கவிப்பேரரசு பிறந்தநாள்

சமூகத்தில் உலகமயமாக்கல் அனுமதிக்கப்பட்டதும், வாழ்வியலில் பின்நவீனத்துவங்கள் பல புகுத்தப்பட்டன. மனிதன் உண்ணும் உணவு , உடுத்தும் உடை, பாவனை, அவனது தோற்றம் எல்லாம் மாற ஆரம்பித்தன. மெல்ல ஒரு மனிதனின் கலாச்சாரமும் பழக்கவழக்கமும் மாற ஆரம்பித்தன. நம் தமிழகமும் இப்படியானப் பல புதிய மாற்றங்களை உள்வாங்கியது. மேற்கத்திய இசையும் இலக்கியமும் வெகு எளிதாக ஒரு மனிதனை வந்தடைந்தன. பிறிதொரு கலாச்சாரத்தை , இலக்கியத்தை மனிதன் தேடி அடைந்ததுபோக அவை மனிதனை வந்தடையும் காலமாக மாறியது. பல தமிழ்மாணவர்களும் இளைஞர்களும் மேற்கத்திய இலக்கியங்களையும் வட இந்திய ஹிந்தி இலக்கியங்களின் பாலும் போய்க்கொண்டிருந்தச் சமயம் என்பது தமிழ் இலக்கியலாளர்களுக்கு வெகு சிரத்தையானப் பருவம். இப்படியான இக்கட்டானச் சமயத்தில் தான் வைரமுத்துவின் பாடல்வரிகள் ஒலிக்க ஆரம்பித்தன.
மொழி ஆர்வம் மிகுந்தவர்கள் மொழியையும் பாடலையும் சந்தத்தையும் ரசிப்பது இயற்கையே. அவர்களுக்கு வைரமுத்துவைப் பிடித்ததில் என்ன ஆச்சர்யம் இருந்துவிடப்போகிறது. 
தமிழைப் பற்றி முழுதாய் அறிந்துகொள்வதற்கு முன் அல்லது பகட்டு படாடோபித்தனத்திற்காக ஆங்கிலம் மற்றும் இந்தி மொழி யை நாடிப்போனவர்களைத் தமிழ் மொழி பக்கம் கொஞ்சம் செவிசாய்க்கவைத்ததில் கூட வைரமுத்துவின் மீது பெரிய ஆச்சரியம் என்ன இருந்துவிடப்போகிறது.
பெரிய ஆச்சர்யம் என்பது காசு கொடுக்கிறோம். பொழுது போகப் படம் பார்க்கிறோம் , அதில் சண்டை வருகிறது, அதே போல் பாடல் வருகிறது. அவ்வளவே என்று ஒரு வர்க்கம் இருக்கிறது. அந்த வர்க்கத்தைத் தன் வரிகளில் இலகுவான தமிழ்வார்த்தைகளை ஒரு பாடலுக்குள் இட்டு அந்த வர்க்கத்தையே தமிழ் மொழிபால், தமிழ் இலக்கியங்களின் பால் திரும்பவைத்தது தான் ஆச்சரியம். 
வைரமுத்து உள் வந்த சமயம் திரையிசை வரிகளை ரசித்தவர்கள் சாதாரணர்கள் அல்லர். அவர்கள் வாலியின் வரிகளை, கண்ணதாசனின் வரிகளை வணங்கியவர்கள். அவர்கள் எதற்காகவும் தான் தொடரும் வாலியையோ , கண்ணதாசனையோ விட்டுக்கொடுக்காதவர்கள். அவர்களையும் திரும்பிப்பார்க்கவைப்பது தான் ஆச்சர்யம்.
இசையை மட்டும் ரசித்தவர்களை வரிகளின் பால் தாக்கத்தை ஏற்படுத்தும்வண்ணம்,
புத்தகமே வாசிக்காதவர்களைக் கவிதையின்பால் தாக்கத்தை உள்வாங்கும்வண்ணம் எழுதியவர் வைரமுத்து.
பாடலுக்குள் கவிநயத்தைப் புகுத்தும் சம்பிரதாயங்களுக்குள் கவிதையை அமரவைத்து கட்டுடைப்பு செய்தவர் வைரமுத்து.
வைரமுத்துவின் வரிகளைப் பாடலாகக் கேட்டு மகிழ்ந்து அவரின் கவிதைகளைத் தேடிப் பிடித்துப் படித்தவர்கள் ஏராளம்.
பொதுவாய் தமிழ் இலக்கியத்திற்கு வாசிப்பாளர்கள் என்பவர்கள்  ஒவ்வொரு பருவத்திலும் புதியதாய் முளைத்து வருவார்கள். அவர்களே எழுத்தாளர்களுக்குச் சொத்து. வாசிப்பாளர்கள் இல்லையென்றால் எழுத்தாளர்களுக்கு இங்கு வேலை இல்லை. அப்படியான தமிழ் இலக்கியத்தின் மீது ஈர்ப்பு ஏற்படும்படி எழுதி அதன் மூலம் பல இலக்கிய ஆர்வலர்களை வாசிப்பாளர்களாக மாற்றியவர் வைரமுத்து.
அதில் சிலர் வைரமுத்துவை முதன் முதலாகப் படித்து வாசிப்புலகிற்கு வந்து வைரமுத்துவை முழுதும் படித்து பிறகு அவரைத் தாண்டி பின் நவீனத்துவ இலக்கிய உலகில் புகுந்துள்ளார்கள். இன்று இலக்கிய எழுத்தாளர்கள் பட்டியலில் ராஜேஷ்குமாரையோ , வைரமுத்துவையோ , பட்டுக்கோட்டை பிரபாகரையோ அவர்கள் சொல்ல நாணலாம். ஆனால் புதிய ஆர்வலர்களை ஏற்படுத்துவது அசாத்தியமான வேலை. அதைக் கவிப்பேரரசு செய்திருக்கிறார் என்பது மறுக்கமுடியாத மறைக்கமுடியாத உண்மை.

ஒருவன் ஒரு துறையில் உயருவது சாதனை அல்ல.
ஒருவன் ஒரு துறையில் தொடர்ந்து உயரத்திலேயே நிற்பது கூட சாதனை அல்ல.
தன் பருவத்து போட்டியாளர்கள் எல்லாம் களைப்படைந்து ஓய்கையில், புதிய படைப்பாளர்கள் போட்டியாளர்களாய் உத்வேகத்துடன் களம் காண்கையிலும் கூட தன் வேகம் குறையாமல் அவர்களுக்கு ஈடுகொடுத்து அவர்களையும் தாண்டி உயரத்திலேயே நிற்பதுதான் சாதனை.

வைரமுத்துவின் மகனும் எழுத வந்துவிட்டார். அவர் இளைஞர்களை ஈர்ப்பதில் இருக்கும் சுவாரஸ்யத்தை விட, இன்றும் கவிப்பேரரசு எழுதி இன்றைய தலைமுறை ஈர்க்கப்படுவது தான் சுவாரஸ்யம்.
வைரமுத்து மொழியின் சுவாரஸ்யத்தை இலகுவாக்குகிறார்.
ஒருவனின் அழுகையை இன்னொருவருக்கு எழுதிக்காட்டி அழவைத்திருக்கிறார்.
ஒருவன் அழுதுகொண்டிருக்கும்பொழுது எங்கிருந்து கொண்டோ எழுதி அவனைத் தேற்றுகிறார்.
மொழி, அவருக்குத் தகவமைத்துக்கொள்கிறது.
அவர், மொழிக்குத் தன்னைத் தக்கவைத்துக்கொள்கிறார்.

வைரமுத்துவிற்கு முன், வைரமுத்துவிற்குப் பின் இன்னொரு வைரமுத்து இல்லை.
என்னை மொழியின் பால் நகரவைத்தது கவிப்பேரரசரின் எழுத்து தான். அன்னாருக்கு என் ப்ரியங்கள்.
பழனிக்குமார், மதுரை.

கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நானுனக்கு...

பூ தொடுத்தல்

இது தம்மு...இது ரம்மு....