சைரன் பக்க அண்ட் பக்கா 3

கூட்டத்துல ஒரு பச்சை சட்டைக்காரன் நழுவுறான்.
காசு போடாம போனா இரத்தம் கக்கி சாவான்னு வடிவேல் காமெடி மாதிரி
போன பதிவில் ஒரு ஹார்ட் அட்டாக் கதையோடு முடித்தேன்.
அந்தக் கதை பீதியைக் கிளப்புவதற்கா என்று கேட்டால் இல்லை. ஆனால் உங்களுக்கு பீதியாகிறது என்றால் கம்பெனி பொறுப்பாகாது.
கிரிக்கெட் மேட்ச் பார்க்கிறோம்.
நமது அணி பேட்ஸ்மேன் தூக்கி அடிக்கிறான்.
பந்து பறக்குது.
சிக்ஸர் போகப்போகுது.
கடைசி கோடு கிட்ட ஒரு உசந்த வெஸ்ட் இண்டிஸ் ஃபீல்டர் எட்டிப் பறந்து அந்தப் பந்தைக் கேட்ச் பிடிச்சிரான். எப்படி இருக்கும் . அப்படித்தான் அந்தக் கதையில் அந்த அண்ணனுக்கு. லிபிட் புரொஃபைல் டெஸ்ட் எடுத்து ஒழுங்கா நடக்க ஆரம்பித்து உணவு முறையை மாற்றியிருந்தால் அந்த ஒரு மாதத்தில் கொஞ்சமாக ஏதாவது தேறியிருப்பார். சேதாரம் அதிகமாகி இருக்காது.

எல்லாம் சரி. இவ்வளவு விழிப்புணர்வு இருந்தும் ஏன் எடை குறைப்பு நமக்குக் கடினமாக இருக்கிறது

எடை குறைப்பில் நமக்கு பெரும் சிக்கலாக இருப்பதுனு நீங்க என்னென்ன லிஸ்ட்லாம் போடுங்க.
எத்தனை காரணிகளையும் சேர்த்துக்கோங்க.
என் புருஷன் விடல, என் பொண்டாட்டி விடல.
எனக்கு ஆபிஸ் இருக்கு.
உக்கார்ந்தே பாக்குற வேலை.
நடக்க டைம்மே இல்ல.
எனக்குப் பசிக்கவே பசிக்காது.
வாக்கிங்க் போனா பொண்டாட்டி அடிப்பா...
அப்படி இப்படினு எத்தனையோ காரணங்களைக் கட்டம் கட்டிப் பாருங்க.

அவை எல்லாமே உங்களது சோம்பேறித்தனம், உண்மையான ஆர்வமின்மை, பசி போல் இருக்கும் க்ரேவிங்க் அதாவது தூண்டல் இதற்குள் அடிப்படையாய் வைத்து அடங்கும்.
 இந்த மூன்று காரணிகளுக்குள் அடங்கும் உங்களது அத்தனைக் காரணங்களையும் உங்களால் அடக்க முடியாதா. முடியும். ஆனால் செய்வதற்குத் தான் யோசிக்கிறோம்.
நாம் எடை கூடுவது என்பது நமக்கு அறியாமலேயே நடந்து விடுவது போல் ஆகிவிடுகிறது.
ஒருவர் சொன்னாலோ அல்லது மருத்துவர் சொன்னாலோ ஒழிய நாம் அதைப் பற்றிக் கவலை படுவது கிடையாது.
எடை கூடுதலாக கூடுதலாக நான் சந்தித்தப் பல பிரச்சினைகள் உண்டு.
உண்மையைச் சொல்லப்போனால் அந்தப் பிரச்சினைகள் தான் என்னை எடை குறைக்க நகர்த்தின.

முதலில் நாம் எப்பொழுதும் போடக்கூடிய சட்டை பேண்ட் அளவுகள் குறையும். அவை குறைவது இல்லை. அவற்றைப் போட்டுக்கொண்ட்டால் அந்த உடைகளுக்குள் இருந்து மீறி நாம் தெறிப்போம்.
மார்க்கெட்டிங்கில் இருக்கும் எனக்கு அந்த மாதிரி சட்டை போடும் போது தொப்பை பெரியதாகிக் காட்டும். பேண்ட் இறுக்கமாக இருக்கும். அதற்கு ஏற்றபடி உடைகளை மாற்றிக்கொண்டேன். அவை என்னை என் உடலைக் குண்டாக இருப்பது ஓரளவாக வெளியே காட்டிக் கொடுக்காது என்று நம்பிக்கொண்டேன். அல்லது ஏமாற்றிக்கொண்டேன்.
எப்பொழுதும் தளர்வான ஆடைகளை உடுத்திக்கொண்டதன் விளைவு நான் இன் பண்ணி வேலைக்குச் செல்லும்பொழுது எனக்குப் பொருத்தமற்ற சட்டையை அதாவது பெரியதான சட்டை அணிய அது அவ்வப்பொழுது வெளியே தொத்திக்கொண்டு இருக்கும். அல்லது பேண்ட் லூசாக இருக்க அல்லது தொப்பைக் காரணமாக பேண்ட்டும் க்ரிப்பாக இருக்காது.
இது என் குணாதிசயப் பழக்கவழக்கங்களுக்குள் மாறுபாட்டை உருவாக்கியது.
நான் கல்லூரியில் தேசிய மாணவர் படையில் இருக்கும்பொழுது சொல்லிக்கொடுத்த அந்த டைட் இன் பண்ணும் முறை ஞாபகத்தில் இருந்து இப்பொழுது இருக்கும் என்னைப் பார்க்க பெரும் குற்ற உணர்வாக இருந்தது.
அவ்வப்பொழுது இன் பண்ணதைச் சரி செய்ய பேண்ட்டை இழுத்துவிட சட்டையைத் திணித்துக்கொண்டிருக்க நம் மூளை வெகு கண்காணிப்பாக நம் உடை சம்பந்தமானத் தூண்டலை உற்பத்தி செய்து கொண்டே இருந்தது.
பிறகு எப்படி மற்ற விசயங்களுக்காக மூளை யோசிப்பது.

இது அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததா...எனக் கேட்கிறீர்களா.
ஆம் மார்க்கெட்டிங்கில் ட்ரஸ் கோட் முக்கியம்.
அந்த வேலை என்பது இல்லை. இந்த உலகத்தில் நம்மைப் பற்றிய பாதி சமிக்ஞைகளை உடை சொல்லிவிடுகிறது.
கேக் கடைக்குச் செல்கிறீர்கள்.
எதைப் பார்த்து வாங்குகிறீர்கள்.
அந்த கேக்கிற்கு உடுத்தப்பட்ட உடை மாதிரி இருக்கும் க்ரீம்மைப் பார்த்துத்தானே.
அப்படித்தான் உடை என்பது எனக்கு கேக் மீது விரவப்பட்டிருக்கும் க்ரீம்க்கான ஐஸிங்க் வொர்க் போல.
இது நான் சந்தித்த பெரிய பிரச்சினை.
அடுத்ததாக  பேருந்தில் நம் பக்கத்தில் அமருபவர்கள் இவன் பக்கத்துல உட்கார்ந்தா வசதியா இருக்குமா..இவனே இவ்ளோ இடத்தை ஆக்கிரமிச்சு உக்காந்திருக்கானே என வேறொரு சீட் இருக்கானு பார்ப்பானுக.

மதுரை தூத்துக்குடி பேருந்து அது. நான் ட்ரிப்பிள் சீட்டில் தனி ஆளாக அமர்ந்திருக்கிறேன். இருவர் வருகிறார்கள். அவர்கள் நண்பர்கள். இருவரும் சேர்ந்து அமர ஆசைப்பட்டனர்.
என் பக்கத்தில் இருவரும் அமர்ந்தார்கள்.
அடுத்த நொடியிலேயே வந்து அமர்ந்த இருவரும் பின் சீட்டுக்கு சென்று அமர்ந்தார்கள்.
மூன்று பேரும் குண்டா இருந்தா சரிப்பட்டு வராது என்றார்கள்.
நான் பொது பார்வைக்கு குண்டாகத் தெரிந்தது அப்பொழுது தான் தெரிந்தது.

மிகவும் பிஸியான டீ க்கடைக்கு முன் பைக்கை நிறுத்த வேண்டும்.
கிடைப்பது ஒரு சின்ன இடைவெளியாக  இருக்கும். அந்த இடைவெளியில் வண்டியை நிறுத்த வேண்டும்.
வேறு வழியே இருக்காது.
பிஸியான ரோட்டில் வேறு பார்க்கிங்க் இருக்காது.
இடம் கிடைச்சிருச்சேனு வேகமாக பைக்கை நுழைத்து நிறுத்திவிடுவேன். ஆனா பைக்கிலிருந்து இறங்கி பக்கத்துல நிக்குற இன்னொர் பைக்கை தள்ளிவிடாதபடி இறங்கனும்.
ஏதோ இந்தியா பாகிஸ்தான் பார்டர்ல எதிரிக்குத் தெரியாம இடுக்குல தப்பிக்கிற மாதிரி இறங்குவேன்.
கரெக்டா இறங்குறப்ப பக்கத்துல நிண்ட பைக்கோட ஹேண்ட் பார் என் வயித்துக்கு நேரா நிலைகுத்தலா நிண்டு ஹேன்ட்ஸ் அப்னு சொல்ற மாதிரி நீட்டிட்டு இருக்கும்.
வயித்த மூச்ச உள் இழுத்து ( எங்க இழுக்குறது)...உடம்பை வளைச்சா...(எங்குட்டு வளைக்கிறது) அங்குட்டு அந்த வண்டி இடிக்கும். இங்குட்டு நம்ம வண்டி இடிக்கும். ஜெயராம் ட்ட இருந்து தெனாலி கமல்ஹாசன் எல்லாத்தையும் தள்ளிவிட்டு விடை பெறுற மாதிரி கால தூக்கி நகர்வேன். எங்க வண்டிய தள்ளிவிடக்கூடாதுனு நம்ம கீழ விழுந்துருவோமோனு யோசனை வந்திரும்.
இப்படி வண்டியை நிறுத்தி வெளிய வரதே இப்படினா திரும்பி வந்து வண்டிய எடுக்குறதும் ஒண்ணுதான் , அலங்காநல்லூருல ஜல்லிக்கட்டுக்கு இறங்குறதும் ஒண்ணு தான்.
 இது நான் சந்தித்த ஒரு பிரச்சினை.
வண்டியை கூட்டத்துக்குள நிறுத்தி எடுக்குறது பிரச்சினையானு கேட்டால் ஆம். நான் ஒரு மருந்து விற்பனை பிரதிநிதி. குறைந்தது ஒரு நாளைக்கு பத்து பதினைஞ்சு இடத்துக்கு போகனும். அங்கங்க கிடைக்குற இடத்துல வண்டிய நிப்பாட்டி போகனும்.
அப்ப இது எனக்குப் பிரச்சினை ஆனது.
இன்னொரு பிரச்சினை இருக்கு. நான் உடல் எடை கூடுனதுல...சிலருக்கு நான் லேண்ட் மார்க் ஆனேன்.
ஒரு தங்கை என்னிடம் பேசும்பொழுது, அந்த அலுவலகத்துக்கு போங்கண்ணே, அங்க ஒருத்தர் மூணாவது சீட்ல இருப்பார். உங்க சைஸ் ல இருப்பார். கொஞ்சம் குண்டா....அப்படினு சொல்லுச்சு. ஆக நான் மனிதர்களுக்குரிய லேண்ட் மார்க் அல்லது வெயிட் மார்க் ஆகிவிட்டேன் எனத் தெரிந்தது.

ஒவ்வொருத்தருக்கும் ஒரு பிரச்சினை உடல் சார்பாக. ஆக, உடல் எடை குறைப்பது என்பது இந்தப் பிரச்சினைகளை அடிப்படையாக வைத்து ஒரு ஆசையாக என் மனதிற்குள் இருந்தது.
ஒரு லிபிட் புரொஃபைல் டெஸ்ட் எடுத்தேன். அதாவது நம் இரத்தத்தில் கொழுப்பு பற்றிய அறிக்கை.
ட்ரை க்ளிசரைட்ஸும் , கெட்ட கொழுப்பும் இருக்கும் அளவைக் காட்டிலும் அதிகமாய் இருந்தன. பிறகு இருக்காதா பின்னே....எல்லாம் முரட்டுத் தீனி தானே.
அது ஒரு காரணியாக எடை குறைப்பிற்கு என்னை இழுத்தது.
இன்னொரு நண்பன் கிட்னி பிரச்சினைக்குள் நுழைந்திருந்தான். அவன் பத்து கிலோ குறைக்க வேண்டும் என அவனது மருத்துவர் சொல்லியிருந்தாராம். மூணு மாதமாக வயித்தக்கட்டி இரண்டு கிலோ குறைத்தவன் அடுத்த மாதத்தில் ஒரு கிலோ ஏறி விட்டானாம். மருத்துவர் அவனைப் பார்த்து, நீயெல்லாம் யங்க்ஸ்டர். இப்பவே எடையை க் குறைக்கலாட்டி என்ன பண்றது. உன்னுடைய எடை காரணமாகவே உனக்கு இரத்த அழுத்தம் அதிகமாகி உன் கிட்னி பழுதாகி இருக்கிறது. கொழுப்பு அளவைக் கட்டுப்படுத்த நீ எடை குறைத்தே ஆக வேண்டும். நீ எடை குறைச்சா வந்து என்னைய பாரு. இல்லாட்டி நேரா ஒரு வருஷம் கழிச்சு உன் கிட்ணியைக் கையில் எடுத்துட்டு வா மாத்தி தரேன் என்று கழுவி கழுவி ஊத்தி அனுப்பியிருந்தார். ஆதலால் அவனும் எடை குறைப்பு பற்றிய முடிவுக்கு அவனும் வந்தான். இருவரும் சேர்ந்து இன்னும் இருவரைச் சேர்த்து ஒரு வாட்சப் குழுமம் ஆரம்பித்து உடல் எடை குறைப்பிற்கான உடற்பயிற்சிகளை ஆரம்பித்தோம்.
இது நான் சந்தித்தப் பிரச்சினைகளும் அதற்காக நான் எடுத்த முடிவும். நிபந்தனைகளுக்கு உட்பட்டது.
எடை கூடியிருக்குனு அப்படியே விட்டு தூக்கிச் சுமப்பதும் குறைப்பதும் அவரவர் கையில் .
இதுலாம் எடை கூடுதலாகி சந்தித்தப் பிரச்சினைகள்.
அப்ப எடை குறைக்கப் பிரச்சினையே வராதா...அப்படினு கேப்பீங்க தானே....
எடை குறைப்பதற்கும் எடை குறைப்பிற்குப் பிறகும் தான் ட்விஸ்ட்டே....இது வரை பார்த்துப் பயந்தது புலி பொம்மை..இனி தான் புலியே வருதுனு பயம் வரும் பாருங்க...அப்படி என்னனு கேக்குறீங்களா.....


ஹாஹா....

நிறைய பிரச்சினைகள் வரும்....


சைரன் ஒலிக்கும்....

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நானுனக்கு...

பூ தொடுத்தல்

இது தம்மு...இது ரம்மு....