ப்ரிய சகி.....

ட்ரிங்..ட்ரிங்....

ஹலோ..சொல்லு..

என்னடா வேகமா பேசுற..

என்ன சொல்லு.
எங்க இருக்க...
வேலைக்குக் கிளம்பிட்டு இருக்கேன்.என்னனு சொல்லு
எங்க இருக்கனு சொல்லு...
ஏ..சொல்லு..லேட் ஆச்சு...

இவ்ளோ வேகமாலாம் என்ட்ட பேசவேணாம். வேலைய முடிச்சிட்டு கூப்பிடுடா..

டக்குனு கட் பண்ணிட்டா செல்வி.


செல்வி எப்போதும் இப்படித்தான். சில அல்ல பல சமயங்களில் ப்ரவீன் என்ன செய்வது என்பது அவனுக்குத் தெரியாத போது அவளது பார்வையில் அதை எடுத்துச் சொல்வாள். எடுத்துச் சொல்வது என்ன , தாறுமாறாக அதை ஆராய்ந்து கிளித்துத் தொங்க விடுவாள். அப்பொழுது தான் ப்ரவீனுக்குப் புரியும்

இப்பொழுது கூட அவளுக்கு அலுவலகம் செல்லும் வழியில் சிக்னலில் நின்ற போது  ஒரு துணிக்கடையில் வெளியே பொம்மைக்கு போட்டு வைத்திருந்த சட்டையில் தன் ப்ரியமானவனை ஒரு கனம் நினைத்துப் பார்த்து, அந்த சட்டை அவனுக்குப் பொறுத்தமாக இருக்கும் என கற்பனை பண்ண சட்டென சிக்னலில் யூ டர்ன் அடித்து அந்தக் கடையில் அந்த பொம்மையின் சட்டை உறுவச்சொல்லி வாங்கி விட்டாள். அதை அவனுக்குக் கொடுக்க வேண்டும். ப்ரியத்தின் சுனாமிதான் செல்வி. எக்கனமும் அவனை நினைத்துக்கொண்டிருப்பதால் கண் இமைப்பதற்குள் அவனுக்கு ஒரு சட்டை. இதை அவனிடம் சொல்ல வேண்டும். அவன் கையில் இதை கொடுக்க வேண்டும். இது தான் செல்வி.

ப்ரவீனுக்கு அப்படி இல்லை. ஒரு பன்னாட்டு கம்பெனியின் பொறுப்பான இஞ்சினியர். மார்க்கெட்டிங்க். ஊரில் பல தொழிற்சாலைகளின் மனித வள மேலாளர்கள் , புரொடெக்ஷன் மேனேஜர்களையெல்லாம் தன்னோடு கஷ்டமராய் மாற்றி பெரிய வெற்றிகளைக் கம்பெனியில் பெற்றுக்கொண்டிருப்பவன். செல்வி மீது ப்ரியம் தான். ஆனால் இப்போது அவனுக்காக ஒரு கஷ்டமர் காத்துக்கொண்டிருக்க இவன் தான் தாமதம் என்ற குற்ற உணர்ச்சி.

ஃபோனை டக்குனு கட் பண்ணதும் ப்ரவீனுக்குத் தெரிந்தது இன்று கிட்டத்தட்ட பெர்சனல்லைஃப்க்கு லீவு என்று. ஆம். செல்வியைச் சமாதானப் படுத்தும் வரை அவனுக்கு எதுவும் ஓடப்போவதில்லை.

வேகமாக வேலைக்குச் சென்றான். அந்த மேனேஜரைப் பார்த்து பேசி கிளம்ப ஒரு மணி நேரம் பிடித்தது. மெதுவாக வாட்ஸப் ஓபன் பண்ண செல்வியிடமிருந்து ஒரு மெசேஜும் இல்லை. முடிந்தது கதை. அவ்வளவு கோபமா இருக்கிறாள் என்று தான் அர்த்தம்.

அவளுக்கு ஃபோன் செய்தான். அவள் அதை கட் செய்தாள்.

ஒரு ரோஜாப்பூ எரிமலையாக இருப்பது அந்த கட் பண்ண தொணியில் தெரிந்தது.

. வாட்ஸப்பில் என்ன என ஒரு கேள்வி அனுப்பினாள்.

இவன் தன் குரலில் வாய்ஸ் நோட் அனுப்பினான்..

ஏ..பாப்பா ..ஏன் இப்ப கோபப்படுற. நான் வேணும்னு வேகமா பேசுவேனா. இன்னைக்கு பெரிய ஆர்டர். ஒரு ஃபேக்டரி மேனேஜர் வந்துட்டார் ஸ்பாட்டுக்கு. நான் தான் லேட்டு. அதான் வேகம்மா போயிட்டேன்...  கோபிக்காதடா பாப்பா...

இதை அனுப்பி விட்டு அவள் பார்க்கிறாளா எனக் காத்திருந்தான்.

பார்த்துவிட்டு ஒரு மெசேஜ் அனுப்பினாள். கோ அவே...என...

பிளீஸ் பாப்பா ...இவன் அனுப்பினான்..

அந்த மேனேஜரையே கட்டி அழு அவள் அனுப்பினாள்

ப்ரவீன் சிரித்துக்கொண்டான் . இலக்கியங்களில் சொன்ன ஊடல் அப்படித்தானே. தலைவியின் பொய் ஊடல்களை தலைவன் ரசித்துதானே போயிருப்பான்.

வேணாம் டி குட்டி. எனக்கு நீதான் வேணும். அவன் வேணாம்...இவன் அனுப்பினான்.

நான் வேணான்ம்னுதான தூக்கி எறிஞ்சுட்டு போன...அவனையே கட்டி அழு போடா..அவள் அனுப்பினாள்.

அவனை கட்டிக்க முடியாதுடி புஜ்ஜூ..அவன் குண்டா இருப்பான்.....ஊடலை பெருசாக்கினான் ப்ரவீன்..

அப்ப ஒல்லியா இருந்தா கட்டிப்ப?????? பத்து கேள்விக்குறிகளை அனுப்பினாள்.

நீ என் புஜ்ஜு குட்டி தான....இவன் அனுப்பினான்.

ஒரு மண்ணாங்கட்டியும் இல்ல...கெட் லாஸ்ட் என அனுப்பினாள். 

இந்த சேட் முடிய கிட்டத்தட்ட சாயங்காலம் நாலு மணி ஆகியது. அவள் சமாதானம் ஆகவில்லை எனத் தெரிந்தது.

ஆறரை மணிக்கு அவள் அலுவலகம் முடிந்து வெளியே வருவாள். சர்ப்ரைஸாக அவள் அலுவலகத்திற்குவெளியே நின்றான். 

நின்றுதானே ஆக வேண்டும். எந்த ஒரு திரைப்படத்திலும் சிறுகதையிலும் பொய் ஊடல்களை சமாதானப்படுத்த கதாநாயகிகள் கதாநாயகனின் அலுவலக கேட்டில் நிற்பது இல்லை. இருந்தாலும் குறைவு தான். 

ப்ரவீனுக்கு அதைப் பற்றியெல்லாம் சிந்தனை இல்லை. அவள் அலுவலக வாசலுக்கு விரைந்தான். காதலுக்காக இதைக் கூட செய்யாவிட்டால் என்ன இருக்கிறது.

ஒரு ஊடலை மறைக்க அல்லது மறக்க ஒரு மகிழ்ச்ச்யைத் தருவது தானே முறை. 

அலுவலக வளாகத்திலிருந்து வெஸ்பா வண்டியில் வெளியில் வந்தாள் செல்வி. 

ப்ரவீன் எதிரே நின்றதைப் பார்த்து அவள் ஒன்றும் காட்டிக்கொள்ளவில்லை. முகத்தைத் திருப்பிக்கொண்டு கிளம்பி விட்டாள். பின்னாடியே தன் யூனிகார்ன் பைக்கில் போனான். 

அது தான் நகரத்தின் ட்ராஃபிக் பீக் டைம். இவனுக்கு அது வசதியாக இருந்தது. 

பக்கத்தில் உரசுவது போல் நின்று வண்டியை நிறுத்தி நிறுத்தி போனான். அவள் திரும்பவே இல்லை. 
ஒரு சிக்னல் வந்தது. 
அவள் நின்றாள். 
நூல் பிடித்தபடி பக்கத்தில் போய் யூனிகார்னை நிறுத்தினான். 
அவள் கண்டுக்கவே இல்லை. 
 மேம் டைம் ப்ளீஸ் னு கேட்டான். 
இரண்டு உதட்டையும் மடித்துக்கொண்ட செல்வி திரும்பவே இல்லை.

வாயில என்ன வச்சுருக்க வெங்காய வடையா எனக் கேட்டான். 

ஏனென்றால் அவளுக்கு வெங்காய வடை மிகவும் பிடிக்கும் என்பதை விட என்னைத் திட்டுறப்ப உனக்கு வெங்காய வடை வாங்கிக்கொடுத்துட்டா நீ என்னைய திட்டாம அத திங்க ஆரம்பிச்சுருவ என்பது அவர்கள் இருவருக்கும் நடந்த ரொமென்ஸ் டயலாக்கின் அதிரிபுதிரி.

செல்வி வந்த சிரிப்பை அடக்கிக்கொண்டு சிக்னல் க்ரீன் விழ பறந்தாள். 
பின்னாடியே யூனிகார்னும்.

ஒரு கட்டத்தில் அவள் ஏரியா வந்ததும் எங்க ஏரியா ஒழுங்கா போயிரு..னு சொல்லிட்டு வெஸ்பாவைத் திருகினாள்...

அவன் கேட்கவில்லை.

செல்வி நேராக அவள் ஏரியாவில் இருக்கும் ஒரு ரொட்டிக்கடைக்குள் நுழைந்தாள். அது வெறும் ரஸ்க், பிரட் செய்யும் ரொட்டிக்கடை. அவள் குடும்பமே அங்கு வாங்கும். 

உள்ளே நுழைந்ததும் என்னமா செல்வி இப்பத்தான் அப்பா பிரட் வாங்கிட்டு போறாருனு கடைக்காரர் சொன்னார்...

அப்படியா அங்கிள்..பரவால இன்னொரு பாக்கெட் கொடுங்க..
இப்ப புதுசா கட் பண்ணிட்டு இருக்காங்க வெயிட் பண்ணுமா என அவர் சொல்லுவதற்குள் செல்வி வெளியே பார்த்தாள்.

பிரவீனும் கடைக்குள் வந்தான். 

என்ன சார் வேணும்... கடைக்காரர் கேட்டார்
சுற்றி சுற்றி பார்த்தாலும் வெறும் பிரட் மட்டும் இருந்தது. பிரட் பாக்கெட் என்றான். 
கடைக்காரர் டக்குனு அவனுக்கும் இவருக்கும் இடையே இருந்த மேஜையில் இருந்த பாக்கெட்டை கொடுத்தார். 
எவ்வளவு
ஐம்பது ரூபா..
நூறு ரூபாயைக் கொடுத்தான்.
அவர் கல்லாவிற்கு சென்று மீதியை எடுப்பதற்குள் செல்வியைப் பார்த்தான். 
அவள் இவனையே பார்த்தாள். 
என்ன என்னைய மட்டும் சொட்ட மண்டையன் வேகமா அனுப்புறான்னு கேட்டான்.
அவள் சிரித்துவிட்டு குனிந்து விட்டாள்.
இந்தாங்க தம்பி மீதி 50..

சுவற்றில் போடப்பட்ட பந்தாக திரும்பி வெளியே வந்து அவள் வெஸ்பாவிற்கு அருகில் நிறுத்தியிருந்த அவனது யூனிகார்னில் அமர்ந்துகொண்டு அவளுக்காக காத்திருந்தான்.

அவள் வந்தாள்.

மேடம் ஐம்பது ரூபா உங்களால நஷ்டம்...க்ளைம் கிடைக்குமா....என சீண்டினான்.

போயி அந்த மேனேஜர்ட்ட போயி கேளு...னு வக்கனையா தலையை ஆட்டிக்கிட்டே சொன்னாள்..
எங்கோ வளைந்த ஒரு லாரியின் மஞ்சள் நிறத்தில் அவள் சிமிட்டும் கண் மின்னியது..

உங்க கண்ணு நல்லாருக்கு மேம்...
தேங்க்யூ...கிளம்பட்டுமா..என பொய் கோபம் காட்டினாள்...

பிரட் வாங்கவா இவ்ளோ தூரம் வந்தேன் மேம்...என அப்பாவியா முகத்தை மாற்றி கேட்டான்..

சிரித்தாள்..

ஸாரி டி பாப்பா...காலைல கொஞ்சம் பிஸி என்றான்..

காலைல பண்ணிட்டு இப்பத்தான் உனக்கு ஸாரி கேட்க தோணுதுல.. போ..போ..உனக்கு இதான் பனிஷ்மெண்ட்...

எது பனிஷ்மெண்ட்....இந்த பிரட்..டா...எனக் கேட்டான்..

அவள் சிரித்துக்கொண்டே வண்டியை ஓட்ட ஆரம்பித்து ரியர்வியூ கண்ணாடியில் தெரியும் அவன் முகத்தை  கையால்  ஒரு முறை துடைத்தாள்...

அந்த சமிக்ஞை பறக்கும் முத்தத்தின் பின் நவீனத்துவம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நானுனக்கு...

பூ தொடுத்தல்

இது தம்மு...இது ரம்மு....