'வைன் என்பது குறியீடல்ல...' - தேவசீமா கவிதைத் தொகுப்பை முன்வைத்து
'வைன் என்பது குறியீடல்ல'
தேநீர் பதிப்பகம் வாயிலாக கவிதாயினி தேவசீமா எழுதிய கவிதைத் தொகுப்பை முன்வைத்து.
கவிதைக்கான வாசகர்கள் அருகி வரும் இக்காலகட்டத்திலும் தொடர்ச்சியாகக் கவிதை தொகுப்புகள் வருவது , கவிதை மீதான பிடிப்பையும் கவிதைகளுக்கான இருப்பையும் அவற்றிற்கானத் தேவையையும் தான் காண்பிக்கின்றன.
ஒரு சிறுகதை, ஒரு நாவலை அணுகுவது போன்று ஒரு கவிதையை அனைவராலும் அணுகமுடியாது என்றே ஒரே காரணம் தான் கவிதைக்கான வாசகர் வட்டம் குறுகியிருப்பதன் காரணம். மொழி மீது பிடித்தம் உள்ளவர்கள் இதில் முரண்படுவார்கள். காரணம், ஓர் ஒற்றைச் சொல்லில் தொலைந்துபோவதற்கும் ஒரு வாக்கியத்தில் லயித்துப்போவதற்கும் கவிதைகள் தான் வழி தருகின்றன. கவிதை நேசர்களுக்கு அந்த இலகு சாத்தியப்படும்.
'வைன் என்பது குறியீடல்ல' என்பது சமகாலத்தில் சமூக வலைதளத்தில் தொடர்ந்து இயங்கிக்கொண்டிருக்கும் கவிஞர் தேவசீமா அவர்களின் தொகுப்பு. சமகால அவதானிப்புகள், சமகால வலிகள் , சமகால உணர்வுகள் என 'வைன் என்பது குறியீடல்ல' தொகுப்பில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.
ஒரு காட்சியைக் கவிதையாக்குவதை விட காட்சியைக் காணும் கனத்தில்/ கணத்தில் நேரும் மனப்பிறழ்வுகளை அல்லது உள்ளுக்குள் நேரும் உள -ரசவாதத்திற்கு மொழி கொடுத்து ஒலி வடிவமாக்குவது தான் கவிதையின் உள்ளார்ந்தக் கட்டமைப்பு. உணர்வுகளுக்கு உரு அமைப்போ அல்லது ஒலி அமைப்போ பெரும்பாலும் இருப்பதில்லை. உணர்வதற்கரிய நுண்ணிய உளச் சமன்பாடுகளை உணரும்பொருட்டு சில இடங்களில் கட்டமைப்பு செய்யும் தேவசீமா சில இடங்களில் அந்தக் கட்டமைப்பையும் உடைக்கிறார். அதுவும் கவிதைக்குத் தேவை தானே.
'எண்ணற்ற வார்த்தைகளை நம்மேல் எறிந்து வெள்ளைத்தாளாய் சிரித்துக்கொடிருந்தார் கடவுள்' என்னும் ஒரு வரி , அதற்கு முன் வலிய ஏழுவரிகளில் உரு கொண்ட கட்டமைப்பை உடைத்து ஒரு கவிதையாய் திருப்தியுறுகிறது. கவிதையில் திருப்தியுறுவது என்பது வாசக மனப்பான்மையில் மாறுபடலாம், கவிஞனின் படைப்பூக்கத்தில் மாறுபடலாம். ஆனால் எழுதி முடிக்கப்பட்ட ஒரு கவிதை இப்பிரபஞ்சத்தின் ஏதோ ஒரு மூலையில் ஒருவனுக்கு எதையாவது பேசிக்கொண்டிருக்கும். ஒரு கவிதை கூட தன்னளவில் திருப்தியடைவது அந்த மூலையில் எவனோ ஒருவன் அந்தக் கவிதையுடன் உரையாட ஆரம்பிக்கும்பொழுது தான்.
அம்மாவின் புகைப்படத்திற்கு தேவசீமா எழுதியிருக்கும் கவிதை யாரையோ எங்கோ தவறவிட்ட ஒருவரின் புகைப்படத்தைப் பார்க்கும்பொழுதெல்லாம் இறந்துபோனவர்களின் அல்லது இல்லாமல் போனவர்களின் இருப்பை இருத்திக்கொண்டே இருக்கும்.
என்னுடன் கல்லூரியில் படித்து பிறகு தொடர்பறுந்து போன ஒரு தோழி 17 வருடங்கள் கழித்து தொடர்பில் வந்தார். அவளது கணவனுக்குப் புற்றுநோய் என்றும் , தெரிந்த மருத்துவரிடம் ஆலோசனை வேண்டும் என்றும் கேட்டார். எனக்குத் தெரிந்த மருத்துவரிடம் அவர்களை அனுப்பி வைத்தேன். நாள் தாங்காது என்பதை மருத்துவர் என்னிடம் சொல்லிவிட்டார். அதிலிருந்து ஒரு வாரத்தில் தோழியின் தந்தை என்னை அழைத்து தோழியின் கணவர் இறந்துவிட்டார் என்று கூறினார். இது நடந்து ஆறு மாதங்கள் இருக்கும். மூன்று நாட்களுக்கு முன் தோழியின் வாட்சப் படத்தில் அவளது நான்கு வயது குழந்தை தன்னுடைய அப்பாவிற்கு முத்தம் கொடுக்கும் புகைப்படத்தை வைத்திருந்தார். ஒரு குழந்தை , தன்னுடைய அப்பாவைத் தவறவிட்ட தருணங்களை எப்படியெல்லாம் சந்தித்துக்கொண்டிருக்கிறாள் என்பதை அந்தப் புகைப்படத்தைப் பார்த்ததும் கனத்துப்போய்விட்டது. சில உணர்வதிர்வுகளை சமகாலத்தில் எதார்த்த உலகில் குறுக்கே கடக்கும் சக மனிதர்களின் வாயிலாக உணர்கிறோம். தேவசீமா, 'பாப்பா வா போலாம்' என்று ஒரு கவிதை எழுதியிருக்கிறார். அந்தக் கவிதை இப்படி முடிகிறது.
"நேற்றிரவு அவள் பட்ட துன்பம்
கனவில் வந்த அப்பா சொன்னார்
'பாப்பா' வா போலாம்.
எதிர்வாதத்தில் எகிறிய அவள்
இந்த அக்கற மயிறு மொதல்லயே
இருந்து இருக்கனும்ல,
போம் போதே கூட்டிட்டு
போறதுக்கென்ன
கேடு "
கவிதை எதையாவது செய்யவேண்டும் என்று இல்லை. அப்படிச்செய்தால் தான் அது கவிதை என்பது மிகவும் முற்போக்கான நோக்கு என்று கூடச் சொல்லலாம். என்னைப் பொறுத்தவரை உணர்வதைக் கவிஞன் எழுதுகிறான். அது இன்னொருவரின் உணர்வாதலும் அதிர்வாதலும் கவிதைக்கும் வாசகனுக்கான உளவியல் தொடர்பு.
மனவீச்சம், நீலம் பாரித்த விழிகள், புளிப்பும் துவர்ப்புமாய் ஓர் உறக்கம், விழியற்ற கரங்கள் என்பது போன்ற சொல்லாடல்கள் வாசகனுக்கும் சொற்களின் வாயிலாக ஒரு புனைவுலகைக் கட்டமைக்க 'வைன் என்பது குறியீடல்ல' தொகுப்பு எத்தனிக்கிறது.
கவிதைகள் என்பவை மட்டும் இல்லையென்றால் வாழ்வியலின் அழகியலை ஆவணப்படுத்தும் பாங்கு குறைந்திருக்கலாம். உரைநடை வாயிலாக எவ்வளவு வர்ணனைகளை உள்வாங்கி மனக்காட்சிப்படுத்தினாலும் ஒரு கவிதை தாங்கும் படிமத்தின் அடர்த்தியும் அது ஏற்படுத்தும் மாயைகளும் தான் சிலருக்கு பெரும் அதிர்வுகளைத் தருகின்றன.
'வைன் என்பது குறியீடல்ல' அதனளவில் ஒரு கவிதைக்கானத் தொகுப்பு.
பழனிக்குமார், மதுரை.
கருத்துகள்
கருத்துரையிடுக