சைரன் 3

ஒரு மருத்துவரைத் தேர்ந்தெடுப்பது எப்படி என்பது தான் கேள்வி.

நமது குடும்பத்திற்கென்று ஒரு மருத்துவரை வைத்துக்கொள்ளுதல் எப்பொழுதுமே சிறந்தது.

எந்த மருத்துவராக இருந்தாலும் முழுதாக நாம் அவரை நம்ப வேண்டும். கொடுக்கும் மாத்திரைகளை நாம் நம்பி சாப்பிடவேண்டும். பொதுவாக எந்த சாமானியனும் நம்பத்தான் செய்வான். அதிலும் ஏதேனும் தவறு நடக்கிறதா என்பதை ஆராய வேண்டும்.

மருத்துவரிடம் நின்று கொண்டு எனக்கு என்ன நோய்னு கண்டுபிடி என்றுலாம் கேட்கமுடியாது. மாறாக நாம் தான் அவருக்கு நமது உபாதைகளைச் சொல்ல வேண்டும்.
மூன்று முறை எடுத்துக்கொள்ளலாம். ஒரு மருத்துவர் உங்களுக்குப் பிடித்துப்போக நீங்கள் தரும் வாய்ப்பு.

உங்களுக்குத் திடீரெனக் கடுமையான காய்ச்சல். இரவு முழுதும். மறுநாள் காலை ஒரு மருத்துவரை நீங்கள் பார்க்கிறீர்கள். சோதிக்கிறார். மருந்து தருகிறார். ஊசி போடுகிறார். மதியம் காய்ச்சல் இல்லை. இரவு மீண்டும் காய்ச்சல் வருகிறது. உடனே அந்த மருத்துவர் சரியில்லை என முத்திரை குத்தி விடமுடியாது. மறுபடியும் மருத்துவரைப் பார்க்கலாம். நாம் என்ன சொல்ல வேண்டும்.  மருந்து சாப்பிட்டால் காய்ச்சல் மூன்று மணி நேரம் இல்லை. மறுபடியும் வருகிறது எனச் சொல்ல வேண்டும்.
சிலர் இருக்கிறார்கள். என்ன டாக்டர் சரியில்லாத மருந்தைக் கொடுத்துட்டீங்க..காய்ச்சலுக்குக் கேக்கவே இல்லை. இப்படியெல்லாம் கேட்பது முட்டாள்தனம்.

ஏனென்றால் எந்த மருத்துவனும் தம்மிடம் வரும் நோயாளிக்கு குணமாகக்கூடாது என நினைக்கமாட்டான். எவ்வளவு ஆசைப்படும் மருத்துவரும் அப்படி நினைக்கமாட்டார்கள். குணமானால்தான் தமக்குக் கூட்டம் வரும் என்பது எல்லோருக்கும் தெரியும்.

உங்களுக்கு வந்திருப்பது வைரஸ் காய்ச்சல் என்றால் அதற்கு எந்த மருந்தும் இருக்காது. ஒரு மாதிரியாக உபாதைகளைக் கட்டுப்படுத்தலாமே தவிர மூன்று நாட்களுக்குக் காய்ச்சல் இருக்கத்தான் செய்யும். அதை நாம் தான் மருத்துவரிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளவேண்டும்.

ஒரு முறை சமஸ் என்ற விமர்சகர் அல்லது எழுத்தாளர் ஆனந்த விகடனில் வேலை பார்த்த பொழுது ஒரு கட்டுரை எழுதினார். மருத்துவர்கள் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துகொண்டு மாத்திரைகளை எழுதுகிறார்கள். மக்களைத் துன்புறுத்துகிறார்கள். விலை அதிகமுள்ள மாத்திரைகளை எழுதுகிறார்கள். குறைந்த விலை ஜெனிரிக் மருந்துகளை எழுதலாம். ஏன் இப்படி இருக்கிறார்கள் என எழுதி இருந்தார். அவரது முக நூல் இன்பாக்ஸ்க்கு எனது விளக்கத்தைச் செய்தியாக அனுப்பியிருந்தேன். பதிலே அவர் அனுப்பவில்லை. பிறகு ஒரு பதிவாக எழுதியிருந்தேன். இந்தச் சமூகத்தில் அரசியல்வாதிகள் ஏதேனும் சேட்டைகள் செய்யவில்லை என்றாலோ ஒரு வாரத்திற்கு அரசியல் களம் சூடாக இல்லை என்றாலோ பத்திரிகைகள் டிவிக்கள் வருடத்திற்கு ஒரு முறையாவது மருத்துவர்களையும் மருந்து நிறுவனங்களையும் இழுப்பது வாடிக்கை. மாற்றம் என்பது எல்லோர் பக்கமும் வேண்டும்.அது போலத்தான் சமஸ் எழுதியக் கட்டுரை. சிவகங்கை இராமநாதபுரம் மாவட்டங்களுக்குச் சென்று அங்கு இருக்கும் மக்களைப் பார்த்து மருத்துவத்தைப் பார்த்து எழுத வேண்டுமே தவிர ஒரு ஏசி ஹாலில் பேனா பேப்பர் கிடைத்துவிட்டதற்காக எழுதப்படுவது அல்ல மருத்துவ விமர்சனங்கள்.

விசயத்திற்கு வருகிறேன். பரமக்குடி பக்கம் ஒரு முறை வேலை பார்த்துக்கொண்டிருந்த பொழுது ஒரு ஆண் வருகிறார். காய்ச்சல். வைரஸ் காய்ச்சல் மூணு நாளுக்கு இருக்கும். சுடு தண்ணி குடி. கஞ்சி குடி. வேலைக்குப் போகாத நாளைக்கு. ரெஸ்ட் எடுத்தா சீக்கிரம் சரியாயிரும். சிகரெட் பீடி தண்ணி அடிக்காத. இப்படிலாம் மருத்துவர் சொல்கிறார்.
அந்த நோயாளி என்ன ச் சொன்னார் தெரியுமா...எனக்கு ரெண்டு ஊசி போடுங்க. நாளைக்கு வேலைக்குப் போகனும்.

இது தான் அந்த வட்டாரத்து மக்கள் மருத்துவருக்குத் தரும் அழுத்தம். மருந்தையும் அதன் அளவு முறையையும் நாம் மருத்துவருக்குச் சொல்லலாமா.. அப்படி அவர் சொன்ன மாதிரி மருத்துவர் செய்யலாட்டி அந்தக் காய்ச்சல் இருக்கும். அதனால் அந்த மருத்துவர் கெட்டவர் ஆகிறார்.

இப்படி எல்லாம் இல்லாமல் மூன்று முறை நாம் மருத்துவரை நம்ப நமக்கே வாய்ப்பு தரலாம். இது ஜெனரல் ப்ராக்டிஸ் பண்ணும் மருத்துவரை நாம் நம்புவதற்கு.

அது போக பல தாத்தா காலத்து டெக்னிக்குகள் இருக்கின்றன். அவருக்கு வரும் கூட்டம். அவரிடம் சிகிச்சை எடுப்பவர்கள் இப்படி ஒரு தரவாக நாம் ஒரு மருத்துவரைப் பார்க்க எத்தனிக்கலாம்.

சிலர் இருக்கிறார்கள். மருத்துவரிடம் செல்வார்கள். என்ன செய்கிறது என மருத்துவர் கேட்பார்.

சளி, காய்ச்சல், உடம்பு வலி, இருமல், தலைவலி. ரொம்ப டயர்டா இருக்கு.
மருத்துவர் ஒரு ஊசி போட்டு மருந்து எழுதுவார்.

நோயாளி மருந்து சீட்டை எடுத்துக்கொண்டு கடைக்கு வருவார்.
எவ்வளவு னு கேட்பார்.
ஒரு இருநூறு ரூபாய் என மருந்துக்கடைக்காரர் சொல்வார்.
நோயாளியிடம் காசு இருக்காது.
என்ன என்ன எழுதியிருக்கார் என கடைக்காரரிடம் கேட்பார்.
கடைக்காரருக்கு என்ன மேஜிக்கா தெரியும் இவன் போயி டாக்டர் ட்ட என்ன சொன்னானு..
இருந்தாலும் மருந்துகளின் விதத்தைப் பார்த்து தன்னோடு அனுபவத்தைப் பார்த்து மருந்துக்கடைக்காரர் சொல்வார்.

சளி காய்ச்சலுக்கு ஆன்டிபயாடிக்
காய்ச்சல் தலைவலி மாத்திரை
இருமல் மருந்து
ஒரு சத்து மாத்திரை.
ஒரு அல்சர் மாத்திரை.  மூணு நாளைக்கு.

நோயாளி என்ன பண்ணுவான். இருமல் மருந்துக்கு சுடுதண்ணி குடிச்சுக்கலாம். வேணாம்.
சத்து மாத்திரைக்கு சோத்தத் தின்னுக்கலாம். வேணாம்.
அல்சர் மாத்திரை...அல்சரே இல்ல...இதுக்கு மாத்திரை எதுக்கு..
காய்ச்சல் மாத்திரை சரி..
அப்புறம் அந்த ஆன்டிபயாடிக்குனான் என்னனு தெரியாது. அதுனால் அந்த இரண்டு மட்டும். ஆனா ரெண்டு வேளைக்கு .

இப்படித்தான் பெரும்பாலான மக்கள் வாங்குகிறார்கள். பிறகு காய்ச்சல் முத்தும். என்ன சொல்வாங்க...அந்த டாக்டர்ட்ட போனா இறநூறு ரூபாய்க்கு எழுதுனாரு ஒண்ணுமே கேக்கல னு பக்கத்து வீட்டுல புறணி பேசுவாய்ங்க...ஆனா டாக்டர் எழுதுன ஒண்ணுமே வாங்கிருக்க மாட்டாய்ங்க...

மருத்துவருடனும் மருந்துடனும் ஒத்துழைப்புத் தந்து போனால் தான் நமக்கு தீர்வுகள் கிடைக்கும்.

அது சரி...உண்மையிலேயே அந்த மருத்துவர் மோசமான மருத்துவராக இருந்து அவர் நமக்குச் சரியான வழியைத்தான் காட்டுகிறாரா இல்லை தவறுதலாக அசட்டுத்தனமாக இருக்கிறாரா என எப்படி நாம் கண்டுபிடிப்பது....


ஒரு நாளைக்கு வெயிட் பண்ணுங்க..சைரன் கத்தட்டும்............


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நானுனக்கு...

பூ தொடுத்தல்

இது தம்மு...இது ரம்மு....