அசோகமித்திரனின் 'அப்பாவின் சிநேகிதர்' தொகுப்பை முன் வைத்து...

பழனிக்குமார்
மதுரை.

அசோகமித்திரன் எழுதிய " அப்பாவின் சிநேகிதர்" தொகுப்பை முன்வைத்து.

மொத்தம் ஒன்பது சிறுகதைகள், இரண்டு குறு நாவல்கள். 
சாகித்ய அகாதெமி விருது பெற்ற நூல்.

கடந்த செப்டம்பர் மாத புத்தக கண்காட்சியில் நற்றிணை பதிப்பகத்தில் இதைப் பார்த்ததும் வாங்கியாகிவிட்டது. அசோகமித்திரனின் எழுத்துகளை அவ்வப்போது முகநூலிலோ , இணையத்திலோ ஆங்காங்கே படித்ததுண்டு. அசோகமித்திரனின் தொகுப்பாக இது தான் எனக்கு முதல் புத்தகம். ஒவ்வொரு எழுத்தாளரும் ஒரு தொகுப்பிற்கோ அல்லது எழுதிய பல நூல்களுக்கோ பெயர் பெற்றவராயிருப்பார். நண்பர் ஒருவரிடம் அசோகமித்திரனின் எழுத்துகளைப் படிக்கவேண்டும் எதை எதையெல்லாம் படிக்கலாம் என்று கேட்டபோது இந்த 'அப்பாவின் சிநேகிதர்' ம் சொல்லியிருந்தார். 

தொகுப்பில் அடங்கியுள்ள அனைத்துக் கதைகளும் 1990 காலகட்டத்தில் எழுதப்பெற்றவை என்று குறிப்பு சொல்கிறது. பெரும்பாலான காட்சி அமைப்புகள் ஹைதராபாத்தை மையமாக வைத்தும் சில இடங்கள் சென்னையை மையமாக வைத்தும் எழுதப்பட்டிருக்கின்றன. தொடர் வாசிப்பனுபவத்தில் நமக்குக் கிடைப்பது வேகமாகக் காட்சியமைப்பிற்கு நம் மனதிற்குள் நம்மால் காட்சிகளைப் பார்க்கமுடியக்கூடிய அனுபவம் தான். ஒரு கதையின் வெற்றி, வாசகனுக்குக் கொடுக்கும் அந்த visualisation விகிதம் தான். 

என்னைப்போல் மதுரை மாதிரியான பெருங்கிராமத்தில் வசிப்பவனுக்கு லான்சர் பாரக்ஸ்ஸை அப்படியே மன ஓட்டத்தில் கொண்டுவருவதில் சில சிக்கல்கள் இருக்கின்றன. எழுத்து என்பது அது தானே. காணாததைக் காண வைப்பதும், உணர்வதற்கு வாய்ப்பு இல்லாத தருணத்தில் உணரவைப்பதும் ஏற்கனவே உணர்ந்த அனுபவத்தை மீட்டெடுக்கவைத்தலும் தானே. 

'அப்பாவின் சிநேகிதர்' உங்களுக்கு ஆர்ப்பாட்டமாய் எதையும் சொல்லாது . இதை நான் இந்தப் புத்தகத்தை அணுகிய விதத்தில் சொல்வதாய் எடுத்துக்கொள்ளலாம். நமக்கு ஆர்ப்பாட்டமாய் எதையும் சொல்லாவிட்டாலும் பல அதிர்வுகளைத் தருகிறது இந்தத் தொகுப்பு. 

ஒரு கதைசொல்லி , தன் அப்பாவை அறிமுகப்படுத்தும் எட்டு வரிகளில் முதல் வரியில் அப்பாவின் தொழிலும் பாசமும் என ஆரம்பித்து கடைசி எட்டாவது வரியில் அப்பாவின் மூச்சு நின்றது என்று முடிக்கிறது. எதிர்பாராத ஒரு திருப்பத்தைக் கதையின் முடிவில் தான் தரவேண்டும் என்றில்லை. கதைக்கு நடுவே கூடத்தரலாம். 

தன் முன்னுரையில் , சில சமயங்களில் சில கதாபாத்திரங்களும் சில சம்பவங்களும் வெவ்வேறான கதைகளில் வெவ்வேறானக் கண்ணோட்டத்தில்  தன்னை மீறி வந்துவிடுகிறது என்று அசோகமித்திரன் குறிப்பிட்டுள்ளார். ஒரு கதை அதனளவில் கதைக்கான அனுபவத்தைத் தந்துவிட்டால் இழப்பு எதுவுமில்லை என் கிறார். அப்படியான ஒரு இன்ஸ்பெக்டர் இரண்டு மூன்று இடங்களில் வருகிறார். தான் பார்த்துப் பிரமிக்கும் சில தனி நபர்கள் நம் சமூகத்தில் கூட இருப்பார்கள். ஒருகட்டத்தில் இவருடன் பழகினால் என்ன என்று ஆசைப்படுவதோடு சில தனி நபர்கள் நின்றுபோகிறார்கள். நாவலாசிரியர்களும் கதாசிரியர்களும் தான் அங்கு நின்றுபோகாமல் அந்த இடத்திலிருந்துத் தன் புனைவுகளை அவிழ்க்கிறார்கள். 

ஒரு சிறுவன் மீது திடீரெனத் தன் அன்பைக் காட்டத் துவங்கும் ஒரு லாரி டிரைவர், 
தன் உறவுக்காரச் சிறுவனின் நண்பனான இன்னொரு சிறுவனிடம் பாசத்தைக் காண்பிக்கும் ஒரு இன்ஸ்பெக்டர், இப்படி தொகுப்பு முழுக்க ஒரு சாமான்யன் தான் வாழும் வாழியல் முறைக்கு ஆதாரமாய் இருக்கும் பிரியங்களை வழங்க சில நபர்கள் முளைக்கிறார்கள். காரண, காரியமின்றி சாமான்யன் வாழ்விற்குள் வெறும் பிரியத்தின் வழியே வருபவர்கள் பாதியிலேயே நின்று போகும் எதார்த்தச்சூழலும் ஆவணப்படுத்தப்படுகிறது. 
எந்த நோக்கமும் இன்றி ஒருவன் இன்னொருவனுடன் பழகும் வாய்ப்புகளற்ற சமூகத்தில் இருந்துகொண்டு முப்பது வருடங்களுக்கு முன் ஆவணப்படுத்தப்பட்ட ஒரு கடந்த கால கதைக்குள் , இரு தனி நபர்களுக்கு இடையேயான உறவு , வெறுமனே பிரியத்தின் அச்சில் இயங்குகிறது என்பதைப் படிக்க, வாழ்வின் மீதான அழகியல் நோக்கை இன்னும் ஸ்திரமாக்குகிறது. 

ஒரு புத்தகம் படிப்பதில் நாம் உணர்வதற்குப் பல விசயங்கள் இருக்கலாம். அது அவரவர் புரிதல் மற்றும் வாசிப்பனுபவங்களை அடிப்படையாக வைத்து மாறுபடும். 

'அப்பாவின் சிநேகிதர்' பெரும் வாசிப்பனுபவத்திற்குப் பின் உணரப்படும் ஒரு கருப்பு வெள்ளை காலத்தின் வண்னமயமான உணர்வுகள் கொண்ட மனிதர்களின் வாழ்க்கை. 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நானுனக்கு...

பூ தொடுத்தல்

இது தம்மு...இது ரம்மு....