கிருஶ்ணன் மாடு

நெற்றியில் மட்டும் வெள்ளையாக இருக்கும் மாடுகளைப் பார்த்திருக்கிறீர்களா.? யாரோ சிறு வயதில் என்னிடத்தில் மாடுகளுக்கு நெற்றியில் வெள்ளை இருந்தால் அது கிருஶ்ணன் மாடு என்று சொல்லியிருக்கிறார்கள். அந்நியன் படத்தில் விக்ரம் கதாபாத்திரத்தின் சிறு வயது பாத்திரத்திற்கு, அதன் பாட்டி கருடபுராணம் பற்றி சொல்லும்பொழுது அச்சிறு பையனுக்கு ஒரு ஜூம் (zoom) வைப்பார்களே அது போல் எனக்கும் மூளைக்குள் ஒளிந்துகொண்டது அந்த கிருஶ்ணன் மாடு.

ஆனால் ஒரு உண்மை என்னவென்றால் அந்த மாதிரி நெற்றியில் வெள்ளை பூத்த அதுவும் உடல் முழுக்க கருப்பாகவும் அல்லது பழுப்பாகவும் இருந்து நெற்றியில் சிறிய அளவு வெள்ளை இருக்கும் பசு மாடுகள் அழகு. அதை தடவிக்கொடுக்க வேண்டும் என்று ஆசையாக இருக்கும்.

மதுரை நகர்ப்புறத்தில் இரவு நேரத்திலோ அல்லது விடியல் காலையிலோ தெருக்களில் செல்லும் பொழுது பசுமாடுகள் ஓரமாய் அமர்ந்திருக்கும். பார்க்கவே சாதுவாய் அமர்ந்திருக்கும் மாடுகளின் கொம்புகளை நான் பிடித்து ஆட்டிவிட்டு நகர்வது உண்டு. அதுவும் அதுபாட்டுக்கு அமர்ந்திருக்கும்.

எங்கள் தெருக்களில் இது போன்ற பசுக்கள் காலையில் ஊர்வலம் வரும். கழனித்தண்ணீர் என்று சொல்வார்கள். சில வீடுகளில் வைத்திருந்து வரும் பசு மாடுகளுக்குத் தருவார்கள். மூன்று பசுமாடுகள் வந்துகொண்டிருந்தன. அவைகளே வீடுகளை பிரித்துக்கொண்டன. ஒரு மாட்டின் வாடிக்கை வீட்டை அது இருக்கும்பொழுது இன்னொரு மாடு வருவதில்லை. இந்த இலக்கணம் நாம் கற்றுக்கொள்ளவேண்டும்.

எங்கள் வீட்டிறகும் ஒரு மாடு வரும். சில சமயங்களில் தாமதமாக வந்தாலும் எங்கள் அம்மா அதற்காகன பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி காத்திருப்பார்கள். வீட்டு வாசலில் வந்து நிற்கும். அதைப் பார்த்ததும் அம்மா பாத்திரத்தை எடுத்து வீட்டிற்கு வெளியே வைப்பார்கள். வைக்கும்பொழுதே "என்ன! ஆடி அசைந்து வர்ற......வேகமா வரமாட்டியோ..என்று அதைச் செல்லமாக திட்டிக்கொண்டே (ஒரு டீச்சருக்கு கொஞ்சுவது கூட கொஞ்சம் கண்டிப்புடன் தானே இருக்கும்) பாத்திரத்தை வைப்பார்கள்.

ஒரு முறை மாடு வந்துள்ளது. யாரும் கவனிக்கவில்லை...அது பார்த்தது..எவனையும் காணவில்லை ...சரிபட்டு வராது என்று , தாழ்ப்பாள் போடாத வாசல்கதவைத் தள்ளிவிட்டு வண்டி வைக்கும் முகப்புப் பகுதிக்கு வந்துவிட்டது..அதையும் நாங்கள் பார்க்கவில்லை. மாடியிலிருந்து இறங்கி வந்த நான் மாட்டைப்பார்த்து ..."ஓய்...ஓய்....என்று கத்தினேன்....மாடு அப்படியே ரிவர்ஸ் எடுத்து வெளியே சென்றுவிடவேண்டும் பக்கவாட்டில் சென்றால் எஙகள் தோட்டம். அதில் நுழைந்துவிடக்கூடாது. நான் கத்திப்பார்க்கிறேன்...அது நகரவில்லை.....சத்தம் கேட்டு எங்கள் அம்மா வெளியே வந்தார்கள். எங்கள் அம்மாவைப் பார்த்ததும் அது முகத்தை ஒரு மாதிர்யாய் நிமிர்த்தியது. உடனே எங்கள் அம்மா பாத்திரத்தைத் தூக்கி வெளியே வா...என்றார்கள் ..அப்படியே ரிவர்ஸ் எடுத்தது...வெளியே வந்தது. அம்மா எப்போதும் அதற்கு அந்த கழணி பாத்திரத்தை வைக்கும்பொழுது கையை விட்டு கலக்கித்தான் வைப்பார்கள். அன்று குனிந்து பாத்திரத்தை வைக்கும்பொழுது கலக்கிக்கொண்டே இருந்தார்கள். அதுவும் பசி காரணமாய் வாயை உள்ளே விட முயன்றது. எனக்குப் பயம் மாடு அம்மாவை முட்டி விடுமோ...என்று....நான் கத்தினேன்..."அம்மா...முட்டிறப்போகுது..பாத்து..." அதற்கு எங்கள் அம்மா...."அதுக்கென்ன உன்னையமாதிரி அறிவில்லை னு நினைச்சியா....என்று சொல்லி தன் இடது கையை அதன் முகத்தைத் திருப்பும் படி செய்து வலது கையால் தண்ணீரைக் கலக்கி வைத்தார்கள்....அதுவும் மெதுவாய் குடித்தது. பின் சென்றது.

இப்படிப்பட்ட மாடு சில நாட்களாய் வருவதில்லை. இரண்டு மூன்று வருடங்கள் கழிந்து விட்டன. மாடுகளுக்குத் தண்ணீர் வைக்கும் பழக்கம் கூட நாங்கள் மறந்துவிட்டோம். சில நாட்களுக்கு முன்னதால் நாளிதழில் ஒரு செய்தி...மதுரையில் சிம்மக்கல் பகுதியில் மாடுகள் பசி தாளாமல் நோட்டீஸ் பேப்பர்களை திண்கின்றன அதிலுள்ள காகிதக்கூழ் மற்றும் பிளாஸ்டிக் காகிதங்கள் மாடுகளின் வயிற்றுக்குள் சீரணம் ஆகாமல் வயிறு வீங்கி பாலும் சுரக்காமல் மடி வீங்கி செத்து விடுகின்றன.....

எங்கள் வீட்டிற்கு வந்த கிருஶ்ணன் மாடு என்ன ஆயிற்று என்று தெரியவில்லை.....

நெற்றியில் வெள்ளை பூத்த மாடுகள் மட்டுமல்ல....பராமரிப்பின்றி சாலைகளில் தானமாக அளிக்கப்பட்ட மாடுகள்...பசியின் காரணமாய் கோயில் வாசலில் ஒரு வாழைப்பழத்திற்காகவும், அதன் தோலுக்காகவும் ஏன் வடை கூட கிடைத்தால் உண்பதற்குத் தயாராகும் பசிப்பிணி கொண்ட மாடுகள் எல்லாம் கிருஶ்ணன் மாடுகள் தான். ஆசீர்வதிக்கப்பட்டவையாய் வாழட்டும்....

கருத்துகள்

  1. கிருஷ்ணன் மாடு.. அனாதரவான மாட்டுக்கு நல்ல பெயர்தான்..
    //நெற்றியில் வெள்ளை பூத்த மாடுகள் மட்டுமல்ல....பராமரிப்பின்றி சாலைகளில் தானமாக அளிக்கப்பட்ட மாடுகள்..// புதுத் தகவல் !

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

A separation ஈரானிய மொழி திரைப்படம்

சைரன் 4

விற்பனைப் பிரதிநிதியின் தனிக்குறிப்புகள் 8