ஸ்டெர்லைட்..போஸ்ட்மார்டம்.

என்னிடம் சில கேள்விகள் இருக்கின்றன. அந்தக் கேள்விகள் என்னுடையக் கேள்விகள் அல்ல. சிலரது பதிவுகளில் சிலரது வாதங்களில் வந்தவை. அவற்றிற்கு எல்லாம் பதில் சொல்ல வேண்டுமா என்று சலித்து சலித்து வைத்தாலும் சில கேள்விகளை நாம் தவிர்க்க முடியாது.
அதில் ஒரு கேள்வி ஸ்டெர்லைட் ஆபத்தானது என்று இன்று தான் தெரியுமா. ஏன் இவ்வளவு நாட்கள் போராடவில்லை என்பது போன்ற ஒரு கேள்வி அது சார் இன்னொரு கேள்வி கேன்சர் ஸ்டெர்லைட் மூலமாகத்தான் வருகிறதா அதற்கு ஆதாரம் இருக்கிறதா என்பது.
தூத்துக்குடிக்கு ஸ்டெர்லைட் வந்தது முதல் பிரச்சினைகள் என்பது எல்லோருக்கும் தெரியும். இந்த எல்லோர்க்கும் என்பது அரசியல்வாதிகள் தூத்துக்குடி சார் அரசு அதிகாரிகள்.
பாதுகாக்கப்படவேண்டிய வளைகுடாவிலிருந்து இத்தனை கி.மீ தூரத்தில் தான் இந்த ஆலை இருக்கவேண்டும் என்ற விதி தான் முதல் விதி மீறல். அப்படிப்பார்த்தால் அந்த ஆலையே அங்கு அமைந்திருக்கக்கூடாது. அதை அப்படியே அமுக்கிவிட்டார்கள்.
இந்தப் பிரச்சினை ஏன் தெரியவில்லை என்றால் இப்பொழுது இருக்கும் சமூகவலைத்தளங்களின் வீச்சு அப்பொழுது இல்லை. இப்பொழுது இருக்கும் சமூக ஆர்வலர்களின் ஒருங்கிணைப்பான தொடர்புகள் அப்பொழுது இல்லை.
அதே போன்று ஒரு மாலை நேரத்தில் ஆலையின் அருகில் இருப்பவர்கள் மயங்கி விழ எழுந்த முதல் பிரச்சினையில் காற்றில் வெளி வந்த நச்சு வாயு தூத்துக்குடியில் பிரச்சினையானது.
இங்கு நாங்கள் மட்டும் தான் இருக்கிறோமா நிறைய ஆலைகள் இருக்கின்றன. வேறு எங்கேயோ வந்திருக்கும். நாங்கள் சட்டத்திட்டங்களை மதிக்கிறோம். மிக கெடுபிடியான நிர்வாகம் என வாதிட்டது ஸ்டெர்லைட். மக்கள் போராட சட்ட முயற்சி எடுக்க தேசிய பசுமை தீர்ப்பாணையத்திடம் முறையிட அந்த தினத்தில் நச்சு வாயு கலந்தது கண்டுபிடிக்கப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது. இந்த வழக்கு முடியும் மூன்று மாதம் ஆலை நிறுத்தப்பட்டிருந்தது. அபராதத்தைக் கட்டிவிட்டு ஆலையைத் திறந்தது ஸ்டெர்லைட்.
ஆக, ஆலையைத் திறப்பதும் மூடுவதும் ஸ்டெர்லைட்டுக்கு ஒரு useful phenomenon.  என்ன, இந்த முறை கொஞ்சம் போராட்டம் ஜாஸ்தியாயிருச்சு என்ற படி தான் ஸ்டெர்லைட் இருக்கும் அதற்கு ஆதாரம் வேண்டுமானால் நேற்றைய ஸ்டெர்லைட் அதிபர் பங்கு சந்தையில் வீழாமல் இருக்கப் பேசியிருப்பவற்றைப் பார்க்கவும்.
ஆக, ஸ்டெர்லைட் இயங்கவில்லை அப்புறம் ஏன் போராடுகிறீர்கள் என்று சிலர் பதிவிட்டனர். எங்கேயோ வெளி ஊரில் இருக்கும் மக்களுக்கு அது புரியாது. தூத்துக்குடிக்காரனுக்கு மட்டும் தான் புரியும் அது.
இப்படித்தான் போராடுவானுக அப்புறம் விட்டுருவானுக என்று நிர்வாகமும், அரசும் இருந்தன.
இந்த நான்குமாத கால இடைவெளியில் நடந்த கேன்சர் இறப்புகள் தான் மக்களை இந்த போராட்டம் நோக்கி நகர்த்தியது.
தூத்துக்குடி தவிர வெளி ஊர் மக்கள் பார்ப்பவை செய்தி சேனல் மற்றும் நாளிதழ்கள் . அவை உண்மை என நம்பும் சில அப்பிராணிகள் இருக்கத்தான் செய்கின்றனர்.
சிறுவர்கள் தடியடியில் அடிவாங்குகிறார்கள். பெண் குழந்தைகள் அடி வாங்குகிறார்கள். பொத்தம்பொதுவாக, ஒரு அரசியல்வாதி டிவி விவாதத்தில் சமூக விரோதிகள் எனப் பெயரிட்டு அழைக்கிறார். வாய் தவறி நிகழ்ச்சி நெறியாளரும் இரு முறை சமூக விரோதி என்றழைக்கிறார். இதைப் பார்த்த ஓர் அண்ணன் தூத்துக்குடியிலிருந்து சொல்கிறார். சார் நான் ஒரு ஆசிரியர். என்னுடன் மூன்று ஆசிரியர்கள் அவர்களது குடும்பத்துடன் போராட்டத்திற்குச் சென்றோம். நாங்கள் எல்லாம் சமூக விரோதிகளா . தூத்துக்குடிக்காரன் ஒருத்தனையும் விவாதத்திற்கு அழைக்காமல் சென்னைவாசிகளா பேசுறானுகளே...எங்கள் வலி எப்படி தெரியும். எங்கள் சார்பாக உண்மையைப் பேச யார் இருக்கா. ஏன் எங்களில் ஒருவரை யாரும் அழைக்கவில்லை என்று குமுறினார். இதற்குப் பதில் பிறகு சொல்லலாம்.
ஒரு தொலைக்காட்சியில் நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. பிறகு ரத்தாகிறது. இன்னொரு தொலைக்காட்சியில் நிகழ்ச்சி காட்டப்படுகிறது. அதில் இப்படி எல்லாம் வார்த்தைகள் மாறி  மாறி வருகின்றன.

தூத்துக்குடியில் அமைதிப் பேரணி.
தூத்துக்குடியில் மக்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகை.
மக்கள் மீது த்டியடி பிரயோகம்
அமைதிப் பேரணியில் தடியடி.
இப்படி வந்து கொண்டிருந்த சேனலில் பிறகு
ஆர்ப்பாட்டக் களமாகியது தூத்துக்குடி.
வன்முறைக் களமாகியது தூத்துக்குடி.
வன்முறையாளர்கள் கல்வீச்சு.
இந்த வார்த்தை மாற்றத்திற்குப் பின் எவ்வளவு அரசியல் இருக்கிறது தெரியுமா. இதை நம்ப ஒரு கூட்டம் இருக்கிறது தெரியுமா.

இப்பொழுது அந்த அண்ணன் கேட்ட கேள்விக்குப் பதில் அலசலாம். ஒரு புரட்சி அல்லது போராட்டம் எப்பொழுதும் உயிர்ப்புடன் இருந்து வெற்றி பெற ஒரு தலைமை வேண்டும். தலைமை இல்லாமல் தறி கெட்டு வரும் கூட்டம் இலக்கில் ஆங்காங்கு ஓட்டையை அமைக்கும். அதற்குள் இந்த கள்ள நரிக் கூட்டம் உட்புகுந்து ஆட்டையைக் குலைக்கும். அது தான் இங்கும் நடந்தது.
அதற்காக துப்பாக்கிச்சூடு நடக்க வேண்டுமா. நடந்திருக்கக்கூடாது.

இது சாதிக் கலவரம் இல்லை. மதக் கலவரம் இல்லை. அப்பட்டமா இயங்காமல் இருக்கு அரசுக்கெதிரானப் போராட்டம் இல்லை. இது வெறும் தனியார் ஆலைக்கெதிரானப் போராட்டம். ஆதாரங்கள் இருக்கின்றன. ஆர்சினிக் வாயு வெளிவந்த பாதிப்பு உள்ளது. சல்ஃபர் வாயு வெளிவந்த பாதிப்பு. இவ்வளவு சர்ச்சை இருக்கும்பொழுது ஆலை எல்லாவற்றையும் அமுக்கிக்கொண்டு இருந்தால் பரவாயில்லை. இரண்டாம் கிளை ஆரம்பிக்கவும் முதல் கிளையை விஸ்தரிக்கவும் அனுமதி கேட்கிறது. இதில் தான் போராட்டம் தீவிரமடைகிறது. இந்த இடத்தில் தீவிரமடைகிறது என்ற வார்த்தைக்கு விளக்கம் சொல்ல முற்பட்டால் பத்து வருடத்திற்கு முன் இரு கிராமங்களுக்கு மட்டும் இது தெரியும். அவை தான் பிரச்சினை செய்தன. ஆதலால் தூத்துக்குடி மதுரை பைபாஸிலேயே இந்த விசயம் அமுக்கப்பட்டது. இப்பொழுது சமூக வலைதள்த்தில் பரவிய இந்த விழிப்புணர்வு நகரம் முழுதும் தொற்றிக்கொண்டது. அது தான் தீவிரம்.
பிறகு ஏன் நியாயமானக் காரணமான போராட்டத்திற்கு சுட்டார்கள் என யோசிக்கலாம்.
 என்னுடைய தனிப்பட்டக் கருத்து இந்தப் போராட்டம் ஸ்டெர்லைட் என்று இல்லை கதிராமங்கலம் நெடுவாசல் கூடங்குளம் போடி இப்படி எங்கு இது மாதிரி இந்நேரம் நடந்திருந்தாலும் சுட்டிருப்பார்கள்.
ஆம் அந்தச் சந்தேகம் இருக்கிறது.
திமுக வரலாம். அதிமுக வரலாம், பிஜேபி வரலாம், காங்கிரஸ் வரலாம். அது என்ன புதிதாக தமிழக வாழ்வுரிமை கட்சி, நாம் தமிழர், மே 17 இயக்கம் இன்னும் சில புற்றீசல் கட்சிகள் இளைஞர்களை கவர்கின்றன. பத்தாக்குறைக்கு ரஜினி, கமல் வேறு.
தனித்தமிழ்நாடு என்ற கோஷம் போகிற போக்கில் டீ சொல்வது போல் கவர்கிறது. தமிழ் தேசியத்தில் ஒரு கவர்ச்சியை சூழ்நிலைகள் ஏற்படுத்துகின்றன. ஒரு நடுத்தரக் கொள்கையாளனாக இந்தியா, பிறகு தமிழ்நாடு என்பவனுக்குக் கூட நடக்கும் சூழ்நிலைகள் தமிழ் தேசியத்தில் ஒரு கவர்ச்சியைக் காட்டுகின்றன. இதை அரசு கவனித்துவிட்டதா.
மெரினா பீச் சை இன்னும் எத்தனை நாளுக்குத்தான் அடைத்து வைப்பீர்கள் என ஆட்சியாளர்களை யாராவது கேட்டிருக்கலாம்.
கோஷம் போடுறானா.....சுடு ..சாகட்டும். அடுத்து எப்படி போராடுறானு பார்த்துரலாம் என யாராவது யாருக்காவது அறிவுரைகள் தெளித்திருக்கலாம்.
செய்துவிட்டார்கள். ஆனால் இது பழைய ஃபார்முலா. இங்கு விழுபவர்கள் சடலங்களாய் இருப்பதில்லை. விதைகளாய் தான் என்பது அவர்கள் கணிக்கத்தவறியவை.

உண்மையில் மக்களில் கொஞ்சம் பேர் சலித்துவிட்டனர் திமுக அதிமுக க்களைப் பார்த்து.
கொஞ்சம் பேர் காசு வாங்கி இவன் இல்லாட்டி அவன் அவன் இல்லாட்டி இவன் என செக்கு மாடுகளாக மாறிவிட்டனர்.
திமுக அதிமுக க்கு மாற்று தேவை என்பதை காலம் உணர்த்தத் துவங்கிற்று. ஆனால் நம்பிக்கைத் தரக்கூடிய அளவிற்கு யாரும் வராதது ஆபத்து இன்னொன்று அப்படி வந்தாலும் நம்ப மக்கள் இல்லாதது அதைவிட ஆபத்து.
இந்த வெற்றிடங்களை நியாயமாகப் பார்த்தால் கம்யூனிஸ்ட்கள் நிரப்பி ஆக வேண்டும். நல்ல கம்யூனிஸ்டை கொடி தூக்கவும் உண்டியல் குலுக்கவும் தெரு முக்கில் கத்த வைத்து அவனை அங்கேயே மழுங்கடித்து விடுகிறார்கள் மேலே இருக்கும் பினாமி கம்யூனிஸ்ட்டுகள்.

ஆக, ஸ்டெர்லைட் என்பது ஒரு சோதனைக்குழாய் சோதனையாகச் செய்து அரசு இப்பொழுது பெருமூச்சு விட்டுள்ளது. ஆலையை மூடிவிடுவார்கள் என வெளிவட்டார மக்கள் அடுத்த வேலையைப் பார்க்கப் போய் விடுவார்கள் . தூத்துக்குடி மக்கள் இளைப்பாறாமல் சட்ட நுணுக்கங்களுடன் ஆலையை நிரந்தரமாக மூடி இடித்து  இல்லாமல் செய்யும் வரை இயங்க வேண்டும்.
தூத்துக்குடியை நம் ஊராக நினைத்து எல்லா ஊர்காரர்களும் இந்தப் பிரச்சினையை அணுக வேண்டும்.
வெளிப்படையாக ஒரு முறை யோசிக்க வேண்டுமென்றால் இந்த முறை ஓட்டை திமுக சார் நண்பர்களுக்கும், அதிமுக சார் நண்பர்களுக்கும் காங் , பிஜேபி நண்பர்களுக்கும் போடாமல் யாருக்கு வேண்டுமானாலும் போடுங்கள். இதுவரை இழந்ததை விடவா இனிமேல் இழக்கப்போகிறோம்.
ஒரு சோதனை முயற்சிக்கு நாம் தயார் ஆவோம்.
நம் முன் தெரிவது நாம் காண்பது அல்ல என்பதைப் பார்ப்போம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நானுனக்கு...

பூ தொடுத்தல்

இது தம்மு...இது ரம்மு....