கொரோனாவும் இராமர் கோயிலும்

பழனிக்குமார்,
மதுரை.

பெரும் கார்ப்பரேட் கம்பெனிகளில் 'OWNERSHIP QUALITY' ஐ நிர்வாகத்தில் தலையிலிருந்து வால் வரைக்கும் இருக்கும்படி பார்த்துக்கொள்வர். அதுவே அவர்களது வெற்றிக்கு உறுதுணையாக இருக்கும்.

'OWNERSHIP QUALITY' என்பது வேறொன்றும் இல்லை, கந்தசாமி படத்தில் வடிவேல் கனவில், சாமி தோன்றி கம்பால் தன்னைத்தானே அடித்துக்கொள் என்று சொல்வார். வடிவேல் அப்படி அடிப்பார். சாமி போன பிறகும் அவர் அடித்துக்கொண்டே இருப்பார். அதிகப்படியாய் விசுவாசமாய் இருப்பதைக்காட்டிலும் அதிகப்பிரசங்கித்தனமான சுய விசுவாசக் கோளாறு அது.
அப்படியான 'OWNERSHIP QUALITY' யை நிர்வாகத்தின் எல்லோருக்கும் ஊட்டுவார்கள்.

அந்த உணர்வின் வழியாகக் கார்ப்பரேட் கம்பெனிகள் தங்களது குறிக்கோள் / விற்பனை / இலட்சியம் இவற்றைச் செயல்படுத்துவார்கள்.

உதாரணத்திற்கு மருந்து கம்பெனியில் திடீரென ஒரு நிதியாண்டின் தொடக்கத்தில் ஒரு மருந்தின் பக்கம் லைட்டைத் திருப்புவார்கள்.
இதை நாம் அதிகம் விற்கவேண்டும் என்பார்கள்.

'நோஞ்சான் அலுப்பு மருந்து ' என்று பேச்சுக்கு எடுத்துக்கொள்வோம். அதை அதிகம் விற்கவேண்டும். போகும் இடமெல்லாம் அதைச் சொல்லுங்க என்று தன் விற்பனை பிரதிநிதிகளிடம் சொல்வார்கள். அவர்களுக்கு அனுப்பும் சம்பளக் கடிதத்தில் 'நோஞ்சான் அலுப்பு மருந்து' என்று கவரில் போட்டிருக்கும்.

யாராவது காய்ச்சல் விடுப்பு வேண்டும் என்று மேலாளருக்குப் ஃபோன் செய்தால் , 'நோஞ்சான் அலுப்பு மருந்து குடிப்பா', என்று சொல்ல வைப்பார்கள்.

சும்மா ஒரு பேச்சுக்கு எப்படி சார் இருக்கீங்க என்றால், எனக்கென்ன 'நோஞ்சான் அலுப்பு மருந்து 'எடுக்கிறேன், நல்லாருக்கேன் என்று சொல்வார்கள்.

நோஞ்சான் அலுப்பு மருந்து பத்து வாங்கினால் ஒரு டம்ளர் ஃப்ரீ என ஏலம் விடுவார்கள்.
சந்திக்கும் அனைத்து வாடிக்கையாளர்களிடம் எல்லாம் , தான் ஃப்ரீயாகக் கொடுக்கும் ஒன்றுக்கும் ஒப்பேறாத டம்ளரைப் பற்றிப் பேசுவார்கள்.

வாடிக்கையாளனும் நம்மிடம் டம்ளர் இருக்கிறதே , இது எதற்கு என யோசிக்கவிடாதபடி பேசுவார்கள். விளைவு ஒருவன் ஒரு டம்ளருக்காக பத்து அலுப்பு மருந்துகளை வாங்குவான்.

டம்ளர் ஒரு கருவி. அதன் மூலமாக அலுப்பு மருந்தை விற்கவைப்பதே கார்ப்பரேட் சூத்திரம்.

டம்ளர் இல்லாவிட்டால் ஒரு அலுப்பு மருந்து பாக்கெட் கூட விற்காது. ஒரு டம்ளரில் முதலீடு செய்தால் எதுவும் நடந்திருக்காத விற்பனையில் பத்து மடங்காய் நிகழ்த்திக்காட்டலாம்.

அந்தவருடம் 'நோஞ்சான் அலுப்பு மருந்தைப்' பற்றிப் பேசிப்பேசி பிரதிநிதிகளும் பேசி ஒரு சதவீதமாவது விற்பனை கூடும். இதில் கார்ப்பரேட் கம்பெனியின் இலட்சியம் சும்மா விற்காமல் இருந்த ஒரு பொருளின் விற்பனையைக் கூட்டியிருப்பது.

முதலீடு குறைவு.
விற்பனை கூடுதல் அதன் மூலம் லாபம் அதிகம்.

இதில் "ஐகானிசம்" என்று ஒன்று இருக்கிறது.
யார் அதிகம் 'நோஞ்சான் அலுப்பு மருந்து 'விற்கிறாரோ அவருக்கு நம் கம்பெனி எம் டி யே நேராய் அவர் கையால் ஒரு சோப்பு டப்பா தருவார் என்பார்கள்.

கம்பெனி எம் டியை நேராய் பார்ப்பதே அபூர்வம்.
அவர் கையால் சோப்பு டப்பாவா என்று பிரதிநிதிகளின் நடுவில் இருந்து சில தயிர்சாதங்கள் உயிரைக்கொடுத்து வேலை பார்க்கும்.
அவர்களை அந்த கம்பெனி எம் எடி என்ற "ஐகானிசம்" வேலை பார்க்கவைக்கும்.

வியாபார நேர்த்தியில் இது எல்லாம் தவறு இல்லை என்றாலும் சில வீணாப்போன விஷயங்களுக்கு எல்லாம் ஐகானிசத்தைச் சில கார்ப்பரேட் கம்பெனிகள் பிரயோகிக்கும்.

இதை வேறுவிதமாகச் சொல்கிறேன்.

பிஜேபி கட்சிக்கு மதத்தின் பெயரால் சில பொறுப்புகள் உண்டு.
ஒன்று மதத்தை மக்கள் மனதில் ஊட்டுவது.
நல்லவிதமோ கெட்டவிதமோ எப்படியாவது மனதில் ஊட்டுவது.
அதற்கு எதையாவது செய்யவேண்டும். அதற்கு
அவர்கள் விற்கவேண்டிய பொருள் கிடைத்தது. அது "இராமர்".

பாபர் மசூதியை இடித்தார்கள்.
இராமர் என்ற பொருளை விற்க தன் அடிபொடிகளுக்கு மேற்சொன்ன 'OWNERSHIP QUALITY'யைப் பரப்பினார்கள்.

வாஜ்பாய் என்ற ஐகானிசத்தைப் பிரயோகப்படுத்தினார்கள்.

வாஜ்பாயின் தளர்விற்குப்பிறகு அழுத்தமான, காத்திரமான , வெளிப்படையாய் பொய் பேசத்தெரிந்த , மதத்தைப் பரப்ப மதவாதியாகவே வேண்டும் என்று பிஜேபியின் சகாதரி நிறுவனமான ஆர் எஸ் எஸ் விரும்பியது.

அப்படியான ஐகானிசத்திற்கு மோடி அமைந்தார்.

இல்லாத ஒன்றைக் கூறி அதையே நம்பவைப்பது ஃபாசிஸத்தின் முதல்படி. மோடி அதில் வெற்றிபெற்றுக்கொண்டிருந்தார்.
கசடு அற்ற வாய்ஜாலங்களாய் மேடையில் பேசும் வித்தை இருந்ததால் பிஜேபி , மோடி ஐகானிசத்தைக் கையில் எடுத்தது. இப்பொழுது இராமர் மற்றும் அதன் மூலம் மதம் இவற்றை விற்க பல வ்யூகங்கள் வகுக்கப்பட்டன.

அவர்களது குறிக்கோள், தமிழக திராவிடக் கட்சிகளைப்போல் கூட்டம் நடத்தி மக்களைக் கூட்டி மொழிப்போர் புரிந்து மொழி பெருமை பேசி, பகுத்தறிவு புகட்டி சமூக நீதியை மக்களுக்கு அறிவுறுத்தி அதன் மூலம் மக்களை ஈர்ப்பது அல்ல.

அன்றாடம் எழுந்து குளித்து வேலைக்குப்போகும்பொழுது அரசமரத்தின் அடியில் இருக்கும் பிள்ளையாரை நின்று வணங்கிச் செல்வானே சாமான்யன். அவன் தான் அவர்களது குறிக்கோள்.

உன் மதம் அழிக்கப்படுகிறது என்று அவனுக்குச் சொல்கிறார்கள்.
அவனும் முகலாயர்கள் ஆளும்பொழுது அழியாத நம் மதம், ஆங்கிலேய கிறித்தவர்கள் ஆளும்பொழுது அழியாத நம் மதம், நம் மதத்துக்காரர்கள் ஆளும்பொழுது எப்படி அழியும் என்று யோசிக்காதபடி அவர்கள் சொல்வதைக் கேட்கிறான்.

நம் சாமான்யர்களின் வெகுளித்தனம் பலவீனம். அது அவர்களது பலம்.
உங்களின் எதிரியிடம் பலமான ஆயுதம் எதுவும் இல்லாமல் இருக்கலாம். ஆனால் நீங்கள் பலவீனமாய் இருக்கிறீர்கள் என்ற போதே அவன் பலமாய் ஆகிவிடுகிறான். அந்த உளவியல் சூத்திரத்தில் தான் மோடி ஐகானிசத்தையும் இராமர் என்ற விளைபொருளையும் கலந்துகட்டி அரசியல் செய்ய ஆரம்பித்தது பிஜேபி.

அவர்களது இலட்சியம் பக்திமார்க்கமான, அமைதி மார்க்கமான ஒரு கோயில் கட்டுவது அல்ல.
உன் தெய்வத்திற்கு ஓர் ஆலயம் கட்டுகிறேன். உன் மதத்திற்கு பாதுகாப்பாய் இருக்கிறேன் என்று ஒரு குறிப்பிட்ட மதத்துக்காரர்களுக்கு அவர்கள் பிரச்சாரம் செய்கிறார்கள்.
வியாபார உத்தி இது.

ஒரு கிருமி மூலம் தேசமே தாக்குண்டு பொருளாதாரம் நலிவடைந்து போய்க்கொண்டிருக்கிறது. சைனா இது போன்ற ஒரு தருணத்தில் ஒரு மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை கட்டியது.
நம்மால் ஒரு கோயில் தான் கட்டமுடிகிறது.
அதுவும் இன்னொரு கோயிலை இடித்து.

உண்மையில் இராமர் கோயில் கட்டுவது கூட அவர்களது இலட்சியம் அல்ல. இராமர் என்பது ஒரு கருவி.
நாளை வேறு ஏதாவது கருவியை எடுப்பார்கள்.
மொழிக்கு சம்ஸ்கிருதத்தை எடுத்தது போல்.

கொரோனா கிருமி உள் நுழையும்பொழுது ஒரு சாதாரண கிருமி போன்று தான் அமைதியாக இருக்கும். ஒரு வாரத்திற்குப்பின் சாதாரண கிருமி அதனளவில் செயலிழந்து போகும். ஆனால் கொரோனா ஒரு வாரத்திற்குப்பிறகுதான் தன் வேலையைக் காட்டும். அப்படித்தான் பிஜேபி.

சாமான்யர்கள் ஒன்றை மட்டும் மறுபடியும் மறுபடியும் யோசிக்கவேண்டும்.

பிஜேபியினரிடம் மதம் தவிர்த்து, சீன பாகிஸ்தான் பகை தவிர்த்து பேச அவர்களுக்கு ஏதாவது இருக்குமா என்பது.

கொண்டு வந்திருக்கும் சுற்றுச்சூழலியல் திருத்தத்திற்கும், புதிய தேசிய கல்விக்கொள்கைக்கும் எதிர்ப்பு வலுக்கையில், நியாயமான தர்க்க ரீதியான பதில் பிஜேபியினரிடம் வருகிறதா என்று அவர்கள் யோசிக்க வேண்டும்.

ஒரு கோயில் கட்ட அரசாங்கம் தலைப்படுவது போல் ஒரு மருத்துவமனைக்காக ஏன் தலைப்படுவது இல்லை. மதுரை எயிம்ஸ் போன்ற அடிக்கல் ஊன்றப்பட்ட பல மருத்துவமனைகளை ஏன் அரசாங்கம் செய்வதில்லை என யோசிக்கவேண்டும்.

எந்தத் தொந்தரவும் அற்று நாமாகவே வழிபட்டுக்கொண்டிருக்கும் இராமர், முருகன் கடவுள்களுக்கு ஏன் எதுவும் இப்பொழுது ஆபத்தா என்று யோசிக்கவேண்டும்.

சாமான்யன், பிஜேபியினரின் ஆணிவேர்களைப் பிடித்து கருப்பணசாமிக்கும், மாடனுக்கும், மதுரை வீரனுக்கும் சேர்த்து கொடி பிடியுங்கள் என்று சொல்லிப்பார்க்கவேண்டும்.

மக்களும் பொருளாதாரமும் முடங்கிக் கிடக்கும் சூழ்நிலையில் தேசத்தின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர், ஒரு குறிப்பிட்ட மதத்திற்கான அடையாளத்திற்காகத் தன் வேலையை விட்டு பஜனை என்றும் பொங்கல் என்றும் அமர்ந்திருப்பது தேவையற்ற ஆணி.

டிஸ்கி: ஒரு கார்ப்பரேட் கம்பெனியைப் பற்றிப் பேசிவிட்டு பிஜேபி பற்றி பேசியதற்குக் காரணம், நம்மை அடிமைப்படுத்தியது கூட கிழக்கிந்திய கம்பெனி என்ற அரசியல் நிறுவனம் தான்.
மதத்தை , வியாபாரத்துடன் ஒப்பிட்டு எழுதியதற்குக் காரணம், இரண்டிற்கும் ஒரே நோக்கம் வியாபாரச் சந்தையும் , மந்தை வாடிக்கையாளர்களும் தான்.
நன்றி. வணக்கம்.
பழனிக்குமார், மதுரை.





கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நானுனக்கு...

பூ தொடுத்தல்

இது தம்மு...இது ரம்மு....