பெத்தாரு

வேகமாக சைக்கிளை ஓட்டிக்கொண்டு வீட்டு வாசலுக்கு துரை வரும்பொழுது மணி ஒன்பது.
  நீச்ச தண்ணியையும் காய்கறி மிச்சத்தையும் வாசலில் இருக்கும் உரலில் கொட்டிக்கொண்டே இருந்தாள்மாயக்காள்.  அதற்குள் இதற்காகவே வரும் அந்த வெள்ளைப் பசு வாயைத் திணிக்க கொம்பு மாயக்காளை இடித்தது.

அம்மா பாத்து முட்டிறப்போகுதுனு துரை சொன்னப்பின்னாடி தான் மகன் வந்துவிட்டதைப் பார்த்து பிறகு முகத்தைத் திருப்பிக்கொண்டாள்.
ஒரு வித எரிச்சலுடன்  நீ வேற என்னத்த்துக்கு அவசரப்படுற ..என்று சொல்லிக்கொண்டே முழங்கையால் பசுவின் முகத்தைத் தள்ளி விட்டு உரலுக்குள் கழனித்தண்ணியை ஊற்றினாள். காய்கறிகளைக் கொட்டினாள்.
பசு மெல்ல மெல்லமாய் குடித்து, வாயில் சிக்கும் காய்கறிகளை மென்று கீழே சிந்தியது.

உனக்கு ஈனவும் தெரியல...நக்கவும் தெரியல..எதுக்கு இந்த பவுசு னு சாடை பேசினாள் மாயக்கா.
எதுவும் பேசாமல் உள்ளே நுழைந்தான் துரை.

இரவிலேயே எழுந்து சிம்மக்கல் போயி காய்கறிகள் வரும் லாரிகளில் காய்கறி மூட்டைகளை விலைக்கு வாங்கி அவற்றை ட்ரை சைக்கிளில் ஏற்றி சென்ட் ரல் மார்க்கெட்டுக்கு வந்து விற்று பொதுவாய் வீடு வர மதியம் ஆகிரும். இன்று வேலைக்கு ஆளை நிமிர்த்திவிட்டு அவசர அவசரமாக வந்திருப்பது எட்டு மாத கர்ப்பவதி  மனைவியை செக் அப் பிற்காக அழைத்துச் செல்ல.
அரசு மருத்துவமனைகளில் வேகமாகச் சென்று டோக்கன் போட்டால் தான் மருத்துவரையும் ஸ்கேன்னையும் பார்த்துவிட்டு பொழுதுசாய வீடு வந்து விடலாம்.
கிளம்பிட்டியா எனக் கேட்டான்.
சரஸ்வதி அவள் பெயர். திருமணம் முடிந்து பத்து வருடங்களாகக் குழந்தை இல்லை.
மூன்றாவது வருஷமா நான்காவது வருஷமா எது என்றே மறந்திருக்கக்கூடும். ஒரு கரு அவள் வயிற்றில் உருவாகிய ஐம்பதாவது நாள் இந்த உலகத்தைப் பிடிக்காமல் தன்னைத் தானே சிதைத்துக்கொண்டு கரைந்து போய் விட்டது.
இத்தனை வருட தவக் கணக்கு சரஸ்வதிக்கு.

மாமியார் மாயக்காளின் சாடை பேச்சும் அண்டை வீட்டுக்காரர்களின் ஏளனமும் பார்வையும் தான் அவளது இத்தனை வருட வாழ்க்கை.
நகரத்தின் நெருக்கமானப் பகுதியில் ஏழைகளுக்கான ஒரு தெருவில் நாலு வீடுகள் இருக்கும் காம்பவுண்ட் வீடு.

ஒரு வீட்டின் பிரச்சினை வெளியில் தெரிய கடினப்படவே தேவையில்லை. வீட்டு வாசலில் தொங்கவிட்ட ஸ்கீரின் விலகினாலே  தெரியும்.
சரஸ்வதி தயாராய் இருந்தாள்...
எட்டாவது மாத வயிறு கொஞ்சம் இறங்காமல் நடுவே இருந்தது.  எப்பவோ கரைந்து போன கருச்சிதைவிற்கான பாரம் இன்னும் அவள் கண்களில் இருந்தது.
அது துரைக்கும் தெரியும்.

பிள்ளைப் பேறு இல்லாத பெண்ணின் கவலைகளை பதியும் இந்த சமூகம் அதே பெண்ணின் கணவனின் கவலைகளைக் கேட்பதும் இல்லை. பதிவதும் இல்லை.

வீட்டை விட்டு வெளியே வந்து செருப்பை போட்டாள் சரஸ்வதி.  நூல் சேலை இழுத்துக் கட்டி  கிளம்பிய அவள் கால்  இடுக்கில் செருப்பு  போகாமல் வீங்கிய பாதம் அமுங்கி கொடுத்தது.
பக்கத்து வீட்டுக்காரி வாசலில் பாத்திரம் எடுத்துப்போட்டு தேய்த்துக்கொண்டிருந்தாள்... இவர்களைப் பார்த்ததும்...

ஆஸ்பத்திரிக்கா...எப்ப பிரசவம்னு கேளு சரசு..உம்முனு இருக்காத...ஆப்ரேஷன்லாம் வேணாம் ..நார்மலுக்கு என்ன செய்யனும் டாக்டர்க கிட்ட வாயத்திறந்து கேளு னாள்..

சரி க்கா...

இருவரும் வாசலுக்கு வந்தார்கள்...

எந்த எடுபட்ட பயனு தெரியல...வாயில்லா ஜீவன கட்டையால அடிச்சிருக்கான் போல...மாடு நொண்டிட்டே போகுது...இவன் சோத்துல அந்த மாடு என்ன மண்ண அள்ளிப் போட்டுச்சா...நாசமா போறவன்...மாயக்கா மாட்டின் நொண்டிய காலுக்கு பிரச்சினையை வளர்த்துக்கொண்டிருந்தார்...

இவர்கள் கிளம்பியத பார்த்ததும் ...

கிளம்பியாச்சா...
ம்...வெறும் ம் கொட்டினான் துரை...
சரஸ்வதி என்ற சரசு மாமியாரை வெறித்து பார்த்துக்கொண்டிருந்தாள்...

வீட்டைக் கூட்டியாச்சா...மாயக்காள் கேட்டாள்..
வந்து கூட்டிரேன் அத்த..
ம்கும்...நக்கலாய் பதில் வந்தது மாயக்காளிடமிருந்து...

நான் சொன்னது ஞாபகம் இருக்கட்டும்..னு மகனைப் பார்த்து அதட்டலாய் கேட்டாள்...

ஸ்கேன் எடுக்கும் பொழுது அங்க இருக்கும் மருத்துவரிடமோ அல்லது அங்க இருக்குற நர்ஸ்களிடமோ ஏதாவது ஒருவரிடம் அது என்னக் குழந்தை என்பதைத் தெரிந்து வர வேண்டும் என்பது தான் மாயக்காளின் கட்டளை...

ஒண்ணுமே சொல்லாமல் துரை செருப்பைப் போட்டுக்கொண்டிருந்தான்...

என்னடா பேப்பயலே ஒண்ணும் சொல்ல மாட்ற...மாயக்காள் ஆரம்பித்தாள்..

சரஸ்வதி பாத்திரம் தேய்த்த பக்கத்து வீட்டு அக்காளைப் பார்த்தாள்..
அவள் இந்தக் காட்சியைப் பார்த்துக்கொண்டு தான் இருந்தாள். அவள் மட்டும் இல்லை. அதற்கு அடுத்த வீட்டு வாசலில் சிகரெட் புகைத்துக்கொண்டிருந்த பெட்டிக் கடைகாரரின் அப்பாவும் பார்த்துக்கொண்டிருந்தார்.

துரை ஒண்ணும் சொல்லாமல் கிளம்பினான்.

ஒங்க அப்பன் அந்த ஒரு ஏக்கருல விவசாயமும் பாத்து காய்கறி வாங்கி வித்து பண்ணான்..நீயும் இருக்கேயே ஒண்ணுக்கும் லாயக்கு இல்லாம...அந்த மனுசன்ல பாதி இருப்பியா...அந்த ஏக்கரும் சும்மால் கடக்கு....சம்பாதிக்குறது வயித்துக்கே பத்தல...பெக்குறப்ப பெக்காம பெக்குறா பத்து வருசம் தாண்டி...இதுலாம் உருப்புடவா...பேரன் பெறக்கட்டும்...அவன் வந்து அந்த ஏக்கர்ல விவசாயம் பண்ணி உன் முகத்துல சாணி அடிப்பான்...

இதை பேசி முடிப்பதற்குள்ளாகவே துரையும் சரஸ்வதியும் நடக்க ஆரம்பித்துவிட்டார்கள்....

உரலைக் குடித்து முடித்த பசு அடுத்த வீட்டில் அம்மா என்று கத்த...துரையும் சரஸ்வதியும் அந்த வீட்டைக் கடந்து வந்திருந்தார்கள்.

பஸ் ஏறி அரசு மருத்துவமனை போயி டோக்கன் போட்டு மகப்பேறு துறையில் காத்திருந்தார்கள்.
சாப்பிட ஏதும் வாங்கிட்டு வரவா....
நீங்க ஏதும் சாப்பிட்டீங்களா...
இல்ல பசிக்கல...

ஒங்கம்மா சொன்னமாதிரி கேக்கப்போறீங்களா...
அமைதியாக இருந்தான் துரை..

கேட்டு உங்கம்மா என்ன செய்யப்போகுது ....
அமைதியாக இருந்தான் துரை....

என்னென்ன பேசுறாங்க தெரியுமா ஒங்கம்மா அழத் தொடங்கியிருந்தாள் சரசு...

இப்ப எதுக்கு அழுற...
ஆமா நான் பண்றது தான் உங்களுக்குத் தெரியும்..ஒங்கம்மா பண்றதுலாம் ஒண்ணுமில்ல....முழுதாய் அழ ஆரம்பித்தாள் சரசு..

வீட்டைக் கூட்டினியானு கேட்டது தப்பா....துரை கேட்டான்..
அத விடுங்க...பையனா பொண்ணானு கேட்டு ஒங்கம்மா என்ன செய்யப்போகுது....
நான் கேப்பேனா...விடு...துரை சமாதானப்படுத்த முயற்சித்தான்...

இத்தன வருசம் குழந்த இல்லாம இருந்து இப்பத்தான் வருது. அது என்னா இருந்தா என்ன....இந்தம்மா ஏன் தான் இப்படி இருக்கோ...நேத்து வந்த உங்க அத்தைட்ட அவங்க மருமகள் ரொம்ப பேசுறானு சொன்னதுக்கு, பொட்ட புள்ளைய அப்பவே கள்ளிப்பாலூத்தி கொண்ணுருந்தா இப்புடி பேசுவாளானு கேக்குறாங்க...ஒங்கம்மாலாம் பொம்பளையா னு அழுகைய விடவே இல்லை சரசு.

அப்படிலாம் நடக்க விடுவேனா விடு. நீ போட்டு குழப்பிக்காத.

சரஸ்வதி இருக்கீங்களா...நர்ஸ் அழைத்தாள்.

உள்ளே சென்றார்கள்.
எடை பிரஸ்ஸர்  பார்த்து விட்டு மருத்துவர் இருக்கைக்கு அருகில் இருக்கும் ஸ்டூலில் அமர வைத்தார்கள்.

பெரிய மருத்துவர் போல. அவரைச் சுற்றிலும் நான்கு ஐந்து ஜீனியர் மருத்துவர்களும் மருத்துவ மாணவிகளும் இருந்தார்கள். ஸ்கேனுக்கு எழுதிக்கொடுத்து ரிப்போர்ட்டுடன் வாங்க என அனுப்பிவிட்டார்கள்.
ஸிகேன் எடுத்துவிட்டு வர ஒரு மணி நேரம் ஆகிவிட்டது. வெளியே போயி துரை ஒரு வடை வாங்கி கொண்டு வந்து கொடுத்தான். சாப்பிட்டு விட்டு இருவரும் அமர்ந்திருந்தார்கள்.

ரிப்போர்ட் வந்திருக்கு காட்டிட்டு போயிரோம்னு எத்தனை தடவைச் சொல்லியும் அந்த நர்ஸ் கூப்பிடவே இல்லை. மதியம் ஒரு மணி வெயில் வெக்கையாய் மருத்துவமனைக்குள் விரவிக்கொண்டிருக்க முந்தானையால் வியர்வையை துடைத்துக்கொண்டிருந்தாள் சரசு.

ஒரு வழியாய் உள்ளே சென்று மருத்துவரிடம் அமர்ந்த பொழுத் அந்த பெரிய மருத்துவர் இல்லை. ஏதோ ஜீனியர் மருத்துவர் தான் இருந்தார். ரிப்போர்ட்டைப் பார்த்துவிட்டு ஏற இறங்க பார்த்தார்.

நீங்க சொந்தமா இரண்டு பேரும் என அந்த ஜீனியர் மருத்துவர் கேட்டார்.

இல்லையே என்றான் துரை..

மறுபடியும் ஏற இறங்க இரண்டு பேரையும் பார்த்து விட்டு, பக்கத்து இருக்கையில் அமர்ந்து நோயாளிகளைப் பார்த்துக்கொண்டிருந்த சக மருத்துவரை அழைத்தார் அந்த ஜீனியர் மருத்துவர்.

சி..திஸ் ரிப்போர்ட்...இட்ஸ் டூ பி காம்ப்ளிகேட்டட்...ஐ...கெஸ் ஸோ...
என்று அந்த ரிப்போர்ட்டைக் காண்பித்தார்.

ஆங்கிலம் தெரியாத சரசும் துரையும் அந்த சக மருத்தவரின் முகத்தைப் பார்த்தார்கள்.

மே...பி....டவுன் டெஸ்ட் எடுத்தீங்களா...என அந்த ஜீனியர் மருத்துவர் இவர்களைப் பார்த்து கேட்டார்..

சரசிற்கும் துரைக்கும் ஏதும் புரியாமல் என்ன என சரசு கேட்டாள்..

என்ன இருக்கு ரிப்போர்ட்ல என துரை கொஞ்சம் பதட்டமா கேட்டான்...

கொஞ்சம் வெயிட் பண்ணுங்க...பெரிய டாக்டர்ட்ட காமிச்சுட்டு வர்ரோம்னு இரண்டு மருத்துவர்களும் ரிப்போர்ட்டை எடுத்துட்டு உள்ளே சென்றார்கள்..

அமர்ந்திருந்த சரசு தன் பின்னால் நின்ற கணவனைத் திரும்பி பார்த்தாள். தலையை ஆட்டி இரு பார்ப்போம் என ஒரு மாதிரியாக அவனும் தலை அசைத்தான்.
இவர்களுக்குப் பின் நின்ற நோயாளிகள் கூட அந்த ரிப்போர்ட்டின் மீதான தன் அனுமானங்களை அவிழ்க்க ஆரம்பித்தார்கள்...

கொஞ்ச நேரம் கழித்து பெரிய டாக்டர் அறையிலிருந்து ஒரு நர்ஸ் வந்து சரஸ்வதி கூட வந்தவங்க யாருனு அலறினாள்...

நான்னு...னு கைகாட்டி தன்னைத் தெரியபடுத்தினான் துரை.

நீங்க மட்டும் போங்க சீஃப் கூப்பிடுறாங்க...நீங்க ஓரமா உக்காருங்கக்கா...என சரசுவை ஓரமாக உட்காரவைத்துவிட்டு துரையை உள்ளே அனுமதித்தாள் அந்த நர்ஸ்.

கதவைத்திறந்து உள்ளே சென்றதை வெறும் வெறித்தக் கண்களால் பார்த்துக்கொண்டிருந்தாள் சரசு.

பத்து நிமிடம் கழித்து வெளியே வந்தான் துரை.

என்னாங்க சொன்னாங்க....வேகமாகக் கேட்டாள்.
பயந்து நடுங்கிய அவளது குரலும் , ஆரவமும் அவளுக்கு வியர்த்து நடுங்க வைத்திருந்தது.
ஏ...பயப்புடாத ஒண்ணும் சொல்லல...
அந்தம்மாக்கு ஃபோனா வந்திட்டு இருக்கு. அதான் லேட்டு.

இரத்தம் கம்மியா இருக்காம். நல்லா சாப்பாட்டா வாங்கி தரனுமாம்...கால் வீக்கத்துக்கு காலை விரிச்சு தலகாணீ போட்டு வைக்கனுமாம்...நடக்கனுமாம்... இதான் அட்வைஸ் பண்ணுச்சு அந்தம்மா...

ஓ..அவ்வளவுதானா..பயந்துட்டேங்க...

சும்மா நீ எல்லாத்துக்கும் பயந்துட்டே இரு...வா போகலாம்...என இருவரும் பஸ் ஏறி  வீட்டுக்கு வந்தார்கள்..

வீட்டைக் கூட்டி கழுவி சோறு சமைத்து எல்லாக் காய்கறியும் கலந்து குழம்பு வைத்திருந்தாள் மாயக்காள்...

உள்ளே நுழைந்ததும் மகனாய் வாய் திறப்பானாய் என மாயக்காள் பொறுத்திருந்தாள்...

மனைவியை வீட்டில் விட்டதும் மார்க்கெட் செல்ல கிளம்ப ஆரம்பித்தான் துரை..

என்னங்க சாப்பிட்டு போங்க ..என்றாள் சரசு.
இல்ல இல்ல...வடை சாப்பிட்டது நெஞ்சுக்குள்ளேயே நிக்குது...வேணாம்..

மெதுவா மாயக்காள் கேட்டா...என்ன கேட்டியா...
அம்மா அதுலாம் கேக்கக்கூடாதாம். கேட்டா ஜெயில்ல போட்டுருவாங்களாம்...

ஆமா போடுவான் நல்லா...உம் மாமா பையன்லாம் ஏழாவது மாசமே அவன் பொஞ்சாதிக்கு பையன்னு கேட்டுவந்துட்டான்...ஒனக்கு அவ்வளவு தான் கூறு..எனக்குனு பொறந்தியே...பேச ஆரம்பித்தாள் மாயக்காள்..

சரசு முகத்தை மாற்றிக்கொண்டு உள்ளே சென்று படுத்துவிட்டாள்.
இப்போதைக்கு வீட்டை விட்டு கிளம்புவது நல்லது என துரை வெளியே கிளம்பி சைக்கிளை ஓட்டிக்கொண்டு  ஆத்தங்கரையோரமாய் நின்றான்.
மழை இல்லாமல் காய்ந்து போய் கிடக்கும் வைகை ஆறு...எங்கோ ஒரு பறவை கத்திக்கொண்டு போகும் சத்தம். இரண்டு மணி வெயில் எனக்கூடப் பார்க்காமல் விளையாடும் இரண்டு நாய்க்குட்டிகள்..

மெல்லாமாய் கட்டியிருந்த கைலியை லாவகமாய் சுருட்டி ஒரு மரத்தடியில் அமர்ந்தான் துரை...
அவனே அறியாமல் கண்கள் கசியத் தொடங்கின.....உண்மையில் சொல்லப்போனால் அவன் வந்ததே அழுகத்தான்....

பெரிய மருத்துவரின் அறைக்குள் நடந்தது அவனுக்கு மறுபடியும் மறுபடியும் அவன் மூளையைக் கிழித்தன.

சரசு ஒங்க சம்சாரமா...
ஆமாம்மா...
அவங்க ஒங்க அத்தைப்பொண்ணா..
இல்லமா அன்னியந்தான்...

சரிப்பா...அவங்கள பத்திரமா பாத்துக்க...
இப்ப இருக்குற ஸ்கேன் ரிப்போர்ட் படி அவங்க வயித்துல இருக்குற குழந்தைக்கு ஒரு சின்ன பிரச்சினை...
கண்கள் அகல வைத்து என்னம்மா...என வற்றிய தொண்டையிலிருந்து கேட்டான் துரை.

உயிருக்கு ஒண்ணும் இல்ல. குழந்தை நல்லா இருக்கு. ஒடம்புல தான் கொஞ்சம் குறை ...ஒரு கால் பகுதி நரம்பு எலும்பு லாம் இப்ப இருக்குற ஸ்கேன் படி சரியா தெரியல...ஒரு வேல டெலிவரிக்குள வளரலாம்.. இல்லாட்டி ஒரு வேள கால் கொஞ்சம் ஊனமா பிறக்குற வாய்ப்பு இருக்கு...

துரைக்கு கண்ண்லாம் இருட்டிக்கொண்டு வந்தது.

மறுபடியும் அந்த டாக்டரிடம் ஏதாவது கேக்கனுமா என இருந்தது. அப்படி கேட்டு நல்லவிதமாய் சொல்வாரா என்ற ஏக்கமும் இருந்தது. அவனுக்கு சுய நினைவு விட்டு விட்டு வந்தது போல் இருந்தது.

இதை உங்க மனைவிட்ட சொல்லாதீங்க...அவங்க வருத்தப்பட்டு மனநிலை பாதிச்சா குழந்தைக்கு இன்னும் பாதிப்புவரும்.. சொல்ற மாதிரி சொல்லுங்க என்றார்...

எந்த சலனும் இல்லாமல் சரசைக் கூட்டி வந்து வீட்டில் விட்டு விட்டு ஆத்தங்கரையில் இப்பொழுது படுத்துவிட்டான்...

மன தைரியத்தை வரவழைத்துக்கொண்டான். பிரசவத்திற்குப் பின் தெரியட்டும். அதுவரை இந்த உண்மையை அவனே முழுங்கிவிடவேண்டும்...ஒரு வேளை டெலிவரிக்குள வளரலாம்னு சொன்ன மருத்துவரின் வாக்கு மட்டும் தான் இப்போதைக்கு நம்பிக்கை....

ஒன்றரை மாதங்களாய் சரசு சுமந்த சுமையை விட துரை சுமந்த சுமை அதிகம்...

அதற்கு ஒரு முடிவு வந்தது. பிரசவ வலி.

நள்ளிரவில் குழந்தைப் பிறந்தது. இரத்தக்கறையோடு குழந்தையை அந்த நர்ஸ் பிரசவ அறையிலிருந்து வெளியே வந்து தந்த பொழுது முதன் முதலில் வாங்கியவள் மாயக்காள் தான்...குழந்தையின் கீழ் தான் பார்த்தாள்...அது பெண் குழந்தை.
துரை கையில் கொடுத்தாள்..அவன் கால்களைப் பார்த்தான். அவனுக்கு வித்தியாசம் தெரியவில்லை...
பிரசவம் பார்த்த அந்த பெரிய மருத்துவரின் அறைக்கு ஓடினான். அவர் வரும் வரை காத்திருந்து...அவர் உள்ளே செல்லும்பொழுது முகத்தைக்க் காண்பித்து ஒரு வணக்கம் சொன்னான்...
உள்ளே வாப்பா என்றார் அவர்.
டாக்டர்...என் குழந்தை...
ஆமா...நல்லாருக்கு...உங்கள மாதிரி இல்லாட்டி உங்க அம்மா மாதிரி வரும்போல..
டாக்டர்...குழந்தையோட கால் வளந்திருக்கா...அடிவயித்துல இருந்து கேட்டான்...
நான் தான் சொன்னேன்லபா.....அது வளர்ச்சியடையல...கொஞ்சம் தத்தி தத்தி நடப்பா...கொஞ்சம் சிரமப்படுவா....அதுவும் மூணு வயசுக்குஅ ப்புறம்  பிஸியோ கொடுத்தாத்தான் உண்டு....
டாக்டர் எனக்குப் புரியல...அவ நடப்பாளா....
நடப்பா..ஆனா கொஞ்சம் நொண்டி நொண்டி...

அவ்வளவுதான்..துரையின் கண்களில் கண்ணீர் சுரந்து டாக்டர் மங்கலாகத் தெரிய ஆரம்பித்தார் அவனது கண்களுக்கு.

ஒண்ணும் கவலைப் படாதீங்க...குழந்தை கிடைச்சதே பெருசுல...நிறைய பேத்துக்கு குழந்தையே இல்லை...ஒலகத்துல ரெண்டு காலும் இல்லாம ஆளுக இல்லையா...மெண்டலா பிறந்திருந்தா என்ன பண்ணுவீங்க....இதுல என்ன இருக்கு..பாத்துக்கோங்க...நாளைக்கு டிஸ்சார்ஜ் ஆயிரலாம்...னு நர்ஸ்க்கு அடுத்த பேஷண்ட்கான சீட்டை வாங்கினார் டாக்டர்.

மருத்துவருக்கு அது ஒரு நோயாளி. அது போல எல்லாமே நோயாளிகளுக்கான வார்த்தை மந்திரம். ஆனால் துரைக்கு மாத்திரம் தான் சுமை. சுமை என்பது குழந்தை இல்லை. மனைவியிடம் இதைத் தெரிவிப்பது. அதற்குப் பின் மாயக்காள். அது பெருஞ்சுமை.

குழந்தையைப் பாத்த மாத்திரத்தில் மாயக்காள் வீட்டுக்குக் கிளம்பியிருந்தாள்.
மனைவியிடம் சேதியைச் சொல்லி அவள் கதறக் கதற அழுகையை முழுங்கி அடக்கி சமாதானப்படுத்தினான் துரை. இரவு முழுக்க இருவரும் புலம்பிக்கொண்டும் குழந்தையைப் பார்த்துகொண்டும் இருந்தனர். விடிந்தது. மாயக்காள் வரவே இல்லை. டிஸ்சார்ஜ்.
இருவரும் வெளி வந்து ஒரு ஆட்டோவில் ஏறினார்கள்..

ஒங்கம்மாட்ட குழந்தையைத் தரமாட்டேங்க....
துரை அமைதியாய் இருந்தான்.
அந்தப் பொம்பள கொண்றுவா என் குழந்தையை...
அப்படிலாம் நடக்க விட்டுருவேனா...விடு..அமைதியாய் சொன்னான் துரை..

மனம் என்னவோ பதக் பதக் என அடித்தது துரைக்கு.  ஒரு பக்கம் ஒரே மகன். அம்மாவை ஓரங்கட்ட முடிய வில்லை. பத்து வயதில் தவறிப்போன அப்பனுக்குப் பின்னாடி அம்மா ஒருத்தி தான் விவசாயமும் காய்கறி வியாபாரமும் பார்த்து ஆளை உருவாக்கியிருக்கிறாள். பேரன் பார்க்க ஆசைப்பட்டு இருப்பாள்...அவளுக்குப் பிடிக்கவில்லை என்றால் தனிக்குடும்பத்தனம் போயி குழந்தையைக் காப்பாற்ற வேண்டும். இப்படி பல யோசனைகளுக்கு நடுவே...வீடு வந்தது.

காம்பவுண்ட் உள்ளே நுழைய பக்கத்துவீட்டு அக்கா ஆர்த்தி எடுத்தாள். மாயக்காள் பக்கத்தில் உக்காந்து கொண்டு ஒரு துணிக்கு மஞ்சள் தடவிக்கொண்டு இருந்தாள்...

இருவரும் உள்ளே நுழைந்தார்கள்...
வீடு சுத்தமாகக் கழுவி வைத்திருந்தாள் மாயக்காள்.

மாயக்காள் உள்ளே நுழைந்தாள்..
குழந்தையைக் கொடு எனக் கேட்டாள்...
எதுக்கு அத்த...
கொடு....
எதுக்குனு சொல்லுங்க....
எதுக்கா...
ஆமா எங்களுக்கு பயமா இருக்கும்மா எனக் கத்தினான் துரை...
பயம்மா...என்னடா பயம் பேப்பயலே...

நீ பொண்ணுனாலே கள்ளிப்பாலு ஊத்தி கொண்ணுருவ...இதுல இந்தக் குழந்தை கால் நடக்கமுடியாத ஊனம்மா...இந்தக் குழந்தையக் கொண்ணுறாதம்மா...நாங்க எங்கயாச்சும் இந்தக்குழந்தைய கண்ணுக்காணாத இடத்துல போயி வளத்துக்கிறோம்....விட்டுரும்மானு துரை மாயக்காளின் காலில் விழுந்து வெடித்தழுதான்....
அடக்க முடியாத வெள்ளப்பெருக்கு தன்னையறியாது கரைகளை உடைத்துக்கொண்டு பீறிட்டு வருவதைப் போல இரண்டு மாதமாகச் சுமந்த வேதனையை அழுகையாய் கொட்டியதைப் பார்த்த சரசுவிற்கும் அழுகை வந்து அவளும் மாயக்காளின் காலில்  அந்தக் குழந்தையைப் போட்டு கதறத் தொடங்கினாள்...

மாயக்காள் தன் காலால் தன் மகனின் இடுப்பில் ஒரு எத்து எத்தி போடா பேப்பயலே....னு சொல்லி குழந்தையைத் தூக்கினாள்...

சாமி படங்கள் மாட்டியிருக்கும் சுவத்தைப் பார்த்து...மாரியாத்தா...இத்தன வருஷம் கழிச்சு என் வாரிச இப்படி நீ தந்திருக்கனா நீ என்னமோ மனசுல நினைச்சுருக்க...இவ சக்தி மாரியாத்தா....காலாம் காலு பொல்லாத காலு...போடா பேப்பயலே...இவ சக்திடா....என் பேத்தி டா...இவளோட ஒத்த  பார்வைக்கு தாங்குவீங்களாடா....உக்காந்து வேல பாப்பாடா என் பேத்தி...என் மாரியாத்தா தான் சக்தியா தந்திருக்கா...ஓடியாடி வேலை செய்யத்தான்டா காலு கையுலாம்...என் பேத்தி ஆள பொறந்திருக்கா....இருக்குற ஒத்த ஏக்கர நூறு ஏக்கரா ஆக்கி நெல்லும் பொன்னுமா அறுவட செய்வா பாரு...நீங்களாம் அவட்ட ஒக்காந்து திண்பீன்கடா...
நெத்தில ஒரு முத்தம் தந்து முகத்தைப் பார்த்தாள் மாயக்காள்...
ஒரு நாள் குழந்தைக்கு அவளது அப்பத்தாவைப் பார்த்து சிரிக்கத்தோன்றியிருக்கலாம்...சிரித்தது...

சிரிச்சுட்டாயா ...என் ஆத்தா...என் பெத்தாருக இவுக...கொஞ்சத்தொடங்கினாள் மாயக்காள்...
சரசுக்கு இப்பொழுது சாரைசாரையாக அழுகை வந்தது எழுந்த நின்றாள்...

மாயக்கா குழந்தையை மடியில போட்டு கீழ உக்கார்ந்து...உங்காத்தட்ட என்ன கேட்டுப்புட்டுட்டேன்...ஒரு வாரிசத்தான...அத தர்றதுக்கு இத்தனை வருஷம் ஏங்க விட்டுருக்கா...
நீ என்னனு கேளு என் பெத்தாரு....
பெத்தாரு பெத்தாரு னு மாயக்கா சொல்லச்சொல்ல குழந்தை சிரித்தது...

சொந்தமில்லாத மாட்டுக்கு கால் புண்ணாயிருச்சேனு மஞ்ச  தடவி துணி கட்டி பாக்குறவ உன் அப்பத்தா...ஒன் அப்பன் என்னடானா நான் கொலைக்காரின்றான்....
என் பெத்தாரு நீயாடே......

கொஞ்சிக்கொண்ட மாயக்காளின் சத்தம் கேட்டு...அம்ம்ம்மாஆஆஆ எனக் கத்தியது வெளியிலிருந்து ஒரு வெள்ளைப் பசு...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நானுனக்கு...

பூ தொடுத்தல்

இது தம்மு...இது ரம்மு....