பால்கனி அறை.
எங்கள் வீட்டில் ஒரு ஹால் ஒரு அடுப்பறை ஒரு பூஜை அறை ஒரு படுக்கை அறை அது போக ஒரு அறை இருக்கிறது.
நடுவே ஹால். ஹாலின் இடப்பக்கம் இரண்டு அறைகள். வலப்பக்கம் இரண்டு அறைகள் என அமைப்பு.
கீழ் வீட்டில் இருந்து மாடி வீடு கட்டும்பொழுது கீழே வண்டிகள் வைக்க இருக்கும் முன் காலி இடத்தில் பில்லர் வைத்து அப்படியே மாடியில் ஓர் அறையாக வடிவமைக்கப்பட்டுக் கட்டினது.
பால்கனி அறை என்று வைத்துக்கொள்ளலாம்.
இரண்டு அடி தெருவை நின்று பார்க்கும்படியாகக் கட்டப்பட்டிருக்கும்.
தெருவிற்கும் நமக்கும் உண்டான பார்வை தூரத்திற்காக ஒரு இரும்பு வலை போட்டு பூசியிருப்போம். திருடர்கள் வரக்கூடாது என்பதற்காக.
அந்த அறைக்கு பால்கனி அறை எனப் பெயரிட்டு இந்தக் கட்டுரையில் எழுதியிருக்கேன் அல்லவா. அதை அப்படி இன்று இப்பொழுது தான் குறிப்பிட்டுள்ளேன்.
வீடு கட்டிய ஆரம்பப்பொழுதுகளில் கல்லூரியில் படித்த பொழுது நாங்கள் வளர்த்த டைகர் அங்கு உலவுவான். அந்த பால்கனியில் ஒரு மர ஸ்டூல் போட்டிருப்போம். அதில் ஏறி லாவகமாக அமர்ந்துகொண்டு தெருவை அவர் நோட்டம் இடுவார்.
அந்த ஸ்டூல் அங்கு அவருக்காக என் அண்ணனால் போடப்பட்டது தான். அது அவருக்கான இடம். அது அவருக்கான வசதி. கூடுதலாக ஒரு படி போய் டைகர் அப்படி உட்கார்ந்து ஒய்யாரமாய் நோட்டமிட்டதை ஒரு புகைப்படமாக எடுத்து குட்டி ஃப்ரேம் எல்லாம் போட்டு வைத்தோம்.
சில காலங்கள் ஓடிய பிறகு தோட்டத்தில் திடீரெனச் சத்தம். ஒரு கிளி அடிபட்டு கீழே விழ பூனையிடமிருந்தும் காகங்களிடமிருந்தும் காப்பாற்ற அம்மா எடுத்து வந்து அதற்கு மஞ்சள் பூசி முதலுதவி செய்து ஓர் அட்டைப் பெட்டி வைத்து மூடி அந்த அறையில் தான் பாதுகாத்தோம். கிளி தன் பறக்கும் இயல்பை இழந்திருந்தது அல்லது பாதிக்கப்பட்டிருந்தது.
அண்ணன் அதே சமயத்தில் தான் வேலை பார்த்த பள்ளிக்கூடத்தில் ஒரு கிளி அடிபட்டு விழுந்தது என்று கொண்டு வர ட்யூசன் படிக்கும் ஒரு மாணவன் ஒரு கிளி எங்கள் வீட்டில் இருக்கிறது எனக் கொண்டு வர அவசர அவசரமாக ஓர் இரும்புக் கூண்டு செய்யப்பட்டது. அந்தக் கூண்டு எதற்கு என்று கேட்க வேண்டும். இரவில் மூன்று கிளிகளும் உறங்க.
அப்ப பகலில் என்ன செய்யும் என்று யாரும் பயப்படவேண்டாம். முல்லைக்கு தேர் கொடுத்தது போல் கிளிகளுக்கு அந்த அறையவே கொடுத்திருந்தோம். பால்கனி வெளிப்பாகத்தில் போட்டிருந்த இரும்பு வலை அதற்கு உதவியாக இருக்க ஒரு கொடிக்கம்பியைக் கட்டினோம். ஓர் இரும்பு கம்பியையும் சொருகிவைத்தோம். பகலில் மூன்றும் தவழ்ந்து அந்தக் கம்பியில் நின்றுகொள்ளும். ஒரு தட்டில் தண்ணீர். இறங்கி வந்து குடித்துக்கொள்ளும். ஒரு தட்டில் சோறு மிக்சர் தக்காளி திராட்சை காய் மல்லி கொய்யா என்ன வேண்டுமோ அதுலாம்.
ஒரு கட்டத்தில் அணில் வந்து சாப்பிட நண்பர்களாய் மாறிவிட்டனர்.
அந்த காலகட்டத்தில் அது கிளி ரூம் என்று கூட பெயர் மாறிவிட்டது.
டைகர் காலத்திற்கும் கிளிகளின் காலத்திற்கும் இடையே நான் கம்ப்யூட்டர் வாங்கி அந்த அறையில் தான் வைத்திருந்தேன். ஆகையால் கம்ப்யூட்டர் ரூம் என்று கூட அழைத்துவந்தோம்.
ஒரு கட்டத்தில் டைகரும் இல்லை. கிளிகளும் இல்லை. ஆனால் கிளி ரூம் என்ற பெயர் மட்டுமே இருந்தது. சில வருடங்களுக்கு அந்த அறையில் தங்கியிருந்த ஓர் அணிலின் சாகசங்களைப் பற்றி ஒரு கட்டுரை எழுதியிருந்தேன். அதற்கு நான் வைத்திருந்த பெயர் ஜேக். ஆனாலும் கிளி ரூம் என்ற பெயரில் தான் ஜேக் கும் தங்கியிருந்தது.
காலங்கள் ஓட ஓட அந்த அறையில் பரணியிலிருந்த பழைய பொருட்கள் அகற்றப்பட்டன.
வீட்டிற்குத் தேவையான இன்வர்டர் எங்கு வைக்கலாம் என யோசித்தபோது எதுவுமே இல்லாத அந்த அறையில் ஓரத்தில் வைக்கப்பட்டது.
வீட்டிற்கு வரும் விருந்தாளிகள் அந்த அறையை விரும்பி தேர்ந்தெடுத்துக்கொண்டனர்.
வெளிச்சம். தெருவை வேடிக்கைப் பார்க்கலாம். மழையை ரசிக்கலாம். காற்று எனப் போதுமானதாய் இருந்தது.
மற்றொன்று வரும் விருந்தாளிகளுக்கான ஒரு தனிமை அங்கு இருந்ததாகவே எனக்குத் தெரிந்தது. வீட்டின் ஆட்களுக்கான பிரைவேசியிலிருந்து வரும் விருந்தாளிகள் தன்னைத்தானே பிய்த்துக்கொண்டு அங்கு இருந்துகொள்ளும்படியாக அந்த அறை அவர்களுக்கு அந்த வசதியைச் செய்துகொடுத்தது. ஹாலில் டிவி ஓடிக்கொண்டிருந்தால் கதவைச் சாத்திக்கொண்டால் சத்தமோ வெளிச்சமோ இருக்காது.
இது தான் அந்த அறை. அங்கு வரும் விருந்தாளிகளுக்கான அந்த அறை சுகமானதாகவே இருப்பதாக நான் நினைத்துக்கொண்டேன்.
என்னை விட வரும் விருந்தாளிகள் அந்த பால்கனியில் நின்றுகொண்டு தெருவை வேடிக்கை பார்ப்பார்கள். சடங்கு சீர் ஊர்வலத்தை, சவ ஊர்வலத்தை, கட்சிகளின் ஊர்வலத்தை அல்லது வெறும் மக்களின் நடமாட்டத்தை. விருந்தாளிகளுக்கு இருக்கும்பொழுது போக்குகளில் அதுவும் ஒன்று.
கடந்த வாரத்தில் வெரிசெல்லா வைரஸ் தாக்கி அம்மை நோய்க்கு ஆளானேன். வைரஸ் கிருமியின் தொற்று ஏற்படும் என்பதால் அந்த அறையில் என்னை நானே அடைத்துக்கொள்ள வாய்ப்பு கிடைத்தது. இரவு அந்த அறையில் தான் படுக்கை.
நோயின் தீவிரம் இருந்த கடைசி செவ்வாய் புதன் வியாழக்கிழமைகளின் இரவில் தான் அந்த அறை எப்படி எல்லாம் வியாபித்திருக்கிறது என்று தெரிந்தது. இரவு எட்டரை மணிக்கெல்லாம் விளக்குகளை அணைத்துவிட்டால் வீட்டு வாசலில் இருக்கும் மின் கம்ப வெளிச்சம் இருக்கிறது. அறையின் பால்கனி வாசல் வரை.
தெருவில் செல்லும் வண்டிகளின் இஞ்சீன் இரைச்சல் போக தெருவில் போகும் மக்களின் சத்தம் தனித்தனியாகக் காதுகளில் விழுகிறது.
சிலர் வண்டியை நிறுத்தி அலைபேசியை வீட்டின் வாசலில் நின்றுகொண்டு பேசுவது கேட்டது. ஒரு நாள் இரவு ஒன்பதரை மணிக்கு நின்று பேசியவரின் வண்டி ஸ்டார்ட் ஆகவில்லை. வெகுநேரம் வண்டியை மிதித்துக்கொண்டிருந்தார். தலைவலி காலங்களில் காதுகள் கூர்மையாகவே இருக்கின்றன என்று கண்டுபிடித்துக்கொண்டேன்.
இருக்கும் தலைவலியின் உச்சத்தில் ரோட்டில் செல்லும் ஷேர் ஆட்டோவின் ஸ்பீக்கர் பாட்டு அதீத வலி.
உள்ளே அமர்ந்திருக்கும் பயணிகளுக்குத் தலைவலி இருந்திருக்கக்கூடாது.
இல்லை சத்தத்தின் காரணமாக தலைவலி வந்துவிடக்கூடாது என்று கூட நினைத்துக்கொண்டேன்.
மெல்ல நடு நிசி ஆகிறது. தெருவும் அதன் மின் விளக்குகளும் அன்று அழகு.
இரண்டு மணிக்கு ஐந்து நிமிடம். பால்கனியில் நின்று பார்த்தால் தெருவில் இருள் மின்விளக்கு வெளிச்சம் பிற்கு இருள் பிறகு வெளிச்சம் என இருக்கிறது. ஒரு நாய் தெருவோரத்தில் ஓடி யோடி எதையோ மேய்கிறது.
பெருந்தனிமை இருக்கிறது.
ஒரு நெடிய பாம்பு தன் மேல் இருளைப் போர்த்த முயன்று ஆங்காங்கு வெளிச்ச ஆடையைச் சரியாக உரிக்காமல் இருப்பதுபோல் தெரு வளைந்து செல்கிறது.
அன்றைய தினத்து உச்சரிக்கப்படாத வாதைகளின் வார்த்தைகள் பெருஞ்சோக மௌனமாய் ஒவ்வோர் வீட்டின் வாசலிலும் இருளாய் கவிழ்ந்து கிடக்கின்றன.
இருள் எப்பொழுதுமே அழகு தான். வலிகளையும் வாதைகளையும் அது சார் மௌனங்களையும் தொடுத்துக்கொண்டே இருக்கும்.
யாருமற்றப் பொழுதுகளிலெல்லாம் ஏதோ ஓர் இருள் தானே மனத்திற்குள்ளும் பொதிந்து நம்மையும் விழுங்கி தின்று விடுகிறது.
தனிமைகளுக்கு நாம் நம்மைத் தின்ற கொடுக்கிறோமா இல்லை தனிமைகளை நாமே நமக்கேற்றபடி சுவைத்துக்கொள்கிறோமா என்பதில் தான் இருளும் வெளிச்சமும்.
வலியுடன் கூடிய இந்த இரவில் எனக்கென்று ஒரு சிட்டிகை இருளை எடுத்துக்கொள்ள அவ்வளவு ஆசை.
கண்களை மூடிக்கொண்டால் முழுக்க இருள் தான். ஆனால் ப்ரியங்களைத் தேடிக்கொண்ட ஏதோ அதிர்வுற்ற ப்ரிய நரம்புகளிலிருந்து மூளைக்கு ஓர் இசை சமிக்ஞையாகச் சென்றுகொண்டே இருக்கிறது. ஏக்கங்களைத் தூண்டலாகப் பெறும் மூளைக்கென்று தனி இதயம் இல்லை தானே. சமிக்ஞைகளுக்குப் பதில் சமிஞைகள் தானே மூளையின் வேலை.
மீண்டும் படுக்கை வந்து இருளுக்குள் பொதிந்துகொள்கிறேன்.
என் டைகர் இங்கு தானே சில காலம் படுத்திருந்தது. அதன் வாதைகளைத்தான் இந்த அறையிலிருந்து பிரபஞ்சத்திற்குத் தூது விடுத்திருந்தது. பறக்கவே இயலாத சில கிளிகள் தானே இந்த வளைந்து நெளியும் தெருவின் நீளத்தையும் அண்ணார்ந்து பார்த்த பரந்த வானத்தையும் நினைத்துப் புழுங்கியிருக்கும். பெரிய பால்கனி இரண்டரை அடிக்கு இரும்பு வேலி கூட அவற்றிற்கு கூடு தானே. பறவை இறகற்றுக் கிடப்பது மனிதனை விட பாவப்பட்ட நிலை.
ஒரு கட்டத்தில் தொடமுடியாத தூரத்தில் நின்றுகொண்டு சிரித்துக்கொண்டிருந்த தூக்கத்தை எட்டிப் பிடிக்கிறேன். கண்களை மூடிக்கொண்டாலும் கூட இன்வர்ட்டரில் இருந்து வரும் சின்னஞ்சிறிய பச்சை நிற எல் இ டி விளக்கு அவ்வளவு வெளிச்சமாய் வாதையைத் தருகிறது.
புலப்பட்டுக்கொண்டே உணர முடிகிறது என்றால் தேடிக்கொண்ட ப்ரியமாய்த்தானே இருக்கிறது.ப்ரிய வாதைகள் கூட அப்படித்தானே.
ஏனோ ப்ரியங்களுக்கான ஒரு தேடல் வந்துவிடுகிறது. வாதையின்போது தானே ப்ரியங்களைத் தேடுகிறோம். இந்த அறை ஏதோ என்னிடம் பேசுகிறது.
ஆகச் சிறந்த மொழி என்பது கூட ஒருவகை மௌனத்தில் மொழிவது தானே.
இந்த அறையில் அந்தச் சத்தம் கேட்கிறது.
இந்த அறையில் தான் ப்ரியங்களைத் தேடுவதற்கான இயல் இருக்கிறது.
இந்த அறையில் தான் ப்ரியங்கள் கூடு கட்டி வாழ்கின்றன.
இந்த அறையில் தான் ப்ரியங்களைத் தேடப் பொழுதுகள் விடிகின்றன.
இந்த அறையிலிருந்து தான் ப்ரியங்களுக்கான பிரபஞ்சம் விரிய ஆரம்பிக்கிறது.

கருத்துகள்
கருத்துரையிடுக