அருணன் எழுதிய ' தமிழ் இலக்கிய (வழி) வரலாறு நூலை முன்வைத்து..

வசந்தம் வெளியீட்டகம் வாயிலாக , அருணன் எழுதிய ' தமிழ் இலக்கிய (வழி) வரலாறு' நூலை முன்வைத்து....

பழனிக்குமார்
மதுரை.

கால ஓட்டம் என்பது பத்தாண்டுகளாக, இருபது ஆண்டுகளாக, நூற்றாண்டுகளாகப் பிரிக்கப்படுகிறது. அதனூடே வரலாற்று நிகழ்வுகளாக அரசியல் மாற்றங்கள், புரட்சிகள் நிகழ்கின்றன. ஒவ்வொரு காலகட்டத்திலும் நியாய அநியாய தர்க்க மோதல்கள் நிகழ்ந்திருக்கின்றன. நிகழவும் செய்கின்றன. 

தமிழ்மொழியின் இலக்கியங்களின் வாயிலாக அவற்றைப் படைத்த புலவர்கள், கவிஞர்கள் அவரவர் காலத்து அழகியலை, துன்பியலை ஆவணப்படுத்தியிருக்கின்றனர். 
ஒரு பருவத்து தர்க்க மோதல்கள் அடுத்த பருவத்திலும் தொடர்கின்றன. 
அப்படியான தர்க்க வாதங்களில் கலந்துகொள்வோர் குறிப்பாக நியாயத்தின்பால் நிற்போர், அறம் பேசுபவர் கடந்த கால அறத்தின் சிந்தனைப் போக்குகளையும் அதற்கு மாற்றாய் விளம்பிய தர்க்கங்களையும் அறிந்துகொள்ளவேண்டும். திராவிடர் கழக அரசியல், கம்யூனிச சித்தாந்த அரசியல் காலகட்டம் தலைதூக்க ஆரம்பிக்கையில் அதன் தொண்டர்கள் மேற்கொண்ட வாசிப்பனுவ வாழியல் முறை அவர்களது நியாயம்சார்போராட்டங்களுக்கு வலு சேர்த்தது. 
நாம் கடந்துவந்த வரலாறை நம் மொழி இலக்கியங்களின் வழி தெரிந்துகொள்வது என்பது இன்றைய காலகட்டத்தில் அத்தியாவசியமானது. 

அருணன் எழுதிய ' தமிழ் இலக்கிய வழி வரலாறு" என்ற கட்டுரை தொகுப்பு கிட்டத்தட்ட ஓர் ஆய்வு நூல் . மதத்தின் வாயிலாக , மொழியின் வாயிலாக அரசியல் செய்யப்படும் இன்றைய காலகட்டத்தில் நம் இலக்கியங்கள் பதிவு செய்திருக்கும் கடந்தகால வரலாற்று நிகழ்வுகளை நாம் தெரிந்துகொள்ள இதுபோன்ற நூல்கள் உதவிடலாம்.

இந்தத் தொகுப்பின் முதல் பத்து பக்கங்கள் தமிழ் இலக்கியத்தின் அழகையும் கவிஞர்களின் கற்பனை வளத்தையும் சொல்லிச்செல்கிறது. அருணனின் தனித்தன்மை தெரியவில்லை என்ற குழப்பம் எழலாம். ஆனால் சங்க இலக்கியங்களின் காலத்தையும் அதற்குப் பின்பான களப்பிரர் காலத்தையும் பிரித்து அந்தந்தக் காலத்தில் நிலவிய மதச் சண்டைகளையும் சாதிப் பிரிவுகளையும் ஆங்காங்கே நிலவிய சமத்துவச் சிந்தனைகளையும் பெரும் திரட்டாக அருணன் தந்திருக்கிறார். 

இலக்கிய வனப்பு, சாதி பிரிவு, மத மோதல், நீதிநெறி காலம் சமத்துவச் சிந்தனை என ஒவ்வொரு காரணியாக எடுத்து அந்தக் காலத்தில் நிலவிய சூழலை இலக்கியங்களைக் கொண்டு ஆதாரத்துடன் பேசியிருக்கிறார். 
தமிழகத்தில் அந்தணர், அரசர், வைசியர் , உழவர் என்ற அடிப்படையில் பாகுபாடு இருந்திருக்கிறது. அப்படி நால்வர்ண சாதிப்பாகுபாடு இருந்தாலும் புறநானூற்றுப் பாடல் ஒன்றில் சமத்துவச் சிந்தனையும் பாடப்பட்டிருக்கிறது என்று ஆதாரத்துடன் அருணன் சொல்கிறார். 
இந்தியாவிலேயே இன்றும் கூட பல்வேறு சாதிப்பாகுபடுகளுக்கு நடுவிலும், மதச்சண்டைகளுக்கு நடுவிலும் தமிழகத்தில் தான் சமத்துவச் சிந்தனையும் சமூக நீதிக்கான குரலும் ஓங்கி ஒலிக்கிறது என்றால், இது நம் முன்னோர் நமக்குச் சொல்லிக்கொடுத்த பாடம் அல்ல. இது ஒரு வாழியல் முறை. 

சங்க இலக்கியங்களின் காலத்தில் "மதம் என்பது இயற்கையைக் கண்ட மனிதனது அச்ச உணர்வின் வெளிப்பாடாய்த்தான் இருந்ததேயொழிய அது ஒரு தத்துவ நிலைப்பாட்டை எட்டாமல் இருந்தது." 
அதாவது சங்க இலக்கியங்களின் காலத்திற்குப் பின் களப்பிரர் காலத்தில் தான் 'ஆத்மா-பரமாத்மா' கூத்துகள் அரங்கேறியுள்ளன என்று அருணனின் கட்டுரைகள் வாயிலாக நாம் தெரிந்துகொள்ளலாம். 
ஆத்மா-பரமாத்மா என்பது தத்துவ நிலை. மதம் எப்பொழுது ஒரு தத்துவ நிலையைப் போதிக்காமல் அதாவது கொள்கைவழி பேசாமல் இருக்கிறதோ அப்பொழுது அதனால் ஒரு நிறுவனமாக மாறவில்லை. அது தான் நம் தமிழ் சங்க இலக்கியங்களின் காலம். 
(கீழடியில் தோண்ட தோண்ட கிடைப்பதில் கூட எந்த தெய்வ வழிபாட்டு உருவங்களும் கிடைக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.)

சங்க இலக்கியங்களான எட்டுத்தொகை, பத்துப்பாட்டில் மத நம்பிக்கைப் பாடல்கள் மிகக் குறைவாக இருப்பதும் மதம் பெரிய பேசுபொருளாக அப்பொழுது இல்லை என்பதைப் புரிந்துகொள்ள இந்தக் கட்டுரைகள் உதவுகின்றன. 

சங்க இலக்கிய காலத்திற்குப் பின் காலங்களில் நான்குவர்ண சாதிகளில் மூன்றாம் வருணத்தவரான வைசியர்களின் கை ஓங்குகிறது. வியாபாரம் செழிக்கும் காலம் உருவெடுக்கிறது. அவர்கள் தங்களது செழிப்பால் உரிமை கேட்டிருக்கலாம். அதனால் தான் சங்க இலக்கிய காலத்திற்குப் பின் உருவான சிலப்பதிகார மணிமேகலையில் முக்கிய கதாபாத்திரங்கள் வணிகர்களாக இருக்கிறார்கள். அரசனும் ஆசைப்படும் வணிகன் எனச் சிலப்பதிகாரம் பாடுகிறது. 
அதன் பின் வரும் மணிமேகலை, பெண்ணடிமை இருந்த காலகட்டத்தில் வந்த ஒரு புரட்சி காவியம். அது மட்டுமல்ல தமிழ் இலக்கியத்தில் வந்த முதல் சமய இலக்கியம். 
மதுரை என்றதும் ஒரு தோழர் என்னிடம் கேட்டார், மதுரையில் தானே சமணர்களைக் கழுவேற்றிக் கொன்றது என்று. உண்மை தான். இன்னொரு உண்மையும் இருக்கிறது என்பதை  இந்தப் புத்தகம் படிக்கும்பொழுது தெரிந்துகொண்டேன். 
தாங்கள் வாழ்ந்துவந்த பகுதியில் பஞ்சம் தலை தூக்க மதுரை பாண்டியனிடம் எண்ணாயிரம் சமணர்கள் தஞ்சம் அடைகிறார்கள். அடைக்கலம் தருகிறான். பஞ்சம் தீர்ந்ததும் சமணர்கள் சொந்த ஊர் திரும்ப முடிவுசெய்கிறார்கள். அவர்களைப் பிரிய பாண்டியனால் முடியவில்லை. அவர்கள் ஆளுக்கொரு பாடல் எழுதிவைத்துவிட்டுச் செல்ல, அவற்றை வைகை நதியில் வெறுப்பில் வீசுகிறான் பாண்டிய மன்னன். நானூறு கவிதைகள் எதிர்நீச்சல் போட்டு கை சேர்கின்றன. அவையே நாலடியார் என்ற இலக்கியம். ஆக, நாலடியார் சமணர்களால் இயற்றப்பட்டது. 

சில சுவாரஸ்யங்கள் இந்தப் புத்தகத்தின் கட்டுரைகளில் தெரிந்துகொள்ளலாம். வணிகர்களின் காலம் ஓங்க அவர்கள் புலம்பெயர்ந்து வரப்போக, சமண பௌத்த போஷகர்களாக மாறுகிறார்கள். அதற்கானச் சான்று இலக்கியங்களினூடே இருக்கிறது. இன்று பசுவதை க்கு எதிராகக் குரல் கொடுப்போர் உண்மையாகவே பசுவின் மீதான அக்கறை காரணமாகக் குரல் கொடுப்பதில்லை. மதத்தின் அடையாளமாய் பசுவை ஆக்கி, மத ஆதிக்கமாகவே செயல்படுகிறார்கள். ஆனால் அந்தக் காலத்தில் அந்தணர்களே மாமிசம் சாப்பிட்டு இருக்கிறார்கள்.அதுவும் பசுவை.

மணிமேகலையில் வேள்வி முடிந்ததும் ஒரு மாட்டை அடித்துச் சாப்பிட அந்தணர்கள் வைத்திருக்க சமண மதத்தைச் சார்ந்த ஒருவன் அதைக் காப்பாற்றிப்போவதாகக் கதை போகிறது.  பிறகு எப்படி வைதீக மதங்களான சைவம் , வைணவம் எப்படி அசைவம் சாப்பிடாதவர்களாக மாறியது என்போருக்கு இன்னும் சுவாரஸ்யம் இருக்கிறது. அத்தனை சுவாரஸ்யங்களும் பல ஆதாரங்களுடன் இந்தத் தொகுப்பில் கட்டுரைகளாக உள்ளன. 
 
அப்படியான இன்னொரு சுவாரஸ்யம் மூன்று கட்டுரைகளாக உள்ளதைச் சுருக்கமாகச் சொல்கிறேன்.  ஏழாம் நூற்றாண்டு தமிழகம் மொத்தமாய் இரண்டு பேரரசுகள் தான் ஆள்கின்றன. வடக்கே பல்லவ அரசு. தெற்கே பாண்டியப் பேரரசு. 
பல்லவன் கதைக்கு வாருங்கள். சிம்மவிஷ்ணு அரசன் ஒரு வைணவன். அவன் மகன் மகேந்திரவர்மன் ஒரு சமண மதத்துக்காரன். இவனது காலத்தில் திருநாவுக்கரசர் . அவர் ஒரு சமணர், ஆனால் சிவன் அருளால் சைவராகக் கதை மாறுகிறது. சைவ மதத்திற்கு மாறியபிறகு தான் கூத்து அரங்கேறுகிறது. திருநாவுக்கரசரும், அவரது தமக்கையும் தங்கள் நோயை சமண மதம் ஆற்றவில்லை என்று சைவத்திற்கு மக்களைத் தன் தமிழால் இழுக்கிறார்கள். இதனால் சமண மதத்துக்காரர்கள் மன்னனை ஏவி திருநாவுக்கரசர் மீது நடவடிக்கை எடுக்கச்சொல்கிறார்கள். 
மகேந்திரவர்மன் தான் வரலாற்று சாட்சி. தமிழகத்தில் மதத்தின்பெயரால் அரசாங்கம் இறங்குவதற்கு. 

பெரியபுராணத்தில் கூறும் இந்த வரலாற்றின்படி மகேந்திரவர்மனால் திருநாவுக்கரசரை ஜெயிக்கமுடியவில்லை. மன்னனே சைவத்திற்கு மாறுகிறான். மாறியவன் சமணர்களை அழிக்கிறான்.சமணர்களின் கோயிலை இடிக்கிறான். ஒரு கோயிலை இடித்து இன்னொரு கோயிலைக் கட்டியது வரலாற்றில் நடந்திருக்கிறது. சைவ மதம் செய்ததாக ஆவணம் சொல்கிறது. மதத்தைப் பரப்ப எளிய தமிழைப் பிரயோகப்படுத்தியவர் நாவுக்கரசர். (இங்கே கிறித்தவர்களையும், இஸ்லாமியர்களையும் மதத்தைப் பரப்புகிறார்கள் என்று வீண் பழி சுமத்துவோர் கூட ஒரு காலத்தில் மதமாற்றத்திற்கு உட்பட்டு வந்தவர்களின் வழித்தோன்றல்கள் தான் என்பதை வரலாறு சொல்கிறது)

வடக்கே மன்னனை மாற்றி மக்களையும் மாற்றியது போல் தெற்கே யார் இருக்கிறார் என்று எட்டிப்பார்த்தனர். 

பாண்டிய பேரரசின் கூன் பாண்டியன் என்ற நெடுமாறன். இவனும் சமணன். இப்பொழுது வந்தவர் திருஞானசம்பந்தர். 
மதமாற்றத்திற்கு வந்தவரை அழிக்க ஏற்கனவே மத ஆதிக்கத்தில் இருந்த சமணர்கள் அவர் இருக்கும் இடத்திற்கு தீ வைக்க, சம்பந்தர் கோபப்பட்டு மன்னன் மீது வெப்பு நோயை உருவாக்க, மன்னன் உடலைப் பாதிப்பாதியாகப் பிரித்து சமணர்களும், சைவரும் சிகிச்சை அளிக்கிறார்கள். சம்பந்தரின் சைவ மதம் சிகிச்சை அளித்த மன்னனின் உடல் பகுதி சரியாகிறது. சிவபெருமானால் எல்லாம் முடிகிறது என்பதை நம்ப வைக்கும் படலம் அது.

பிறகு அனல்வாதம், புனல்வாதம்என்றும் நாங்கள் தோற்றால் எங்களை மன்னன் கழுவேற்றலாம் எனச் சமணர்கள் உளறுகிறார்கள். சம்பந்தர் ஜெயிப்பதாகவும், எண்ணாயிரம் சமணர்களைக் கழுவேற்றுகிறான் மன்னன் என பெரியபுராணத்தில் வருகிறது. 

மதப் பிரச்சாரத்திற்கு வந்தவர்கள் தான், அதனால் தான் தங்கள் இலக்கியத்தில் சமண மதத்தைத் தாக்கி எழுதியிருக்கிறார்கள். பக்தி இலக்கியத்தில் கோலொச்சும் தமிழ் புலவர்களே மற்ற மதத்தைத் திட்டி எழுதியிருக்கிறார்கள். 

இப்பொழுது கதைக்கு வாருங்கள், வைதீக மதத்துக்காரர்கள் ஏன் சைவம் சாப்பிட  மாறினார்கள். 

மதத்தின்பால் மக்களை இழுக்க எல்லாச் சமயங்களும் முனைந்தாலும்,  சங்க இலக்கியத்தில் இருந்த நால்வர்ண சாதிப்பாகுபாடு மக்களைத் துன்புறுத்தியது. சங்க இலக்கியத்தின் பின்  களப்பிரர் காலத்தில் வைசியர்கள் தலைதூக்க வணிகம் செழிக்க சமண பௌத்த மதத்தில் எல்லோரும் சமம் என்ற நிலைப்பாடு கவர்ச்சியாக அடிமைப்பட்டோருக்குத்தெரிகிறது. இந்த மதத்தில் அடிமைப்பட்டுக்கிடப்பதற்குப் பதிலாக அந்தச் சமத்துவத்தைப் போதிக்கும் மதம் போகலாம் என மக்கள் மதம் மாறுகிறார்கள். 

வியாபாரம் செழிக்க , செல்வம் ஒரு பக்கம் குவிய ஒரு பக்கம் வறுமை வர என இன்னொரு ஏற்றத்தாழ்வு வருகிறது. இப்பொழுது ஆண்டைகள் உருவாகிறார்கள். அவர்களுக்கு அடிமைகள் வேண்டும். அதற்குச் சாதி வேண்டும். அதைப் பயன்படுத்த வேண்டும். வைதீக மதங்களில் அதற்கு வழி உண்டு.
சைவ வைணவ மதப் பிரச்சாரர்கள் வருகிறார்கள். ஆண்டைகள் சைவ வைணவ வைதீகத்திற்கு  வருகிறார்கள். தொழிலதிபர்கள் மாறிய பின் மன்னன் மட்டும் கொக்கா, மாறுகிறான். 

இல் வாழ்க்கை வேண்டாம் என முடியும் சமண பௌத்த மதங்களின் மீது மக்கள் சிலர் அதிருப்தி வைத்திருந்தனர். இல் வாழ்க்கையில் இருந்துகொண்டே தெய்வத்தைத் தொழலாம் என்ற சூத்திரத்தை சுந்தரர் மூலமாக சைவ மதம் முன்மொழிகிறது. (சுந்தரருக்கு இரு மனைவிகள் ) . காதல் ரசத்தில் வைணவத்தைக் கேட்கவே வேண்டாம். 

அசைவம் சாப்பிடாமல் இருப்பது  ஒரு வித கருவி என்று பட்டிருக்கலாம். வைதீக மதமும் சைவம்  சாப்பிடுவோர் என ஆகிப்போகிறது. மக்களைக் கவர தன்னை உருமாற்றிக்கொண்ட மதங்கள் தான் அவை. 

ஏழாம் நூற்றாண்டில் இருந்து இருபதாம் நூற்றாண்டு வரை இந்தக் கருத்து உருமாறி வருவதை இருபது வரிகளில் சுருங்கச் சொன்னால் இப்படித்தான் வரும். 

இன்றைய காலகட்டத்தில் நாம் தெரிந்துகொள்ளவேண்டியது, மதத்தை ஒரு போகப்பொருளாகவே பாவித்து ஒரு கூட்டம் இருந்துவந்திருக்கிறது. மதத்தைப் பரப்ப பல வழிகளை அந்தக் கூட்டம் கண்டிருக்கிறது. சமத்துவச் சிந்தனையை அழிக்கும்பொருட்டு சாதிப்பாகுபாட்டை ஒரு கூட்டம் ஆதரித்துக்கொண்டு இருந்திருக்கிறது. இந்தநிலை வேறு வேறு உருவங்களில் இன்னும் தொடர்ந்துகொண்டு தான் இருக்கிறது. 

இலக்கியங்கள் நம் மொழியின் நீண்ட பின்னோக்கிய வாழ்வியல் சூழ்நிலைகளை மட்டும் ஆவணப்படுத்தவில்லை. அப்போதிருந்தச் சமுதாயச் சிக்கலையும் அதற்கு அந்தந்தக் காலத்தில் நிலைபெற்ற சமத்துவச்சிந்தனையையும் ஆவணப்படுத்தியிருக்கிறது. 
இலக்கியங்களில் லயிப்போருக்கும், வைதீக - சமண மத மோதல்களைப் படிக்க விரும்புவோருக்கும் இந்தப் புத்தகம் சுவாரஸ்யத்தைத் தரும்.



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நானுனக்கு...

பூ தொடுத்தல்

இது தம்மு...இது ரம்மு....