மதுரை வங்கி மூடல்

மதுரையில் லாக்டவுன் நீடித்துக்கொண்டிருக்கிறது. நோய் தொற்றின் தீவிரம் அதிகரித்திருக்கிறது.
இருக்கட்டும்.
சுகாதாரத்துறை ஊழியர்கள் முடுக்கிவிடப்பட்டுள்ளார்கள்.
இருக்கட்டும்.
காவல்துறையும் கூட்டத்தைக் கட்டுப்படுத்துகிறது,
இருக்கட்டும்.

இந்த வங்கிகளுக்கு என்ன கொள்ளை வந்திருக்கிறது . ஷட்டரை பூட்டிக்கொண்டும் வெளிக்கதவைப் பூட்டிக்கொண்டும் உள்ளே வேலை செய்கிறார்கள். வெளியே போர்ட் வைத்திருக்கிறார்கள். தனி நபர் சேவை கிடையாது. ( மதுரை அண்ணா நகர் பேங்க் ஆஃப் இந்தியா)
எனக்குத் தெரிந்து இந்தியன் வங்கி ,பேங்க் ஆஃப் இந்தியா, இந்தியன் ஓவர் சீஸ் வங்கி களில் குறிப்பாய் முதியோர் பென்ஷன் மற்றும் படிப்பறிவில்லாத பாமர மக்கள் வந்து போகும் மற்றும் பரிவர்த்தனை செய்யும் வங்கிகள். நான் என் பகுதியை மையமாக வைத்து என் அனுபவத்தில் வைத்துச் சொல்கிறேன்.
ஒவ்வொருமுறையும் பேங்க் ஆஃப் இந்தியாவிற்குள் எந்தவித அவசரமான வேலையை வைத்துக்கொண்டு போனாலும் தாமதமாகிவிடும்.
காரணம் ஏதாவது ஒரு வயதான பாட்டி அல்லது தாத்தா , பணம் எடுக்கனும் எழுதித் தா சாமி என்று கேட்பார்கள். அவர்கள் எடுப்பது ஆயிரம் ரூபாய் அளவிற்குத்தான் இருக்கும். ஒருமுறை என் வேலை முடிப்பதற்குள் நான் எழுதிக்கொடுத்த ஒரு பாட்டி ஆயிரம் ரூபா இல்லயாம். எடுக்கமுடியாது. சாமி எண்ணூறு எழுதி தரியாப்பா என்று கேட்டிருக்கிறார். எழுதித்தந்தபொழுது இரு கைகளையும் கூப்பி வணங்கினார். இப்படியான ஆட்களுக்குச் சேவை செய்யத்தான் அரசு சம்பளம் தரும் அரசு ஊழியர்களும், பொது துறை நிறுவன ஊழியர்களும்.

நோய் தொற்று அதிகமாகிவிடும் என்று தனிநபர் சேவை ரத்து என்று பூட்டிக்கொண்டு பாதுகாப்பாய் வேலை பார்க்கும் மாண்புமிகு வங்கி ஊழியர்களே, உங்கள் உயிர் உங்களுக்கு முக்கியம் தான். இப்படியே உங்கள் வீட்டுக் குப்பையை எடுக்க வரும் ஒரு சாமான்யன் பூட்டிக்கொண்டு உட்கார்ந்தால் என்ன செய்வீர்கள். மார்க்கெட் வியாபாரிகள் பூட்டிக்கொண்டு அமர்ந்துவிட்டால்
உங்கள் வீட்டு சாப்பாட்டிற்கு காய்கறி எங்கிருந்து வரும்.
கூட்டம் ஜாஸ்தி, ஆன்லைனில் மருந்தை வாங்கிக்கொள் என்று மருந்து கடைக்காரன் பூட்டிக்கொண்டு உட்கார்ந்தால் அவசரத்திற்கு என்ன செய்வீர்கள்.
எதுவும் வேண்டாம், டாக்டர்களும், செவிலியர்களும் பூட்டிக்கொண்டால் என்ன செய்வது?
இவர்களுக்கெல்லாம் உயிர் இல்லையா, அவர்களும் பயந்துகொண்டு தான் இருக்கிறார்கள். இருந்தபொழுதும் மக்களுக்காகச் செய்யும் சேவையை நிறுத்தவில்லை.

எப்பொழுதெல்லாம் நீங்கள் நான் வங்கி ஊழியன் என்று காலரை தூக்கி சொல்கிறீர்களோ , அப்பொழுதெல்லாம் உங்களுக்குக் கடமை இருக்கிறது என்பதை மறந்துவிடாதீர்கள்.

மக்களுக்காகத்தான் வங்கிகள்.

நான் அரசு ஊழியன் என்று பெருமையாக மார் தட்டும் நேரத்தில் நீங்கள் வாங்கும் சம்பளம் ஒரு சாமான்யனின் வரியாய் கட்டும் பிச்சை தான் என்பதை மறக்கக்கூடாது.
வங்கியில் அடுத்தவன் பணத்தை எண்ணிக்கொண்டு அமர்வதால் உங்களுக்குச் சம்பளம் வருவதில்லை.
ஒட்டு மொத்த தேசத்தின் மக்களின் உழைப்பிலும் அதில் வரும் வரியிலும் வியர்வையிலும் தான் ஊதியமாய் பெறுகிறீர்கள்.

வங்கி ஊழியர்கள் அரசு ஊழியர்கள் என்பது பெருமை மிகக் கூறுவது இப்படியான இக்கட்டான சமயத்தில் ஓடி ஒதுங்குவதற்காக அல்ல. இப்படியான இக்கட்டான நேரத்திலும் நீங்கள் மக்களுக்காகச் சேவை செய்யவேண்டும். அரசு ஊழியனாக மக்களின் பணத்தைச் சம்பளமாக வாங்க வந்திருப்பவர்கள் , மக்களுக்கானச் சேவை செய்யாமல் அடங்கி முடங்கி பயந்து ஒதுங்கி இருப்பதற்கு வெட்கப்படவேண்டும்.

நோய் தொற்றும், ஊரடங்கும் ஏற்கனவே சாமான்யனின் வாழ்க்கைத்தரத்தைப் புரட்டிப்போட்டிருக்கிறது. சமூகத்தில் மேல்தட்டு மக்களிடம் கூட பணப்புழக்கம் குறைந்திருக்கும் காலகட்டத்தில் , வறுமைகோட்டிற்குக் கீழ் இருப்பவர்களின் நிலையை யோசித்துப்பாருங்கள்.அன்றாடங்காய்ச்சிகளும், ஏ டி எம் வசதியைப் பெற்றுக்கொள்ளாதவர்களும், பெற்றுக்கொண்டு அதை உபயோகிக்கத்தெரியாதவர்களும் என ஒரு வங்கியைச் சார்ந்திருக்கும் ஒரு கூட்டம் இருக்கிறது.
அவர்களைப் பற்றி எள்ளளவும் சிந்தனை இல்லாமல் இப்படி சில கிளைகளைப் பூட்டிக்கொண்டு பத்திரமாக இருப்பதற்கு எதற்காக அரசின் சம்பளத்தைப் பெற வேண்டும்.

ஏற்கனவே மத்திய அரசு டிஜிட்டல் இந்தியா என்று கையிருப்புப் பணத்தை வங்கிக்குள் முடக்கிவிட்டது. இந்நேரத்தில் வங்கி ஊழியர்கள் பூட்டிக்கொண்டு இருப்பது கேவலமானச் செயல். உயிருக்குப் பயந்தால் ராஜினாமா கொடுத்துவிட்டுப் போய்விடுங்கள்.



வங்கி ஊழியர்கள் ( மற்றும் அரசு ஊழியர்கள்) பெறும் சம்பளம் தாங்கள் செய்யும் வேலைக்கானது மட்டும் அல்ல, மக்களுக்கு நீங்கள் அளிக்கும் சேவைக்கும் சேர்த்துத்தான். இரண்டிற்கும் வித்தியாசம் இருக்கிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நானுனக்கு...

பூ தொடுத்தல்

இது தம்மு...இது ரம்மு....