மதியப் பொழுதும் மழையும்

சாலையின் ஓரத்தில்
நின்றுகொண்டு 
மல்லிகைச் சாரத்தைக் 
காண்பித்தவளை
ஒருமுறை பார்த்துவிட்டு
இன்னொருபக்கம் 
உன்னையும் பார்க்கிறேன்...
சிரித்துக் காண்பித்த 
உன் மதியப் பொழுது...

நெடுஞ்சாலையின்
ஓரத்தைக் 
கிழித்துச் செல்லும்
தொடர்வண்டியைப் பார்த்து
கை நீட்டுகிறாய்..
உன் விரல் நுனியிலிருந்து
மழலையின் பேரானந்தமாய்
தொடர்வண்டி புகைகிறது...

அரளிப்பூக்கள் பூத்துக்கொண்ட
அந்தப் பாதையெல்லாம்
நீயும் நானும் 
முளைத்துக்கொண்டோம்
ஒரு 'நாமாக'

கைகள் கோர்த்துக்கொண்ட
அந்த மதியத்தின்
மத்திம பொழுதில்
ஒரு மழையும் 
நனைந்தது
நம்மை நனைத்து....

இப்படித்தான் 
அந்த நாளின் 
நாட்குறிப்பேட்டு பக்கம்
நனைந்திருந்தது
ப்ரியத்தின்
ஈர எழுத்துகளாய்....

பிறிதொரு நாளின் 
தனிப் பயணத்தில்
மல்லிகைச் சாரங்கள்
நெறிக்கின்றன
நீயற்ற தருணத்தின்
உன் வாசங்களை...

இருப்புப் பாதையில்
நீ காட்டிய
உன் விரலின் நுனி
இன்னும்
நிலை குத்தி நிற்கிறது
உன்னில்லாமையின்
இருப்பிற்குள்...

பூக்களைச் சுமக்கும்
சாபங்களை
ஏந்திக்கொண்டு
 மனத்தோட்டத்தின்
உன்மத்தச் செடிகள்
நின்று சாகின்றன....

நீயற்ற
நனைதலில்
அது 
வெறும் மழை...

அந்த மதியப்பொழுதும்
மழையும்
நீயென 
நாட்குறிப்பேட்டின்
பக்கங்கள்
தழும்பேற்றிக்கொண்டன.....

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நானுனக்கு...

பூ தொடுத்தல்

இது தம்மு...இது ரம்மு....