சைரன் 10

மாற்று மருத்துவத்தைப் பற்றி ஆரம்பித்திருந்தேன்.  உண்மையில் சித்தா ஆயுர்வேத ஹோமியோபதி இன்னபிற மருத்துவம் அதாவது அலோபதிக்கு மாற்றாக உள்ள முறைகளில் சிறந்த சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஆனால் நிபுணத்துவமான மருத்துவர்களும் அச்சிகிச்சை முறைகளைப் பற்றிய விழிப்புணர்வும் மிகக் குறைவு.
எனக்குத் தெரிந்து என் பழைய நிறுவனத்தின் ரீஜனல் மேனேஜர் இரத்த அழுத்தத்திற்கு ஹோமியோபதி எடுத்து நிவர்த்தி பெற்றார். என் நண்பன் ஒருவன் சிறுநீரக கிரியாட்டினினும் அது சார் இரத்த அழுத்தமும் ஆயுர்வேத மருத்துவத்தில் சிகிச்சை அளிப்பதை சொல்லி வருகிறான்.

ஒரே ஒரு விசயம் தான். நல்ல மருத்துவர்களின் கையில் நாம் சிக்க வேண்டும்.

ஏன் என்றால் இப்பொழுது அலோபதியை எடுத்துக்கொண்டால் தலைவலி என்று போனால் கால்பால் எடு செப்ட்ரான் எடு டோலோ எடு என எல்லோரும் கூறுவார்கள். மருத்துவர் போதிய அனுபவம் இல்லை என்றாலும் அந்த அலோபதி மருந்து வேலை செய்துவிடும். இப்படி வெளிப்படைத்தன்மை மாற்று மருத்துவத்தில் இல்லை.

எத்தனை மாற்று மருத்துவர்கள் தான் கொடுக்கும் மருந்து யாருக்கும் தெரிந்துவிடக்கூடாதென லேபிள் இல்லாமல் தருகிறார்கள் தெரியுமா. சில ஆயுர்வேத சித்தா ஹோமியோ மருத்துவர்கள் பெரிய நிறுவனங்களின் மருந்தைக்கூட லேபிளைக் கிழித்து விற்கிறார்கள். இதனால் ஹிமாலயா என்ற ஆயுர்வேத நிறுவனம் தனது எல்லா மாத்திரைகளிலும் H என்ற முத்திரையோடு தயாரிக்கிறது.

நிறைய போலி மருத்துவர்கள் அந்த படிப்புகளைப் படித்து உரு மாறுகிறார்கள். நாம் பார்க்கப்போவது போலி மருத்துவரா என ஆராய்வது முதல் கடமை. உண்மையான மருத்துவர் மருந்தைப் பற்றிச் சொல்வார்.

ஏன் வர்மக் கலையிலும் மருத்துவமுறை உண்டு. ஆனால் அவர் சிறந்தவராக இருக்க வேண்டும். கை வலி போனவனை கையை உடைத்துவிடக்கூடாது.

2003 இருக்கும். அது ஒரு ஆயுர்வேத மருத்துவமனை. ஒரு மலை அடிவாரத்தில் மூலிகைகள் எல்லாம் பயிரிட்டு வர்மம் முறைப்படியும் அந்த மருத்துவர் சிகிச்சை அளிப்பார். உள்நோயாளிகள் என அட்மிஸன் எல்லாம் உண்டு.

நானும் என் நண்பர் சீனியர் விற்பனை பிரதிநிதியும் தொழில் சார்ந்து பார்க்கப்போனோம். அவரது கன்சல்டேஷன் அறை மிகப் பெரியது. ஓர் ஓரத்தில் எங்களை அமர வைத்து விட்டார். ஒரு நோயாளி வந்திருந்தார். பெண்.
அறுபது வயதுக்கு மேல் இருக்கும்.
மகளோ மருமகளோ அழைத்து வந்திருக்கிறார்கள்.
முழங்கால் நாள்பட்ட வலி.
மூச்சு இழுக்கையில் நெஞ்சு குத்துது.
இப்படி அந்தப் பாட்டி ஒவ்வொன்றாய் சொன்னார்.
மருத்துவர் நாடி பார்த்தார்.
முக எலும்பு தாடை கழுத்து எலும்புகளைப் பார்த்தார்.
அந்தப் பாட்டியை சுவற்றின் பக்கம் பார்த்து அமரும்படிச் செய்து பின்புறம் ரவிக்கையின் உள் கை விட்டு முதுகில் சில நரம்புகளைப் பிடித்தார். ஒரு நரம்பைப் பிடித்து மூச்சை இழு என்றார்.
அந்தப் பாட்டி இழுத்தது.
மூச்சு குத்துதா
ஆமா சாமி னு பாட்டி சொல்லூச்சு.

இப்பொழுது மருத்துவர் இன்னொரு நரம்பைப் பிடிக்க அது பாட்டிக்கு வலிக்க ஆ...ஆஆ னு கத்தியது.

மூச்சை இழு கிளவி னு மருத்துவர் அன்பாய் கேட்க
அதுவும் இழுத்தது.
நெஞ்சு குத்துதா னு கேட்டார்..
இல்ல சாமி இல்ல சாமி னு பாட்டி அலறுச்சு.
உடனே மருத்தவர் பிடித்த நரம்பை விட்டு இப்ப மூச்ச இழுனு சொல்ல
நெஞ்சு குத்துது சாமினு பாட்டி சொல்லுச்சு
மறுபடியும் அந்த நரம்பை இழுக்க பாட்டி ஆ..ஆஆ னு அலறி மூச்சு இழுத்து வலிக்கலனு சொல்லுச்சு.
உடனே மருத்துவர் எங்களையூம் அந்த பாட்டி உறவினரிடமும் தலையை ஆட்டி பாத்தீங்களா இங்க தான் பிரச்சினை னு நரம்பை பிடித்துக்கொண்டார்...

மருத்துவருக்கும் எங்களுக்கும் தூரம் இரூந்தது. நான் என் சீனியரிடம் கேட்டேன்...

எண்ணே...டாக்டர் பெர்ரிய ஆளா இருப்பாப்ல போலேயே...வயர பிடிச்சு லைட் எரியறத கண்டுபிடிக்கிறமாதிரி நரம்ப பிடிக்குறாப்லயே னு கேட்டேன்.
அதுக்கு அவர் சொன்னாரு..

நீ வேற பழனி...அந்தக் கிழவிக்கு நரம்ப இழுக்குற வலில நெஞ்சக் குத்துறது தெரியல...இந்த வலி அந்த வலிய டாமினன்ட் பண்ணிருச்சுனார்...

நான் சிரிச்சுட்டேன்..
டே பழனி சிரிக்காத டாக்டர் ஆர்டர் தரமாட்டாரு னார்...

இது நகைச்சுவையாக இருந்தாலும் நடந்த ஒரு நிகழ்வை பார்த்த விதம் வேறு வேறு. அதே மருத்துவர் சில நாட்கள் கழித்து நாடி பற்றிப் பேசுகையில் என் நாடி பிடித்து உனக்கு அல்சர் இருக்கானு கேட்டார்.
நான் இல்லனேன்.
வரப் போகுதுனார்.
அப்படியா னேன்.
வயிற்றுப் பொருமல் இரைச்சல் வரும். ரெண்டு மாசத்துக்கு இந்த மாத்திரை சாப்பிடுனு கொடுத்தார்.
எனக்கு அப்ப அந்தப் பிரச்சினை இல்லை என  மாத்திரை எடுக்காமல் விட்டு விட்டேன்.

2004 ல் அதை நான் உணர்ந்தேன். சரியான நேரத்தில் சாப்பிடும் எந்த மெடிக்கல் ரெப்பும் இல்லை. இப்பொழுது கூட எனக்கு அந்தப் பிரச்சினை உண்டு. பசித்து சாப்பிடாமல் பசி அடங்க வயிறு பொறும ஆரம்பிக்கும்.
நாடி மூலம் கணித்த
அந்த மருத்துவர் சிறந்த மருத்துவர். நமது நம்பிக்கை தான் ஒரு சிகிச்சை முறையை நேர்மறையாக மாற்றுகிறது.

நண்பர்களே எந்த மருத்துவமுறையாக இருக்கட்டும். மருத்துவர்களைப் பார்த்துத் தேர்ந்தெடுப்போம்.

ஆக நண்பர்களே ஒரு சாமானியனாக ஒரு மருத்துவமனையை எப்படி அணுக வேண்டும் ஒரு மருத்துவரை எப்படி நம்பலாம் என ஒரு பதிவாக எழுத ஆரம்பித்து பத்து பதிவுகளாக வந்ததை நானே எதிர்பார்க்கவில்லை. நிறைய பாராட்டுகள் மகிழ்ச்சியை அளிக்கின்றன. நேற்று தொழில்முறையாக மருத்துவர் நிஷாந்த் அவர்களைப் பார்த்தபொழுது சைரன் பதிவுகளைப் பற்றி பேசினார். கூடுதலாக அவர் சார்ந்திருக்கும் அல்லது நிபுணத்துவம் பெற்ற மனநோய் துறையில் கிராமங்களில் மனநோய் உள்ளவர்களை கோடாங்கியிடம் பேய் பிடித்திருக்கிறது என சென்று நோயாளி கையில் தலையில் சூடம் ஏற்றுதல் கத்தியால் கீறுதல் முடியை பிய்த்தல் என பத்தாயிரம் ரூபாய்க்கு மேல் செலவழித்து பிறகு மருத்துவரிடம் வருவதாகக் கூறினார். இதன் வீச்சை அவர் புரிந்து வாழ்த்தினார்.
ஒரு பயனுள்ள பதிவாய் எழுதியது மகிழ்ச்சியைத் தருகிறது.

தொடர்ந்து எழுத நண்பர்கள் கேட்டுக்கொண்டார்கள். எனக்கு ஏற்பட்ட அனுபவத்தை உணர்ந்த அனுபவத்தை உங்களிடம் பகிர்ந்தேன். சைரன் தலைப்பு இல்லாது இனியும் அதை நேரம் கிடைக்கையில் அதைச் செய்யலாம்.

ஒரு சாமானியனின் எழுத்தை அதுவும் எழுதத் தெரியாது என எழுத்தாளர்களால் அல்லது எழுதத்தெரிந்தவர்களால் முத்திரை குத்தப்பட்ட என்னைப் போன்ற அங்கீகாரம் இல்லாதவனின் எழுத்தையும் வாசித்த நண்பர்களுக்கு என் அன்பும் நன்றியும்...

சைரன் அன்பால் அணைகிறது.

முற்றும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நானுனக்கு...

பூ தொடுத்தல்

இது தம்மு...இது ரம்மு....