களைத்துப்போயிருக்கிறாய்

மிகவும்
களைத்துப்போயிருக்கிறாய்.

எப்பொழுதும் சரிசெய்யப்படும்
நெற்றிமுடியை நெடுநேரத்திற்கு
ஒழுங்கு செய்யவில்லை..

பெரும் ஓவியத்தை
வரைந்து முடித்த
முந்தைய நாள்
கண்களின் அயற்சியில்
இன்னும் கொஞ்சம்
வண்ணம் ஒட்டிக்கொண்டிருக்கிறது.
எந்தத் தூரிகையுமற்று
அவை ஒவ்வொரு
சிமிட்டலிலும்
தீற்றல் பெறுகின்றன..

யாரேனுமொருவர்
மடிசாய்த்து
நெற்றிமுடி கோரி
தூங்கவைக்கலாம்
என்றபடிக்கு மிகவும்
களைத்துப்போயிருக்கிறாய்..

ஒரு நல்ல
கவிதையையொத்த
ஒரு காஃபி
இந்நேரம் உனக்குத்
தேவைப்படலாம்.

இப்படியான ஒரு
களைத்த தருணத்தில்
அப்படித்தான்
என் கைகளைப்
பற்றிக்கொண்டு
கூறியிருந்தாய்..

இரவெல்லாம்
மழைவடிந்த
சுவற்றுப்
பச்சை பாசியென
ஈரம்பொதிந்த
ப்ரியங்களை
மறைக்கும் திராணியற்று
களைத்துப் போயிருக்கிறாய்..

ஞாபகங்களை
மீட்டெடுக்கும்
தருணங்களில் கூட
ஆசுவாசத்தைக் காட்டாத
களைத்துப்போன
அவசரத்தின் வானத்தில்
ஒரு பிடிவாதப்பறவை
தன் தடயங்களை
மீட்டெடுத்துக்கொண்டிருக்கிறது
பெருஞ்சோகத்தின் நடுவே
என் பெயரைக் கூவி..

கைகளைப் பற்றிக்கொண்டு
உன்னிடம் பேச
அத்தனைக் கதைகளுண்டுதான்..
கதைகளுக்கு முன்னோ
கதை முடிந்த பின்னோ
ஒரு நெற்றிமுத்தம் மட்டுமே
இப்போதைக்குத் தேவையென்றபடிக்கு
மிகவும்
களைத்துப்போயிருக்கிறாய்...

canvas by camille selhorst

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

A separation ஈரானிய மொழி திரைப்படம்

சைரன் 4

விற்பனைப் பிரதிநிதியின் தனிக்குறிப்புகள் 8