல்லிக்கொடுக்க அழைத்தபோது வராதவர்களை வரவழைக்க சோறுபோட்டு அழைத்தார்கள். பிரிட்டிஷ்காரன் ஒத்துக்கொண்டு சம்மதித்து பின் கைவிட்ட திட்டத்தைக் காமராசர் கையில் எடுக்கிறார். ஒரு கட்டத்தில் எம்ஜிஆரின் காலகட்டத்தில் திட்டக்குழுவுடன் சத்துணவத் திட்டத்திற்கான நிதி கேட்டு சண்டையிட்டு பிறகு கருணாநிதி ஜெயலலிதா என மெருகேறியது இந்தத் திட்டம். இதற்கிடையேயான ஒரு காலகட்டத்தில் உச்சநீதிமன்றமே தமிழ்நாட்டு சத்துணவுத்திட்டத்தை மாடலாகக் கருதி மற்ற மாநிலங்களில் நடத்த அறிவுரை கூறுகிறதாம். ஒரு சத்துணவுத்திட்டத்தில் அதற்கான கொள்முதல் பொருள் அதற்கான கிடங்கு பணியாளர் வாரியம் என இத்தனை பேரு...