சைரன் பக்க அண்ட் பக்கா 2

நம்ம சந்தோசமாய் எடை குறைக்க ஆரம்பிச்சுட்டோம்னு இருப்போம். அப்பத்தான் நமக்கு கமெண்ட் சொல்வானுக.


கிட்டத்தட்ட நீங்க எயிட்ஸ் பேஷண்ட் மாதிரி இருக்கீங்க அப்படினு ரெண்டு பேர் நேரடியாக என்னிடம் சொன்னார்கள்.
நான் சந்தித்த விமர்சனங்களில் மோசமானது என்று சொல்லிவிடமுடியாது. எப்பொழுதும் வார்த்தைகளின் ஆழங்கள் வெறும் வார்த்தைகளைக் கொண்டு அளவீட முடியாது அல்லவா. சொன்னவர்கள் என் மீது அதிக மதிப்பு கொண்டவர்கள். பாசம் கொண்டவர்கள். ஆதலால் இந்த விமர்சனம் எனக்கு ஒரு செக் மேட் தான்.
இதற்கு பதில் சொல்வது கொஞ்சம் சிரமம் தான்.
நீ ஏன் இப்படி மெலியுற. ஏன் மெலியனும். இனி மெலியாத. இப்படி எல்லாம் சொல்லவந்தவர்கள் இப்படி முடிக்கிறார்கள்.
அவர்களுக்கு எல்லாம் திரும்ப திரும்ப நான் சொன்னது இது தான்.
என் உயரம் 174 செமீ. நான் இருக்க வேண்டிய எடை ஓர் ஆரோக்கிய அளவீட்டிற்காக, ( இது ஒன்றும் மிகத் துல்லியமான அளவீடு இல்லை, ஆனால் ஓரளவிற்கு ஏற்றுக்கொள்ளக்கூடிய முன்னெச்சரிக்கை ஆரோக்ய அளவீடு)  74 இருக்கலாம். கொஞ்சம் கூடுதலாக இருந்தால் தவறில்லை.
நான் இருந்தது 86. ஆதலால் குறைத்தேன் என்று பதில் சொல்ல வேண்டும்.
மருத்துவத் துறையில் இருப்பவர்களுக்கு எளிதில் புரிந்து விடும்.
இந்த 174 க்கு 74 என்பது நம் 50 வயது வரைதானாம்.
நீங்கள் சுகர் பேஷன்ட் என்றால், 50 வயது என்றால், உங்கள் உயரத்திலிருந்து 100ஐ க் கழித்து அதில் வரும் விடையில் பத்து சதவீதத்தையும் கழித்து வர எடை இருக்கனுமாம். என்ன சுத்துதா...
உதாரணத்திற்கு, என் உயரம் 174 செமீ. எடை 74. துல்லியம் என வைத்துக்கொள்வோம்.
நான் 50 வயதுக்கு வரும்பொழுது சக்கரை வியாதி வந்தால் அல்லது இதய நோய் வரும் பட்சத்தில் 74லிருந்து பத்து சதவீதம் அதாவது குத்துமதிப்பாக 7 கிலோ குறைக்க வேண்டுமாம். அதாவது 67 .
இவ்வளவு பெரிய விழிப்புணர்வு பதிலை நான் சொல்லிக்கொண்டு இருக்கிறேன். அப்பொழுது தான் நம்புகிறார்கள். ஏற்றுக்கொள்கிறார்கள்.
இவ்வளவு பெரிய பதில் தேவையா என்றால் ஒரு விசயம் தான். உங்களுக்குப் பிடித்ததை நீங்கள் செய்யும்பொழுது அல்லது நீங்கள் கமிட் ஆகி ஒரு வேலையைச் செய்து முடிக்கும் வரை வரக்கூடிய எதிர்மறை விமர்சனங்களையும் சந்தேகங்களையும் நீங்கள் சந்தித்து பதில் சொல்லி அவற்றைத் தீர்த்துவிடவேண்டும். அவற்றை உங்கள் மனதில் தங்கவைத்துவிட்டால் அவை நம்மை நம் இலக்கை நோக்கி நகர விடாமல் செய்துவிடும். அதற்காகத்தான் இந்தப் பதில்.
உண்மையில் இந்தப் பதில் அவர்களுக்கு மட்டும் அல்ல. நானே எனக்குச் சொல்லிக்கொள்கிறேன்.
ஒரு விசயத்தைத் திரும்பத் திரும்பச் சொல்வது நமக்கு அதன் மீதான நம்பிக்கையையும் அதை நோக்கி நகர்வதற்கானச் சிந்தனையையும் தரும்.

என் எடை குறைப்பை அருகில் இருந்து பார்த்தத் தெரிந்த ஒரு அண்ணன் ஒவ்வொரு முறையும் எடை பார்க்கும்பொழுது எவ்வளவு குறைஞ்சிருக்கீங்க என்று கேட்பார். நான் முதல் ஐந்து கிலோ வேகமாகக் குறைந்தேன். ஆறாவது கிலோவிற்கு நாள் ஆனது. என்ன குறையல என்றுலாம் கேட்பார்.
மொத்தமாக 11 கிலோ மூன்று மாதங்களில் குறைய அவரும் மெல்ல அவர் எடையைப் பார்க்க ஆரம்பித்தார். கூடுதல் எடை. தொப்பை அதில் முக்கால்வாசி எடையை எடுத்துக்கொண்டது.
பதினைஞ்சு கிலோ குறைக்கனும்ண்ணே..என்று சொன்னேன். அவருக்கு வயது 52.
ஒரு கட்டத்தில் அவரது மனைவி என்னைக் காண்பித்து தம்பியைப் போல நடங்க. எடை குறையுங்க என்று சொல்ல அவர் அதை என்னிடம் சொன்னார்.
சேர்ந்து நடக்க வாங்க என்று அழைக்க அவரால் வர இயலவில்லை.
அவராகவே லிபிட் டெஸ்ட் எடுக்க, கொலஸ்ட் ரால் ட்ரை க்ளிசரைடிஸ் எல்லாம் கூடுதல். ட்ரை க்ளிசரைடிஸ் 300க்கு மேல் கொட்டிக்கிடந்தது.
பிரஸ்ஸர் இருக்காண்ணே எனக் கேட்டேன்.
ஆமா என்றார். மருந்தும் சாப்பிடுவதாகச் சொன்னார்.
உணவுப் பழக்கத்தை மாற்றுங்கள். கொஞ்சம் அசைவம் நிறுத்துங்கள். வடை எல்லாம் நிப்பாட்டுங்க. இப்பவாவது நடக்க ஆரம்பிங்க என்றேன். எடை குறையுங்க என்றேன்.
அவரது மனைவியும் அழுத்த டாக்டரும் நடக்கச் சொல்ல என்னுடன் நான்கு நாட்கள் நடக்க வந்தார்.
அவரால் என் இயல்பு தடை ஆகக்கூடாது என்று நான் வேகமாகவும் அவர் மெதுவாகவும் நடந்தார்.
ஐந்தாவது நாள் அவரைக் காணவில்லை.
ஆறாவது நாளும் ஏழாவது நாளும்  காணவில்லை. என்ன வென்றால்
வெள்ளிக்கிழமை அம்மன் கோவிலுக்கு
சனிக்கிழமை பெருமாள் கோவிலுக்கு போயிட்டேன் என்றார்.
அது சரி ஞாயிற்றுக்கிழமை என்னாச்சுனா லீவுல என்றார்.

பிறகு ஐந்து நாட்கள் வந்தார். பிறகு 10 நாட்கள் வரவில்லை.
நீங்கள் நம்ப மாட்டீர்கள். போனவாரம் காலை பால் வாங்கப் போகிறார். மிக இளைக்கிறது என்று பக்கத்து மருத்துவமனையில் பிரஸ்ஸர் செக் பண்ணுகிறார். 100/70 ஆகிறது. இது காலை ஏழு மணியில் நடக்கிறது.
ஒரு மருத்துவரிடம் கேட்க ஒன்பது மணிக்கு ஈசிஜி எடுக்கிறார். அவராகவே நடந்து சென்று தான் எடுக்கிறார்.
ஈசிஜி எடுப்பவர் உடனே மருத்துவரைப் பாருங்கள். இது மைல்ட் அட்டாக் மாதிரி இருக்கிறது எனக் கூறுகிறார்.
12 மணிக்கு மருத்துவரைப் பார்க்கிறார். மிகவும் நார்மலாகவேத் தான் இருக்கிறார்.
அது மைல்ட் அட்டாக் என்றும் அடைப்பு இருக்க வாய்ப்பு இருக்கிறது என்றும் கூறி உடனே அப்பல்லோவில் சேர்க்கிறார்கள். பிரஸ்ஸர் குறைகிறது. அடுத்த் அட்டாக் வர எல்லா வாய்ப்பும் நேரிடுகிறது.
ஆஞ்சியோ சோதனையில் இதயத்தில் மூன்று அடைப்புகள் உறுதி செய்யப்படுகின்றன.
இறுதியில் ஓபன் ஹார்ட் சர்ஜரி செய்தால் மட்டுமே சரியாகும் என்றாகிவிட்டது.

செப்டம்பரில் இருந்து என்னுடன் பக்கத்தில் இருந்து பார்த்து கடைசி மாதத்தில் நடக்கலாம் என்று ஆரம்பித்த ஒருவரை மயிரிழையில் மருத்துவமனையில் பார்க்கிறேன்.
அவரை மருத்துவமனையில் சேர்த்துவிட்டு அவரது மனைவி அவரது உடன்பிறந்தவர் உடன் வேலை பார்ப்பவர்கள் எல்லாம் சொல்வது அவரது மோசமான உணவுமுறை.
தண்ணி அடிக்க மாட்டார்.
சிகரெட் இல்லை.
ஆனால் அசைவம், வடை, எண்ணெய் பலகாரம் என ஒரு கட்டு கட்டுவார். அவ்வளவே.

சில விசயங்கள் நாம் நாமாகவே இழுத்து வைத்துக்கொள்கிறோம். மோசமான உணவுப் பழக்க வழக்கமும் உடல் பருமனும் அப்படித்தான் என்பது என் கருத்து.

இதை ஏன் இப்ப சொல்றேனு கேட்கிறீங்க தானே....

ஹா ஹா....

சைரன் பக்க அண்ட் பக்கா 3ல் பேசலாமா...

சைரல் ஒலிக்கும்......

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

A separation ஈரானிய மொழி திரைப்படம்

சைரன் 4

விற்பனைப் பிரதிநிதியின் தனிக்குறிப்புகள் 8