செவலை..
கிபி 1995ல் மதுரையோட அவுட்டர் ஏரியால குடிபோனோம்.
முதன் முதலில் வீட்டுக்கு வந்த நண்பனொருத்தன், இது மதுரையா சிவகங்கையானு கேட்டான். அம்புட்டு அவுட்டர்.
அண்ணா நகர் சுகுனாஸ்டோர் தான் பக்கத்துல இருக்குற பஸ் ஸ்டாப் . பக்கம்னா மெதுவா நடந்து வந்தா 15 நிமிஷம் ஆகும். வேகமா நடந்தா 12 நிமிஷம் ஆகும். அந்த 12 நிமிஷம் டார்கெட் வச்சு நடந்தேன்னுவைங்க, டாக்குமென்டரில காந்தி உப்பு சத்யாகிரகத்துக்கு வேகமா நடக்குற மாதிரி காமிப்பாய்ங்கல அந்தமாதிரி இருக்கும்.
இதுல எங்க வீட்ட பாத்துட்டே ரெண்டு மூணு நிமிஷம் நடக்கனும்.
முழுக்க காலி பிளாட்டுகள்.
அப்ப பஸ்லாம் எங்க ஏரியாக்குள்ள இல்ல.
ஆட்டோவும் இருக்காது.
ஏன் தெரு லைட்டு கூட இருக்காது.
கொஞ்சம் ஈ, காக்கா, பாம்பு, நாய் அப்புறம் நாங்க
இதான் எங்க ஏரியா.
அப்ப நான் பதினொண்ணாவது படிச்சிட்டு இருந்தேன். ஸ்கூல் முடிச்சிட்டு ட்யூஷன் லாம் முடிச்சிட்டு வர நைட்டு எட்டாயிரும்.
ஊரே அடங்கிரும்.
அப்பத்தான் செவலை ய தெரியும்.
செவலை ஒரு நாய். வீட்டு நாய். அதுனால வீட்டுக்குள்ளேயே இருக்காது. தெருவில தான் நிக்கும்.
கிட்டத்தட்ட டான் மாதிரி.
செவல இருக்குற தெரு மொத்தமே 200 மீட்டர் தான். செவல வீட்ட தாண்டி தெரு வளைஞ்சு அடுத்த தெருல போய் முட்டும்.
அந்த 200 மீட்டர் தெருவும் இருட்டாத்தான் இருக்கும். அங்கங்க ஏதாவது வீட்டு வெளில லைட் போட்டு வச்சிருப்பாங்க. அந்தத் தெருவைத் தாண்டனும்னா முதல்ல செவலைய தாண்டனும்.
செவல கருப்பா இருப்பான்.
நரி மூஞ்சி அதுக்கு.
கருப்பா இருந்தாலும் உடம்புல அங்கங்க மஞ்சள் இருக்குறமாதிரி இருக்கும். நான் அத உத்துப் பாத்தது இல்ல ஏன்னா
முதவாட்டி நானும் செவலையும் நேருக்கு நேர் பாத்துக்கிட்டப்பவே நேரம் சரியில்ல.
செவல யார் மேலயோ கோபமா இருந்திருப்பார் போல. அந்தக் கோபத்த என் மேல காமிச்சார். உர்ர்ர்ர்ர்ர்ர்னு உறுமுச்சு. உறுமுறப்ப மூக்கு தசைலாம் சுருங்கி பல் லைட்டா வெளிய தெரிஞ்சது......
என்னங்கடா..ஒரு நாய நேருக்கு நேரா பாத்தது தப்பாடா...னு கடந்துட்டு வந்துட்டேன்.
அதுல இருந்து அந்தத்தெரு பக்கமே போகுறது இல்ல.
ஆனால் விதி வலியது.
ஒரு ஞாயித்துக்கிழமை இரவு ஏழு மணி இருக்கும்.நண்பன் ஒருத்தன் வீட்டுக்குப்போக வேண்டிய கட்டாயம்.
செவல வீட்டு வழியாத்தான் போகனும். வேற வழி இல்லனு ஆயிருச்சு.
நைட்டு நேரம் சைக்கிள்ல போயிரலாம்னு சைக்கிள எடுத்தா, எங்கண்ணன் ,
"இப்ப போற ,நைட்டு நேரம் எவனாவது வழிப்பறி பண்ணிட்டா என்ன பண்ணுவனு' கேட்டான்.
"என்ட்ட தான் காசு இல்லையே" னேன்.
'அதான் சைக்கிள் இருக்குல, அத புடுங்கிட்டா என்ன பண்ணுவனு' கேட்டான்.
ஜன்னலிலிருந்து எங்கப்பா எட்டி பாத்தாங்க. கேமராவ கட் பண்ணி ஆன் பண்ணா சைக்கிள புடுங்கியாச்சு.
நடந்துபோனேன்..
நார்மல் நாள்னாலே நைட்டு ஏழு மணிக்கு மேல எங்க ஏரியா பேய் பங்களாவா இருக்கும். இதுல ஞாயித்துக்கிழமை கேக்கவே வேணாம். பேய் மட்டும் தான் வெளிய திரியும்.
சைக்கிள் னா கூட சீட்டவிட்டு எந்திரிச்சு அழுத்தி வேகமா பறந்திரலாம். இப்ப அதுக்கும் வாய்ப்பு இல்லனு பயந்துட்டேசெவல இருக்குற ஏரியாக்குள்ள போனேன்.
எனக்குன்னு எல்லாமே கனக்கச்சிதமா நடக்கும். தெருக்குள்ள கால் வச்சதும் கரண்ட் கட் ஆயிருச்சு.
முடிஞ்சது சோலி.
லைட்டான வெளிச்சத்துல போனப்பவே செவல உறுமுச்சு.
மனசுக்குள்ள வேண்டிக்கிட்டேன், எந்த சாமிய நினைக்கலாம்னா ஒரு சாமியும் மனசுக்குள்ள வரல.
கடைசில பொன்மனி கல்யாண மகால் கிட்ட இருந்த ஒரு பிள்ளையார் சாமி தான் ஞாபகம் வந்தாப்புடி....
பிள்ளையாரப்பா, எப்படியாவது இந்தத் தெருவ கடக்கவச்சிரு, உண்டியல்ல அஞ்சு ரூபா போடுறேன். (அப்ப அது பெரிய காசு).
அந்தத் தெருலயும் பாதி வீடே இருக்காது. ஒரு பக்கம் முழுக்க கருவேல மரமும், சகதியுமா இருக்கும்.
நைட்டு பாதையே தெரியல.
தட்டுத்தடுமாறிப்போறேன்.
கல்லு கடக்கா, மண் கடக்கானே தெரியல...
பாம்பு கீம்பு வேற வரும்.
எனக்கு ஒரே லட்சியம், பாம்ப கூட மிதிச்சு கடி வாங்கிரு, செவலை மேல மட்டும் கால வச்சிராத...பிள்ளையாரப்பா....அஞ்சு ரூபா...பிள்ளையாரப்பா.....னு புலம்பிட்டே போனேன் .
செவல வீட்டு வெளிய ஒரு அரிக்கேன் லைட்ட தொங்கவிட்டுருந்தானுக.
செவல ஓனரும் அவரோட பொண்டாட்டியும் வெளியில உட்கார்ந்து காத்து வாங்கிட்டே பேட்டரி போட்டு ரேடியோல பாட்டு கேட்டுட்டு இருந்தானுக. ஏதோ ரஹ்மான் பாட்டுன்றத தவிர எந்த கண்ட்றாவியும் என் காதுல கேக்கல.
செவலய காணாம்.
இன்னும் இரண்டு வீடு தான், அத மட்டும் தாண்டிட்டா அடுத்தத் தெருக்குள்ள போயிருவேன்.
அங்குட்டு இங்குட்டுனு பாத்துட்டே நடந்து போறேன். செவலைய காணாம்.
பக்கத்துல வந்திருச்சு செவல வீடு.
இந்த நேரம் பாத்து அந்த செவல ஓனரம்மா...ஏய்...செவல..எங்க இருக்க...ஆளே காணாம்னு ஒரு சவுண்ட் கொடுத்துச்சு....
அந்தம்மா நாயத்தான் கூப்டுதுனு தெரிஞ்சுபோச்சு.
முடிஞ்சது சோலி.
அப்பத்தான் வயித்துக்கும் தொண்டைக்கும் உருவமில்லாத உருண்டையும் உருகுதடின்ற வரி அந்த பேட்டரி போட்ட ரேடியோடப்பால கேட்டுச்சு...
அது அப்படி பாடுச்சா இல்ல எனக்குத் தான்அப்படி கேட்டுச்சா னு தெரியல.....
நடுக்கத்துல நடந்தா வேகமா நடக்கலாம்னு அன்னைக்குத்தான் கண்டுபிடிச்சேன்.
செவல வீட்ட தாண்டிட்டேன்..
அவங்க வீட்ட தாண்டி அடுத்தத்தெருக்குள்ள வளையுறப்ப லைட்டா பின்னாடி திரும்பி பார்த்தேன். நடு ரோட்டுல நிண்டுக்கிட்டு வீட்ட பாத்துட்டு இருந்துச்சு.
அது அதுபாட்டுக்கத்தான் இருந்திருக்கு. நமக்குத்தான் பேஸ்மெண்ட் ஆடிருச்சு.
அதுக்கப்புறம் கொஞ்ச நாளைக்கு அந்தத் தெரு வழியா போகுறதே இல்ல.
இதுலாம் நடந்து ரொம்ப நாள் கழிச்சு மறுபடியும் அந்த நண்பன் வீட்டுக்குப் போகுற வேலை. ஆனால் விடியற்காலை அது.
ஆறு ஆறரை இருக்கும்.
அன்னைக்கு சைக்கிளில் போயிட்டேன்.
அன்னைக்கு மட்டும் வழிப்பறி பயம் லாம் இல்லையானு கேட்காதீங்க.
வழிப்பறிலாம் இருக்கத்தான் செஞ்சது.
எங்கண்ணன் எந்திரிக்கல.
தூங்கிட்டு இருந்தான்.
அதான் சைக்கிள்.
செவல இருக்கும் தெருக்குள்ள நுழைஞ்சதும் தூரத்துல பாத்துட்டேன். செவல நடு ரோட்டுல படுத்து இருந்துச்சு.
டான் வாழ்க்கைல இதுலாம் சகஜம் தான.
எனக்கு முன்னாடி காலைல வீடுகளுக்கு பேப்பர் போடுற அண்ணன் ஒருத்தர் போய்ட்டு இருந்தார்.
அவர் தினமும் இந்த வழில போறவர் தான, அவர் பின்னாடியே நம்மளும் சைக்கிள விட்டு தப்பிச்சிரலாம்னு அவர் பின்னாடியே போனேன்.
தூரத்துலேயே எங்க ரெண்டு சைக்கிள் வரதையும் பாத்துட்ட செவல எந்திரிச்சு ஓரமா போய் நிண்டுக்கிட்டு எங்களையே பாத்துட்டு இருந்துச்சு.
நான் மெதுவா, பெடல அமுக்குறத விட்டுட்டு, முன்னாடி போற பேப்பர் அண்ணனுக்கும் எனக்கும் கொஞ்சம் தூரம் ஆக்கிட்டேன்.
பேப்பர் அண்ணன் அவர் பாட்டுக்க போனார்.
கொஞ்சம் இடைவெளி விட்டு நான் போனேன்...
திடீருனு செவலை முகம் கோரமா மாறுச்சு...
நான் பெடல அமுக்குறத விட்டுட்டேன். வண்டி ஏற்கனவே அழுத்துன ஸ்பீட்டுக்கு போச்சு.
முன்னாடி போன பேப்பர்க்கார அண்ணன் சீட்ட விட்டு எந்திரிச்சு பெடல அமுக்கி வேகப்படுத்துனாரு...
அவருக்கும் செவலைக்கும் ஏற்கனவே வாய்க்கா தகராறு இருந்திருக்கும்போல.
திடீருனு செவல , அவர துரத்த ஆரம்பிச்சிருச்சு....பின்னாடியே.
பேப்பர்கார அண்ணன், சீட்டுல உட்கார்ந்துக்கிட்டு ரெண்டு காலையும் தூக்கிட்டு , ச்சூ...ச்சூ..னு சொல்லிட்டே போயிட்டாப்புடி. டக்குனு வளைஞ்சு கண்ண மூடி திறக்குறதுக்குள்ள அடுத்தத்தெருக்குள்ள மறஞ்சுட்டாப்புடி....
செவலையும் ரெண்டு வீடு வர அவர விரட்டிட்டு திரும்புது...
இதுலாம் நான் பாக்குறேன்.
இப்ப அந்தத் தெருல செவலயும், திருவாளர் அப்பாவி நானும் தான் இருக்கோம்.
ஓஹோனானா....வேற என்ன.......அதே பொன்மனி மஹால்..பிள்ளையாரப்பா...அஞ்சுரூபா.......பிள்ளையாரப்பா...
சீட்ட விட்டு எந்திரிச்சு அழுத்துனாத்தான நீ விரட்டுவனு சைக்கிள் சீட்டுல உட்கார்ந்துட்டு பல்ல கடிச்சுக்கிட்டே பெடல அதிகமா அமுக்குனேன்.
சிலபேர் வண்டி ஓட்டி பழகுறப்ப வண்டி அப்படியே நிக்கும், கண் வாய் பல்லு லாம் கடிப்பானுக, என்னமோ மூஞ்சியாலேயே வண்டி ஓட்டுறமாதிரி. அது மாதிரி பெடல காலுல மிதிக்கிறேனா இல்ல வாய்க்குள்ள பல்லால மிதிக்கிறேனானே தெரியல...அப்படி மிதிச்சேன்.
எனக்கு எப்போதுமே சந்தர்ப்பங்கள் நான் நினைச்ச மாதிரி இருந்தது இல்ல. பல்ல கடிச்சுட்டு பெடல அழுத்துனதுல, டொடக்குனு ஒரு சத்தம்.
சைக்கிள் செயின் அவுந்திருச்சு.
முடிஞ்சது சோலி...
பிள்ளையாரப்பா...அஞ்சுரூபா...பிள்ளையாரப்பா...
செவலை ஒரு லுக் விட்டுச்சு.
செயின் அவுந்துருச்சு என்னைய விட்டுருனு செவலை ட்ட சொல்ல இங்க என்ன ராம.நாராயணன் படமா காட்டுறானுக...
வண்டி அதுவா நகர்ந்து செவல வீட்ட தாண்டி நிண்டுச்சு.
இறங்குனேன்.
செவல பேப்பர்கார அண்ணன விரட்டிட்டு, அதே மூர்க்கத்துல என்னைய பாத்துச்சு.
நான் மெதுவா இறங்கி சைக்கிள உருட்டிட்டு போனேன். செவல வீட்டத்தாண்டி வண்டிய நிப்பாட்டி செயின மாட்டுனேன். சைக்கிள் டயர் ஃபோகஸ் கம்பி வழியா ஓரக்கண்ணால செவல என்ன பண்ணுது பாத்தேன். அது பாட்டுக்க நடு ரோட்டுல உட்கார்ந்துட்டு ஆ..ஆ..னு கொட்டாவி விட்டுச்சு. நான் டயர சுத்தவிட்டு கேப் ல வாய்ல இருந்த பல்லோட சைஸை பார்த்தேன்.
ஒரே அச்சு தான்...கால் கிலோ கறி யா சிக்கிருப்பேன்.
பொன்மனி பிள்ளையாரப்பா....அஞ்சு ரூபா உனக்குத்தான்ப்பா.....
பழனிக்குமார், மதுரை.
கருத்துகள்
கருத்துரையிடுக