சைரன் பக்க அண்ட் பக்கா 4

உடல் எடை அதிகமாக இருப்பது தான் பிரச்சினை என்றால் குறைப்பதில் பிரச்சினையா என்பது ஒரு வகையான பயத்தை ஏற்படுத்தியிருக்கும் உங்களுக்கு.
வழவழ கொழகொழ வேண்டாம். உடல் எடை குறைப்பில் என்னென்ன பிரச்சினைகள் வரும்.
அதை மனதளவில் உடலளவில் என இரண்டா பிரிச்சுக்கிறேன்.

முதலில் மனசுல இருந்து ஆரம்பிப்போம்..

எப்படியாவது சாப்பிட்டு விடு என்று மூளை உங்களைத் தூண்டும். க்ரேவிங்க் எனக்கு முதல் எதிரி.
இரண்டாவது நேர் எதிராய் சந்திக்கும் ஒரு விமர்சனம். இப்ப மெலிஞ்சு என்ன செய்யப்போற. இந்த மாதிரி விசயங்கள்.
மூன்றாவது எதற்காக மெலியவேண்டும் என்ற அவசியமும் விழிப்புணர்வும் இல்லாமலிருத்தல்.

அடுத்ததாக உடலளவில் ஏற்படும் பிரச்சினைகள்.

நாம் உடல் எடையைத் திடீரெனக் குறைக்க ஆரம்பிக்கிறோம். அதில் உணவுக் கட்டுப்பாடு மற்றும் உடற்பயிற்சியும் காரணிகளாக இருக்கும்.
கண்டிப்பாக உடற்பயிற்சி சில வலிகளையும் அசதிகளையும் தரும்.
நான் போன சைரன் மெலிதல் தொடரில் சொன்னதைப் போல ஓட்டப்பயிற்சி செய்ய ஆரம்பிக்கும்பொழுது நம்ம எப்ப கடைசியா ஓடுனோம்னு யோசிச்சுப் பார்த்தா பதினேழு வருசத்துக்கு முன்னாடினு போகும். திடீருனு ஓடும்பொழுது கால் வலி மூச்சிறைப்பு என வந்தது.
இப்படி சில ஸ்ட் ரெச்சஸ் பண்ணும்பொழுது பல அசதிகளை ஏற்படுத்தும். இவை எல்லாம் ஒரு வாரம் தான். பிறகு செட் ஆகும்.
அடுத்தது nutritional deficiency .  கொஞ்சம் புரியுற மாதிரி என் வழக்குல சொல்லனும்னா சமச்சீர் கல்வி னு அந்த முறையை நம்ம கதறக் கதறக் கற்பழிப்பு பண்ண மாதிரி தான் சமச்சீர் உணவு முறையையும் நம்ம பயன்படுத்துறோம். நம்ம சாப்பிடுறதுலாம் சமச்சீரானு பார்த்தா விஞ்ஞானம் ஈஈஈனு பல்ல இலிக்கும்.

நம்ம உடல் எடை குறைப்பில் உணவுக் கட்டுப்பாடுனு சில விசயங்களை ஏற்படுத்தும்பொழுது நியூட் ரிஷன்ல் பேலன்ஸ் பார்த்துச் செய்ய வேண்டும். ஏற்கனவே நான் சொன்ன மாதிரி நான் எந்த டயட் முறையையும் இது அதுனு தொடரவில்லை. ஒரு சாமான்யனாக என்ன கிடைக்குதோ அது, எதை நிறுத்த வேண்டுமோ அது. எதைச் சேர்க்க முடியுமோ அது. இப்படித்தான் நான் இருந்தேன்.
மருந்துகளை விற்கும் துறை என்பதால் என்னவோ அது சார் விழிப்புணர்வு என்னிடம் வந்து கொண்டே இருந்தன.
உணவுக்கட்டுப்பாட்டில் இருக்கும்பொழுது சீக்கிரமே நாம் தளர வாய்ப்புண்டு. என் தமிழில் சொல்வதாக இருந்தால் டயர்ட் ஆக வாய்ப்புண்டு.
நான் அதற்கு வாய்ப்புக் கொடுக்க வில்லை.
பசி எது தூண்டல் எது என்பதை பத்து நாட்களில் கண்டுபிடித்துக் கொண்டேன்.
பசி வந்தால் என்ன சாப்பாடு எடுத்துக்கொள்ளலாம் என்பதைத் தீர்மானிக்கக் கற்று கொண்டேன்.
சாப்பிடும் நேரம் தவிர்த்து மற்ற நேரங்களில் பசி வந்தால் என்ன சாப்பிட வேண்டும் என்று தீர்மானித்துக்கொண்டேன்.  ஆதலால் டயர்ட் ஆக வில்லை.
மூன்று மாதத்தில் பதினொறு கிலோ என்பது அசாத்தியம். ஆனால் இடையிடையே சுகர் டெஸ்ட் எடுத்தேன். கொழுப்பு சோதனை செய்தேன். இரத்த அழுத்தம் சோதிப்பேன்.
ஏதாவது உடலில் மாற்றம் ஏற்பட்டால் இதைச் செய்யலாம். எனக்கு வேலை மருத்துவர்களைப் பார்ப்பது. அதனால் இதையெல்லாம் செய்ய முடிகிறது. செய்தாக வேண்டிய கட்டாயம் இல்லை.
சரியான ஊட்டச்சத்து நமக்குக் கிடைக்கவில்லை என்ன ஆகும் என்று உங்களுக்கு வகுப்பு எடுத்தால் இந்தப் பதிவு போர் அடிக்கும். பன்னிரெண்டாம் வகுப்பு உயிரியல் புத்தகம் வாங்கிப் படிக்கவும்.
உங்களுக்கு கெண்டங்கால் தசை இழுக்கும். அதற்கு பல காரணங்கள் உண்டு. ஊட்டச்சத்து ஒரு குறைபாடு. (குறிப்பு. எனக்கு அப்படி வந்ததில்லை)

சில டயட் வழிமுறைகள் ஊட்டச்சத்து பட்டியலிட்டு உணவு முறைகளை வழங்குகின்றன. அவற்றை நீங்கள் படித்துக்கொள்ளலாம். கல்கி இதழில் சில் மாதங்களுக்கு முன் க்ளைசிமிக் இன்டெக்ஸ் என்ற தலைப்பில் ஒரு மருத்துவர் கட்டுரைகள் எழுதிருந்தார். இணையத்தில் தேடுங்கள்.

நான் சந்தித்தப் பிரச்சினைகளில் ஒரு பிரச்சினை என் முகம் பொலிவிழந்தது( இதுக்கு முன்ன மட்டும்ம்ம்ம்னு வக்கனையா கேக்குற மைண்ட் வாய்ஸ் இங்க கேக்குது பாஸ்) ஒரு மருத்துவர் அதற்கு இந்த மாதிரி டயட்டில் இருப்பவர்கள் நிலக்கடலை பருப்பு சாப்பிடவேண்டும் அதில் உள்ள நேச்சுரல் மினரல்ஸ் ஃபேட்டி ஆசிட்ஸ் அந்த பொலிவை நமக்குத் தரும் என்றார். மூன்று மாதத்தில் 11 கிலோ குறைந்த மாத்திரத்தில் இந்த அறிவுரை எனக்குக் கிடைத்தது. கேமராவ கட் பண்ணி ஆன் பண்ணா பழனிக்குமார் தள்ளுவண்டிக் கடைல நிலக்கடலை வாங்கிக் கொரிக்கும் காட்சியைக் கற்பனை செய்து கொள்ளுங்கள்.

ஒரு டயட் முறையை நீங்கள் தொடர்வது என்பது ஒரு சண்டைக்கார மனைவியைக் கட்டி அழுவது போன்றது. அதன் பின் போய்த்தான் ஆக வேண்டும். கடினமாகத்தான் இருக்கும். சில நேரம் திட்டு விழும். அடி கூட விழும். பத்து நாட்களில் செட் ஆகும் அல்லது அதுவே பழகி விடும்.
நீங்கள் காய்கறிகளையும் பழங்களையும் அதிகம் சேர்க்க உங்களுக்கு ஆண்ட்டி ஆகிஸிடண்ட் கிடைத்துக்கொண்டே இருக்கும். என்னென்ன காய்கறிகள் என்று கேட்டு இந்தப் பதிவை மறுபடியும் டயட் பதிவாக மாற்ற வேண்டும்.
என்னைப் போல வடை கட்லட் மசாலா சேட் சிப்ஸ் மிக்ஸர் இன்ன பிற ஸ்நாக்ஸ் ப்ரியர்களுக்கு நிலக்கடலை பருப்பு மீல் மேக்கர் பாசிப்பயர், சுண்டல் வகையறாக்களை எடுத்துக்கொள்வது உங்களுக்குத் தேவையான எனர்ஜியைக் கொடுக்கும்.
அதிகமாக நீரிழப்பு ஏற்படும் பட்சத்தில் நீர் காய்கறிகள் அல்லது வெள்ளரி இது போன்று சேர்த்துக்கொள்ளலாம்.
நான் சந்தித்த பிரச்சினை முதல் வாரத்தில் தலைவலி.
பசியை அடக்கியது. காலையில் சாப்பிட்டதற்கும் மதியம் சாப்பிடுவதற்கும் முன்னதாக வரும் பசி. அதாவது காலையில் சாப்பிட்டது பத்தாமல். அப்பொழுது நீங்கள் சாப்பிட்டாக வேண்டும். நான் தேர்ந்தெடுத்தது வெள்ளரிக்காய். எத்தனைவேண்டுமானாலும் சாப்பிடுங்கள். பத்து பிஞ்சுகளைக்கூட தின்று என் வெறியை ஆற்றியிருக்கிறேன்.
அல்லது நெல்லிக்காய். உங்களால் பெரிய நெல்லிக்காய்களை மூன்றுக்கு மேல் ஒரே நேரத்தில் சாப்பிடமுடியாது. உங்களால் முடியுமாக்கும். ஆனால் பசியை அடக்கிவிடலாம். அதையும் செய்திருக்கிறேன்.
சிலருக்கு மலச்சிக்கல் வரும். எனக்கு அப்படி ஆகவில்லை.
நீர் அதிகம் எடுத்தாலோ அல்லது நீர் காய்கறிகளை அதிகம் எடுத்தாலோ அந்தப் பிரச்சினை வராது. நீர் காய்கறிகள் யாவை என்று பத்தாம் வகுப்பு பையனைக் கேள்வி கேட்பதுபோல் கேட்பவர்களுக்கு நெட் கிடைக்காமல் சுற்றிக்கொண்டே இருக்கும்படியான ஒரு சாபம் இலவசம்.
இந்தப் பிரச்சினைகள் எல்லாம் வந்தே தீரும் என்று அவசியம் இல்லை. வரலாம் என்பது ஒரு கணிப்பு. இலக்கியவாதியா இப்ப நான் ஃபார்ம்ல இருக்குறனால கணிப்பு என்ற சாதா வார்த்தையை என்னிடம் கொடுத்துவிடுங்கள். அவதானிப்பு என்ற வார்த்தையை போட்டுக்கோங்க.

ஆக, எடை குறைப்புனா இப்படி பிரச்சினைகள் வரும். ஏன்னா அது அப்படித்தான். ஒரு ஏரோ ப்ளேன் இருக்கு. மேலே உயரத்தில் பறந்துட்டு தரை இறங்கும்போது உடனே இறங்காது. கொஞ்சம் கொஞ்சமா வளிமண்டலத்துல இறங்கும். அப்ப ஒரு ஜெர்க் வரும், விமானமே குலுங்கும். இப்ப எதுக்கு நேஷனல் ஜியாக்ரஃபி சேனல் காரன் மாதிரி க்ளாஸ் எடுக்குறேனு நினைக்கிறீங்களா...

இப்படி வச்சுக்குவோம். டக்குனு வெயிட் குறைக்கிறீங்க...உங்க கிட்னிக்கு போகுற இரத்தமும் ஆக்ஸிஜனும் கொஞ்சம் நிண்டு போனா எப்படி இருக்கும் மொதலாளினு யோசிச்சுட்டே..இந்தப் பதிவுக்கு லைக் போட்டு போங்க....

நாளைக்கு வரேன்.....

சைரன் ஒலிக்கும்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

A separation ஈரானிய மொழி திரைப்படம்

சைரன் 4

விற்பனைப் பிரதிநிதியின் தனிக்குறிப்புகள் 8