சைரன் 6

மூன்று மாதக் குழந்தையின் கையில் வசம்பைக் கட்டியிருக்கிறீர்களா என்றுதான் முந்தையப் பதிவை முடித்தேன்.

அந்த காலத்தில் இருந்தே சில பழக்க வழக்கங்களை நாம் பின்பற்றுகிறோம். அந்த காலத்து அறிஞர்கள், சித்தர்கள் என நமது மருத்துவமுறைகளை வகுத்து அதைப் பின்பற்றும் படியும் அறிவுறுத்தியுள்ளார்கள். அதில் ஒன்று வசம்பைக் குழந்தையின் கையில் கட்டுதல்.

எதற்காகக் கட்டுறோம்னு நம்ம வீட்டு பாட்டிக ட்ட கேட்டா கரெக்டா சொல்லுவாங்க. குழந்தைகளுக்கு செரிமானம் ஆகுறதுக்குனு. வாந்தி வராம இருக்கிறதுக்குனு சொல்வாங்க.

சரி தான். அது முற்றிலும் உண்மை தான் . வசம்பின் மருத்துவ குணங்களில் குழந்தையின் செரிமானத்தைச் சரி செய்யும்.. அதே போல் பால் குடிக்கும் குழந்தைகளின் தொண்டையில் அந்த பால் துளிகள் சேகரமாகி படிந்திருக்கும். கிராமங்களில் அக்கரம் என்று சொல்வார்கள். வசம்பை தேனில் குழப்பி கொடுத்தால் அது வெளியேறும்.

இது தான் கதை.

ஆனால் நாம் அதை எப்படி பயன்படுத்துகிறோம். தேவைப்பட்டால் வசம்பு கொடுக்கலாம். இல்லை அந்தப் பிரச்சினை இருக்கும் குழந்தைகளுக்கு வசம்பு கொடுக்கலாம். இந்தா வச்சுக்கோ...எனக்கு கை வைத்தியம் தெரியும் னு குழந்தை பிறந்ததும் வசம்பைக் கட்டுறது என்னமோ குழந்தைக்கு பெயர் வைப்பது போல் ஆகிவிட்டது.

கொஞ்சம் அறிவியல் பேசுவோமா..

குழந்தை தாயின் வயிற்றை விட்டு வெளி வந்ததும் சுவாசம் ஒரு பிரச்சினை. சும்மா ராஜா/ ராணி மாதிரி மூச்சு கூட விடாம சொகுசா இருந்துட்டு வெளிய வந்ததும் குழந்தை சுவாசம் என்பதை வேலையாகச் செய்ய ஆரம்பிக்கும். அப்பொழுது மூக்கு மட்டுமில்லாமல் வாய் வழியாகவும் மூச்சு இழுக்கும். மூச்சு விடும்.
இதனால் நிறைய காற்று வயிற்றில் சேகரமாகும். இதை நாம் வாயு என் கிறோம்.
அதனால் தான் குழந்தைக்கு பால் கொடுத்து முடித்ததும் தோளில் போட்டு முதுகில் லேசாகத் தட்டி கொடுக்கச் சொல்வார்கள். ( நகரத்தாய்மார்கள் அதைச் செய்கிறார்களா எனத்தெரியவில்லை.) ஏன் என்றால் வாயு இருக்கும் வயிற்றுக்கு திரவ நிலை பால் செல்ல வாயு வெளியேறும். தோளில் போட்டு தட்டி கொடுக்க சில நொடிகளிலேயே குழந்தை ஏப்பம் விடும். சில குழந்தைகளுக்கு அடிக்கடி வாயு ஆசன வாய் வழியாகவும் வெளியேறும்.

இது அறிவியல்.

அப்படி ஏப்பம் விடும் குழந்தை அந்த காற்றோடு சமயத்தில் உள்ளே சென்ற பாலையும் சமயத்தில் வெளியேற்றும். உடனே வந்தால் ஒன்றுமில்லை. சில நேரங்கள் கழித்து வரும் பொழுது அந்தப் பால் கொஞ்சம் துர்நாற்றமாய் வரும். அதாவது பாதி செரித்து செரிக்காமல். இது இயற்கை. அதற்கு நாம் எக்களிக்குது. எதுகளிக்குது. வாந்தி..செரிக்கல..அப்படி இப்படினு பெயர் வைக்கிறோம்.

இதைக் கண்ட நம் முன்னோர்கள் வசம்பின் மருத்துவக் குணங்களை ஆராய்ந்து குழந்தைக்கு அதைக் கொடுத்தால் அது ஜீரணமாகும் என கையில் கட்டி விட்டார்கள். குழந்தை அடிக்கடி கையை வாயில் வைக்கும். வசம்பின் சாறு உள் சென்று அந்த அக்கரத்தையும் செரிமானத்தையும் கொடுக்கும். ஆனால் எல்லாக் குழந்தைகளுக்கும் அதைச் செய்யவில்லை.

இப்பொழுது உள்ள பிரச்சினைகள் என்ன என்ன தெரியுமா..

அ) வசம்பு விவசாயம் எங்கே நடைபெறுகிறது? அது உண்மையான வசம்பா
ஆ) வசம்பை அந்த காலத்தில் நூலிலா கட்டினார்கள்.
இ) இப்பொழுது இருக்கும் நூலில் சாயம் உள் சென்றால் என்ன ஆகும்?
ஈ) வசம்பைக் கடித்து அதே எச்சிலில் அம்மாவின் உடம்பை / நைட்டியை/ சேலையை/ ரவிக்கையை..கடிக்கும். இதில் சாயம், அழுக்கு, இதை எல்லாம் என்ன செய்வது.
உ) ஒவ்வொரு முறையும் தாய் தன் குழந்தைக்கு பால் கொடுக்கையில் தன் மார்பகம் சுத்தமாகத்தான் பராமரித்திருக்கிறாளா...தளர்வான பருத்தி ஆடை அணிந்து வியர்க்காமல் இருக்கிறாளா...அடிக்கடி பால் ஊற அதைக் குழந்தைக்கு அந்த அந்த நேரத்திற்கு கொடுக்காமல் தாமதமாகக் கொடுக்கிறாளா..

ஒரு கைக்குழந்தைக்கு ஒரு உடல் நலக் கோளாறு வருகிறதென்றால் 90 சதவீதம் அந்தக் குழந்தையினால் வருவதில்லை. அது சார்ந்திருக்கும் இந்த உலகம் மற்றும் மற்ற மனிதர்கள் அவர்களால் தான் வருகிறது.

இப்பொழுதும் ஒரு குறிப்பிட்ட இனத்தில் குழந்தை பிறந்தால் அந்தக் குழந்தையயும் அம்மாவையும் மூன்று மாதத்திற்கு யாரையும் பார்க்க விடமாட்டார்கள். காரணம் தொற்றுநோய் டமிலில் இன்பெக்ஷன் வந்திரும் என்று.

ஆக, வசம்பு கட்டுவது நல்லது. எதற்காகக் கட்டுகிறோம் எனத் தெரிந்து கட்டுவது அதை விட நல்லது.

நண்பர்களே...வசம்பின் நல்ல மருத்துவப் பயன் தெரிந்தது அல்லவா. ஒரு குறை இருக்கிறது. அதிக வசம்பு சூட்டைக் கிளப்பி வயிற்றுப் போக்கையும், வாந்தியையும் ஏற்படுத்துமாம்.

வாந்தி எடுத்தா வசம்பு கொடுக்கலாம்.
வசம்பு அதிகமாச்சுனா அதுவே வாந்தி கொடுக்குமாம்.....

தலை சுத்துதா.... சுத்தட்டும்...

இன்னொன்னு சொல்லட்டா...

UNESCO  அப்படினு ஒரு குரூப்ப அப்பப்ப கேள்வி பட்டுருப்பீங்க மக்களே...அவைங்க ஒண்ணு சொல்லிருக்காய்ங்க... என்ன னு தெரியுமா இந்தியக் குழந்தைகளுக்கு வைட்டமின் D3  குறைஞ்சு தான் பிறக்குதாம்.

அதுனால என்னாகும் னா..நம்ம குழந்தைகளின் எலும்பு ஸ்திரம் இல்லாம போகும்.

கை கால் முதுகெலும்பு, தாடை மண்டை ஓடு எல்லாமே எலும்புனாலத்தான் ஆனது.

உங்க குழந்தை உங்களுக்குத் தெரிஞ்சவங்க குழந்தைனு பிறந்திருக்கும்தானே...

இந்த விசயம் தெரியுமா உங்களுக்கு....

சைரன் இன்னும் சுழலும்....

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

A separation ஈரானிய மொழி திரைப்படம்

சைரன் 4

விற்பனைப் பிரதிநிதியின் தனிக்குறிப்புகள் 8