டைகர்.

அதிகாலையில் எப்படி எழுவீர்கள்?
நீங்களாகவா?
இல்லை கடிகார அலாரம் அடித்தா?
இல்லை மனைவி அலாரம் அடித்தா?
இல்லை அப்பா ?
அம்மா?
உடன்பிறப்புகள்?
தொலைபேசி?
ஒரு நாய்க்குட்டி உங்களை எழுப்பியிருக்கிறதா...
அந்த உரிமையை நீங்கள் அதற்குக் கொடுத்திருக்கிறீர்களா.....
நான் கொடுத்திருக்கிறேன்.
அதன் பெயர் டைகர்.
ப்ரவுன் (பழுப்பு ) மற்றும் வெள்ளை கலந்த உடம்பு. முகம் வெளிர் பழுப்பு. பார்த்ததும் கொஞ்சத் தோன்றும் முகம். துடிப்பு. குட்டியாக வந்த பொழுதே அதன் துள்ளலைப் பார்த்து டைகர் என்று பெயர் வைக்கப்பட்டது.

காலையில் கதவைத் திறந்ததும் வீட்டிற்குள் வரத் துடிக்கும்.
எக்கும்.
அம்மாவின் மூன்றாவது பிள்ளை. என்னைய விட  உங்க அம்மாவுக்கு நாய் தான் முக்கியம் என்று என் அப்பாவின் புலம்பலுக்குக் காரண நாயகன்.

குட்டியாய் வந்த அடுத்த நாள் காலையில் பால் ஊற்றினோம். குடித்துவிட்டு அம்மாவின் காலுக்குள் புகுந்து புகுந்து ஓடி விளையாடியது. அவ்வளவு தான் அம்மா அடுத்த நாள் ஒரு பிளாஸ்டிக் பந்தை  வாங்கிப்போட்டார்கள். அதை கடித்து கடித்து உருட்டி விளையாட ஆரம்பித்தது. அதனுடன் பந்தைப் பிடுங்குவது ஓட விடுவது இப்படி வம்பு இழுப்பதுலாம் என் வேலைகள். இரண்டு நாய்க்கும் வேலையில்லை காலையில் னு அப்பா திட்டுவதெல்லாம் எங்களுக்குக் கவலையில்லை..(எங்கள் என்று சொன்னது அஃப்கோர்ஸ் நானும் டைகரும் தான்)

ஞாயிற்றுக்கிழமையில் நெடுதூரம் தூங்கினால் டைகர் உள்ளே வந்துவிடும். மெதுவாய் பக்கத்தில் வரும். அதன் முகத்தை என் தலைமுடிக்குக் கொண்டுவந்து முகர்ந்து பார்க்கும். முகத்தை என் உச்சந் தலையில் தேய்க்கும். தலையணையில் தலை சாய்த்து விழும் என் முதுகில் அதன் கை மற்றும் காலால் சுரண்டும்..ஆனால் நகம் படாது...முழித்துப் பார்ப்பேன்....விளையாடுவதற்கு வேகமாய் எழும்...."ஓய்...போயிரு..சப்புனு அறஞ்சிருவேன்...."னு ஒரு கத்து கத்துவேன்.
தலைமாட்டில் குத்த வைத்து உட்கார்ந்து கையால் என் தலையில் கை வைக்கும். எப்படியாவது என்னை எழுப்பிரும்.

காலையில் ஒரு நாள் விளையாட உள்ளே வந்தவன் (டைகர்) என்னை வம்பிழுக்க, நான் பேப்பர் படித்துக்கொண்டிருந்தேன். என் மேல் உரச நான் அதைத் தள்ளி விட...பேப்பருக்கு நடுவில் படுத்துவிட்டது. நான் பேப்பரை இழுக்க டைகர் விளையாடுகிறேன் பேர்வழினு பேப்பரைக் கடித்து இழுக்க கிழிந்தது....அப்பா படிக்காமல் பேப்பரை நான் எடுத்திருந்தேன். அதை டைகர் பதம் பார்த்தது. அப்புறம் என்ன....எங்கள் வீட்டிற்குள் தலைப்புச்செய்தி நானும் டைகரும் தான். பேப்பரைக் கிழித்தது சம்பந்தமாக அப்பா எங்களைக் கிழி கிழினு கிழித்தார்.

ஒரு முறை நண்பன் வந்திருந்தான்...அவனைப் பார்த்ததும் வாலாட்டிக்கொண்டே இருக்கும் அது. ஒரு நாள் விளையாட வாயைத் திறந்து கடிப்பது போல் செய்து விட்டது. அவன் பயப்பட....என் கையைக் கொடுத்து கடி என்றேன். என் மணிக்கட்டை வாயால் கவ்வியது. கடிக்கவில்லை.....ஆனால் அதன் மேல் தாடைக்கும் கீழ் தாடைக்கும் இடையில் என் கை...ஆனால் அது அழுத்தவில்லை...எப்படி அந்த லாவகம் அதற்குத் தெரிந்தது எனத் தெரியவில்லை....பலமுறை விளையாடும்பொழுது பந்தை வாயிலிருந்து பிடுங்கி என் கையைக் கொடுப்பேன்...."ஆம்பளைனா கடி டா...." னு பேசிருக்கேன்.  விட்டுருவான்...

ஒவ்வொரு முறையும் அப்பாவிற்குக் கோபம் வரும். அதன் செய்கைகள்...அதட்டுவார்..மிரட்டுவார்....ஆனால் அப்பா அம்மாவிற்குக் கொடுத்த கட்டளை டைகருக்கு சாப்பாடு வைத்துவிட்டு பிறகு தான் எல்லாருக்கும். ஏனெனில் நாங்கள் சாப்பிடும் பொழுது அது வந்து நிற்பது பாவமாய் இருப்பதாக அப்பா சொல்லியிருக்கிறார்கள். ஒருசேர சாப்பிட்டதுண்டு.

அம்மா ஆசிரியை...எங்கள் பகுதி மினி பஸ்ஸில் வீட்டைத்தாண்டி இற்ங்கி வருவார்கள். காலையில் போன் அம்மா சாயங்காலம் தான் வருவார்கள் என்பதால் அம்மாவை த் தூரமாகவே பார்த்து ஓடி எவ்வி எவ்வி..அது பல சேட்டைகள் செய்யும்...அதுனாலேயே அம்மா வரும்பொழுது ரஸ்க் வாங்கி வருவார்கள்...வந்ததும் ஏழு எட்டு துண்டுகள் ரஸ்க் போடுவார்கள்.

வீட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறி அமர்ந்து வேடிக்கைப் பார்க்கும் டைகர்..(நம்ம வளர்ப்பு..அப்படித்தானே இருக்கும்)
கல்லூரி முடிந்து வரும்பொழுது வாசலில் தான் இருக்கும்.ஏனென்றால் அம்மாவும் அதே நேரம் தான் வருவார்கள். ஒரு முறை நான் தெருவில் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தேன்... அது அமர்ந்து பார்த்துக்கொண்டிருந்தது. நான் அதைப் பார்த்தேன். அதுவும் என்னைப் பார்த்தது. அது என்னைப் பார்த்ததும் ஒரு சமிக்ஞை பண்ணும். அதை பண்ணியது. நானோ அதைக் கவனிக்காதபடி வீட்டைக்கடந்து நடையைத் தொடர்ந்தேன். அது முகத்தை மறுபடி சாதாரணமாய் மாற்றி ஆச்சரியமாய் பார்த்தது. அதன் அர்த்தம் என்னடா இவன் வீட்டிற்கு வராமல் வேறு எங்கேயோ செல்கிறானே என்று...நான் திரும்பி அதைப்பார்த்ததும் விளையாடுவது புரிந்து வாலாட்டிக்கொண்டு வந்தது.

மாலை ஒவ்வொரு மினிபஸ் வரும்பொழுதும் மினிபஸ்ஸை நன்றாய் கவனிக்கும். எங்கள் வீட்டைக் கடந்து ஒரு நிறுத்தம். இறங்குவோர்களைக் கவனிக்கும். அம்மா இறங்கும் நேரத்தில் சரியாய் அமரும். மூன்று பஸ்கள் வரை பார்க்கும். அம்மா இறங்கியதும் குதிக்கும். வாலாட்டும். பக்கத்து கடையில் அம்மா ஏதாவது வாங்கினாலோ இல்லை பக்கத்து வீட்டுக்காரர்களிடம் ஏதாவது பேசினாலோ ஒரு தழுதழுத்த குரலில் பேசும்..குரைக்காது...ஒருமாதிரி கொஞ்சி கத்தும். (நாய் வளர்த்தவர்களுக்குப் புரியும்)

கொஞ்ச நாளாய் அதன் நடவடிக்கை மாறியது. யாரோ கல்லால் எறிந்திருக்கிறார்கள் என நினைத்தோம். ஒரு பூக்கார பாட்டி இது உங்கள் நாயா...ஒரு ஆள் அடையாளம் காண்பித்து அவர் இதை பெரிய கம்பால் அடித்துவிட்டார்...அது ஒரு நாள் அவர் கடை பக்கம் போய் இன்னொரு நாயுடன் சண்டை போட்டது. விரட்டுவதற்கு கம்பால் அடித்திருக்கிறார்.
சரியாய் சாப்பிடவில்லை.இரண்டு நாளானது. மருத்துவரிடம் காண்பித்தோம். ஒரு மருந்து கொடுத்தார். இரவு அம்மாய் மடியில் படுக்கவைத்து வாயில் ஊற்றினார். நாங்கள் விளையாடுகிறோம் என நினைத்து குடித்து விட்டு துள்ளியது.
மறுநாள் எப்போதும் போல் இருந்தது. ஆனால் வழக்கமான் சுறுசுறுப்பு இல்லை. அம்மா பள்ளிக்கூடம் சென்றுவிட்டார்கள்.

ஐந்து மணிக்கெல்லாம் அம்மா வருவார்கள். ஆனால் நான்கு மணியிலிருந்து அது வாசலி அமர்ந்து பஸ்ஸைப் பார்க்க ஆரம்பித்தது. அப்பா அதைப் பார்த்து விட்டு பக்கத்து கடைக்குச் சென்று ரஸ்க் போட்டார்கள்...அதற்கு பசி போல அதுனால் தான் அம்மாவைத் தேடுகிறது என ரஸ்க் போட அதைப் பார்த்தும் அது சுவரில் அமர்ந்திருந்தது.
அரை மணி நேரத்திற்கெல்லாம் உள்ளே வந்திருக்கிறது. வீட்டிற்குள் செருப்பு போடும் இடத்திற்கு எதிராய் படுத்திருக்கிறது. அப்பா...என்னடா பசிக்குதா..னு கேட்டிருக்கிறார்கள். அப்பாவையே ஏக்கமாய் பார்த்திருக்கிறது. ரஸ்க்கை அதன் வாயில் வைத்திருக்கிறார்கள். சாப்பிடவில்லை.
ஒரு பஸ் போயிருக்கிறது. அம்மா வருவார்களென மறுபடியும் வெளியே வந்து பார்த்திருக்கிறது. கால் மணி நேரத்திற்கு ஒரு முறை ஒரு பஸ். சில நேரம் கழித்து மறுபடியும் உள்ளே வந்து படுத்துள்ளது. ஒரு வழியாய் அம்மா வந்திருக்கிறார்கள். கடையில் ரஸ்க் பாக்கெட் வாங்கி அதைக் கையில் பிடித்தபடி வந்திருக்கிறார்கள் அப்பொழுது தான் அதைப் பார்த்து அது துள்ளும்.
வாசல் கதவைத் திறந்தபோதும் அது பார்த்தபடியே இருந்திருக்கிறது.
ஆனால் படுத்துக்கொண்டே தான் இருந்திருக்கிறது.
அம்மா ..வாடா...ரஸ்க் இருக்கு னு சொல்லியிருக்கிறார்கள் ...
வரவில்லை.
உள்ளே வந்து செருப்பைக் கழற்றிக்கொண்டே பேசியிருக்கிறார்கள் ...
அப்பொழுதும் அது எழவில்லை.....
அம்மாவின் வருகைக்காக ...அவர்கள் எப்பொழுது வருவார்கள் என பஸ்ஸையும் வாசலையும் பார்த்து பார்த்து உயிர் தாங்கியிருந்த டைகர்...கண் திறந்தபடியே வாசல் பார்த்தபடியே இறந்திருந்தது...
.ஒவ்வொரு நாளும் வாசலில் அது அமர்ந்திருந்தது அம்மா வாங்கிவரும் ரொட்டித்துண்டுகளுக்காக அல்ல ...அதற்கும் மீறி ஒரு கனத்த அன்பு இருந்திருக்கிறது.

பஸ்ஸிலிருந்து இறங்கும் ஒவ்வொரு மனிதரின் முகத்தைப் பார்த்ததும் அது அம்மா இல்லை என இருந்ததும் என்ன நினைத்திருக்கும்....
இறப்பதற்கும் முன்னதாக அது பார்க்கத்துடித்தது ஏன்...ஒரு வித அன்பு தானே...அன்பு தானே எல்லோரையும் ஒரே கோட்டில் வாழவைக்கிறது. மொழி தேவைப்படாமல் வெறும் அன்பு என்ற் ஒற்றை ஊடகத்தில் ஊடுருவி மனதிற்குள் ஒரு பேரானந்தத்தை அது ஏற்படுத்தியிருந்தது..இரண்டு நாட்கள் சாப்பிடாமல் அப்பா அம்மா என எல்லோரும் எதையோ இழந்தது போலிருந்ததன் காரணம் என்ன...அந்த பாழாய்ப்போன அன்பு தானே..!

அன்பு உயர்திணை அஃறிணை வேறுபாடு பார்ப்பதில்லை...அது இல்லாமல் நாம் தான் அஃறிணையாய் இருக்கிறோம்...


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நானுனக்கு...

பூ தொடுத்தல்

இது தம்மு...இது ரம்மு....