கொரொனாவும், டெங்குவும்.

மதுரையில் தீவிர ஊரடங்கு முடிவுக்கு வந்து சாதாரண ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. இரண்டுக்கும் பெரிய வித்தியாசம் இனி சரக்குகள் ப்ளாக்கில் விற்கமாட்டார்கள். கடைகள் கொஞ்சம் திறந்திருக்கும். வேலை இல்லாமல் இருந்தவர்கள் வேலைக்குச் செல்ல வாய்ப்புண்டு. மற்றபடி மக்கள் நடமாட்டத்தில் பெரிய வித்தியாசம் இல்லை. எல்லா மாண்புமிகு மக்களும் எப்பொழுதும் போல் தான் ரோட்டில் தான் திரிகிறார்கள்.
100 , 200 பாசிட்டிவ் நோயாளிகள் மதுரையில் வந்தபொழுது எல்லாம் தீவிர ஊரடங்கில் வீட்டில் இருந்துவிட்டு 400 சொச்சம் வரும் பொழுது ஊரடங்கு தளர்வது என்ன வகையான டிசைன் என்று தெரியவில்லை.
இப்பொழுது மதுரை உட்பட பல மாவட்டங்களில் மழை. குறிப்பாக தென் மாவட்டங்களில். கொசு வர ஆரம்பித்துவிட்டது. எஃப் எம் ரேடியோக்களில் மக்கள் நலவாழ்வுத்துறை அமைச்சகம் சார்பாக கொசுவை விரட்டுவோம் மலேரியா போன்ற தீவிர நோய்களை அழிப்போம் என்ற விளம்பரம் வருகிறது. கடந்தவருடங்களில் இது போன்ற பருவங்களில் டெங்கு தென் மாவட்டங்களைச் சூறையாடியது. குறிப்பாக 2017 2018 களில். இப்பொழுது கொசு பருவம் வந்திருப்பது டெங்குவை அதிகரிக்கச்செய்யும். இதை அரசாங்கம் நல்ல வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொள்ளும். ஏனென்றால் கரோனாவில் சாவதைத்தான் ஊடகம் காண்பிக்கும். டெங்குவில் சாவதை ஊடகம் காண்பிக்காது. மக்களும் ஊடகத்தில் காண்பிப்பதையும் வாட்சப்பில் வருவது தான் நிஜம் என்று வாழ்கிறார்கள். டெங்கு பற்றியும் அதில் ஏற்கனவே இறந்தவர்கள் கணக்கும் மக்களுக்குப் பெரியவிசயமாகத் தெரியப்போவதில்லை. அரசைப் பொறுத்தவரை
விழும் சாவுகளை டெங்குவின் கணக்கில் எழுதிவிடலாம். மர்ம காய்ச்சலுக்குப் பழி என்று.
மக்களும் கண்டுகொள்ளமாட்டார்கள். ( அப்படியா என வாயைப் பிளக்கவேண்டாம்..கடந்த வருடங்களின் வரலாறு அப்படி)

முந்தைய நாள் மருத்துவர் சீனிவாசன் ராகவன் sarcasm ஆக ஒரு பதிவு இட்டிருந்தார். கண்டென்ட்டை உருவிக்கொள்ளவா என்று அவரிடம் கேட்டுக்கொண்டேன்.
நேற்றைக்கு மதுரை உயர் நீதிமன்ற கிளையில் பாராசிட்டமால் விற்கக்கூடாது என்ற தம உத்தரவை நாங்கள் பிறப்பிக்கவேயில்லை என ஒரு குரங்குவித்தையாக குட்டிகரணம் அடித்திருக்கிறது தமிழக அரசு.
இது தான் பிஜேபி கம் அதிமுக அரசின் சாதனை.
ஒரு துறையில் மக்கள் எப்படி பாதிக்கப்படுகிறார்கள் என்பதை அவர்களுக்குத்தெரியாமலேயே பார்த்துக்கொள்வார்கள். மக்களும் யாருக்கோ நடக்கிறது என்று மிக்ஷர் சாப்பிட்டுவிட்டு போய்விடுவார்கள்.
இங்கு இணைய தளத்தில் இனி பாரசிட்டமால் கடைகளில் கிடைக்கும் என்று ஒருவர் சந்தோசமாகப் பதிவிட்டிருந்தார். பாரசிட்டமாலை விற்கவிடாமல் தடுப்பது இந்த அரசிற்குப் புதிது அல்ல.

கடந்த வருடங்களில் டெங்கு சீசனில் இதேபோல் பாரசிட்டமால் விற்கக்கூடாது என்றும் காய்ச்சல் நோயாளிகளை தனியார் மருத்துவர்கள் பார்க்கக்கூடாது என்றும் கெடுபிடிகள் இருந்தன. இந்த அடக்குமுறையின் வேரை நோண்டினீர்கள் என்றால் நோயின் தாக்கம் பொதுமக்களுக்குத் தெரிந்திரக்கூடாது என்பதாகத்தான் முடியும்.

மக்கள் மீதான அக்கறை என்று யாரும் சொல்லவேண்டாம். அப்படி அக்கறை இருந்திருந்தால் பிப்ரவரியிலேயே விமான நிலையங்களைக் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டுவந்திருப்பர்.

இப்பொழுது வரப்போகும் மழைக்காலமும் குளிர்காலமும் கொரோனா கிருமியின் வாழ்வியல் தகவமைப்பும் மிக மிக ஆபத்தானதாகவே இருக்கும். மதுரை போன்ற தென் மாவட்டங்களில் வீட்டுக்குள் டெங்குவும், வெளியே கொரோனாவும் என பயமுறுத்தல் அதிகமாகப்போகிறது.
டெங்கு சமயத்தில் சுகாதாரத்துறை முழு வீச்சோடு செயல்பட்டது என்று மாண்புமிகு சுகாதாரத்துறை அதிகாரி ராதாக்ருஷ்ணன் முன்னொருகாலத்தில் பொய் தரவுகளைக் காண்பித்தார். இப்பொழுது கொரோனா காலத்தில் அவரைச் சிறப்பு அதிகாரியாக நியமித்ததும் நிறைய நண்பர்கள் , சபாஷ் நல்ல அதிகாரி என்று கூறினார்கள்.
சென்னையில் டெங்கு சமயத்தில் வீட்டு வாசலில் மழை நீர் தேங்கியதால் ஒரு வீட்டுக்கு கொசு வளர்த்திருக்கிறீர்கள் என்று அபராதம் விதித்த காமெடி மறந்துவிடக்கூடாது. அது ஊடகத்தில் வெளிவந்து எல்லா மாநகராட்சி நகராட்சி கமிஷ்னர்களும் அப்படியான அபராதத்தைப் போட்டனர். அதை ராதாக்ருஷ்ணன் ஊடகங்களில் வீடு வீடாக நாங்கள் வருவோம். கொசு வளர்த்தீர்கள் என்றால் அபராதம் விதிப்போம் என்றார்.
எந்த அரசு மருத்துவமனையில் கொசு இல்லாமல் இருக்கிறது மழை நீர் தேங்கி கிடக்கும் நீதிமன்றங்கள் இல்லையா. அங்குலாம் அபராதம் விதிக்கத் துப்பில்லாத அதிகாரிகள் தான் டெங்குவைக் கட்டுப்படுத்தியதாய் பொய் சொன்னார்கள்.

அரசின் எண்ணமும் மக்களின் எண்ணமும் ஒன்று தான்.
யாரும் சாகக்கூடாது.
அப்படிச் செத்தால் அரசு , அதை வெளியில் சொல்லாது.
சாகாமல் தடுக்க அரசு என்னதான் பண்ணும். விளம்பரம் கொடுக்கும். எப்படி மழை நீரைத் தேங்கவிட்டு அபராதம் விதித்ததோ , அப்படியே மாஸ்க் அணியாவிட்டால் அபராதம் விதிக்கும். சமூக இடைவெளி இல்லையென அபராதம் விதிக்கும்.

தப்பிப்பிழைத்தலே வழி. இத்தாலியின் போக்கில் தான் நோயும் நாமும் பிரயாணிக்கிறோம் என்றபடிக்கு தயாராக இருங்கள். நம் மக்கள் தொகையில் முப்பது விழுக்காடு கொரோனா தொற்று வருவது உறுதி. மக்கள் திருந்தியபாடில்லை. கூட்டாக அரட்டை, மாஸ்க் இல்லாத முகங்கள், சுய சுத்தமற்ற பரிமாற்றங்கள் என ஊரடங்கு முடிவடைந்ததை கொரோனாவே செத்துவிட்டதாகத் திரிகிறார்கள். அதுசரி, விளக்கு ஏற்றினாலும், கைகளைத் தட்டினாலும் கொரோனாவை வெல்லலாம் என்ற புரட்சிகர தலைமையும் ஆதரவாளர்களும் சூழ் ஊரில் என்ன நடந்துவிடப்போகிறது.

கொரோனா நம்மை நோக்கி வந்தப் பருவம் முடிவடைந்துவிட்டது. இப்பொழுது நிகழ்வது, நாம் தான் கொரோனாவுடன் கட்டிப்பிடித்து உருண்டுகொண்டு இருக்கிறோம்.
எதற்கும் தயாராய் இருங்கள்.
பழனிக்குமார், மதுரை.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நானுனக்கு...

பூ தொடுத்தல்

இது தம்மு...இது ரம்மு....