லாவகம்

அவர் இப்பொழுது சென்றுகொண்டிருப்பது அருணாச்சலப்பிரதேசப் பகுதியின் எல்லையோரக் காட்டுப் பகுதி.
அவர் வனத்துறையின் உயர் அதிகாரி. வன உயிரின மற்றும் எல்லா உயிரின ஆரவலரும் கூட.
அவரும் அவருடைய நண்பரான ஒரு கால்நடை மருத்துவரும் ஒரு டிரைவருடன் காரில் செல்கிறார்கள் ஒரு தேடலை நோக்கி.

அடர்ந்த காடு அது.
 எங்கும் மரங்கள்.
எங்கு பார்த்தாலும் தாவரங்கள்...மலை முகடுகள்..
 வானத்திலிருந்து பார்த்தால் பூமியின் உடம்பில் பச்சை வண்ணம் தீட்டியிருப்பதாகத் தோற்றம்.
சின்ன சின்னச் செடிகள், கொடிகள், சிறு மரங்கள், பெரிய மரங்கள்.
 மண் வாசனை, இலை வாசனை. பழ வாசனை. பூ வாசனை.
 பூச்சிகளின் சத்தம்.
 தூரத்திலிருந்தும் பிறகு அருகிலிருந்தும் கேட்கும் பறவைகளின் சத்தம்.
அது ஒரு காடு என்பதைத் தன்னிடமுள்ள எல்லாவற்றிலும் காண்பித்துக்கொண்டிருந்தது. சில செடிகளை விலக்கியும், சில கிளைகளை வளைத்தும், குனிந்தும் சென்றனர்.

பக்கத்துக் கிராமத்துக்காரப் பையன் ஒருவன் குறுக்கிட அவனிடம்  தான் கொண்டு வந்திருந்த புகைப்படங்களை அவர் காண்பித்தார்.
டிரைவருக்கு அது புதிராக இருந்தது.
 அவை இரண்டு சிறுத்தைக் குட்டிகளின் புகைப்படங்கள்.
அவரும் அந்த மருத்துவரும் தேடிக்கொண்டிருப்பது இரண்டு சிறுத்தைக்குட்டிகளை. இந்தக் காட்டில் எல்லா விலங்குகளும் உண்டு.
 பல சிறுத்தைகளும் உண்டு.
அவற்றில் இந்த இரண்டு சிறுத்தைகளை மாத்திரம் தேடுவது எதற்காக என டிரைவர் குழப்பமுற்றிருந்தார்.
ஆனாலும் தன் மேலதிகாரிகளிடம் அவனுக்குக் கேட்பது சங்கடம்.
அந்த கிராமத்துப்பையன் பார்க்கவில்லை என்று சொல்லிவிட மேலும் நகர்ந்தார்கள்.

இப்பொழுது அவர் விசில் அடித்தார். விசில் அடித்து கூப்பிடும் அளவுக்கு அவருடைய விசில் அந்த சிறுத்தைகளுக்குப் பரிச்சயமாயிருக்குமா என்பது டிரைவருக்கு இன்னொரு குழப்பம். அவர் சிறிது இடைவெளிவிட்டு மறுபடியும் மறுபடியும் விசில் அடித்துக்கொண்டே வந்தார்.

இப்பொழுது சற்று உரத்தக்குரலில் ...வேக்....என்றும், தேஜ் என்றும் கூப்பிட்டார். டிரைவருக்குப் புரிந்தது இவை அந்த சிறுத்தைகளின் பெயரென்று. விசில் அடித்துக்கொன்டும், அழைத்துக்கொண்டும் நெடு தூரத்திற்கு சென்றார்கள். மழை தன் பருவகாலத்திற்கு முன்னதாகவே சாரல் விட ஆரம்பித்தது. இனி மழை ஆரம்பிச்சுரும் என்று டிரைவர் சொன்னார்,
வாங்க முகாமிற்குச் செல்லலாம், என்றார் மருத்துவர்.
அவர் சற்று அமைதியுடன் சுற்றி சுற்றிப்பார்த்தார். சிறுத்தைகள் கண்ணில் பட்டுவிடாதா என்ற ஏக்கம் அவருக்கு இருந்ததை மருத்துவருக்கு புரிந்தது.
வேண்டா வெறுப்பாய் அவர் ஒப்புக்கொண்டார்.

பிறகு மூவரும் திரும்பினர்.

அப்பொழுது இரவு வருவதற்கு ஆயத்தமாயிருந்தது.
சற்று லேசான மழை.
முகாமில் அவர் தங்குவதால் அவரை அங்கு இறக்கி விட்டுவிட்டு,
 டிரைவரும் மருத்துவரும் விடைபெற்றுக் கொண்டனர்.

டாக்டர்..
சொல்லுப்பா...
சார் ...என்ன தேடுறார்
உனக்குத்தெரியாதா
சிறுத்தைங்களா
ஹாங்
வேக்...தேஜ் ங்களா
ஹாங்
ஏன் டாக்டர்
ஏன்னுனா...
அந்த இரண்டும்மட்டும் ஏன் டாக்டர்..
டிரைவர்....ஒரு டீ சாப்பிடலாமா ?
.
இருவரும் டீக்கடைக்குச் சென்று டீ சொன்னார்கள்.

மருத்துவர் ஒரு சிகரெட்டை எடுத்து வாயில் வைத்து பாக்கெட்டை டிரைவரிடம் காண்பித்து வேணுமா என்றார்,
வேண்டாம் ...

மருத்துவர் ஒரு தீப்பெட்டியை எடுத்து உரசி தீக்குச்சியில் முளைத்தத் தீயை லாவகமாக கையைக் கொண்டு பொத்தி சிகரெட்டைப் பற்ற வைத்தார். சிகரெட் தன்னைத்தானே எரித்துக்கொள்ள சிவப்பானது. மருத்துவர் ஓர் உறிஞ்சு உள்ளே இழுத்து வெளியே புகையை வெளியே விடுத்தார்.

ஆங்கிலத்தில்  டஸ்க் என்றுசொல்வார்களே அந்த இரவுக்கு முந்தையத்தருணத்து சிகரெட் புகை மருத்துவரின் முகத்தை மறைத்தது.

என்ன கேட்டீங்க....
அந்த சிறுத்தைக...?
ஹாங்...என்றபடி மருத்துவர் பேச ஆரம்பித்தார்.

அவரும் மருத்துவரும் நண்பர்கள். அவர் ஓர் அதிகாரியாக வனத்துறைக்கு வந்தபொழுது அலுவலகத்தில் பழக்கம். அவர் வனத்துறை அதிகாரிகளுக்கான நிர்வாகத்துறையில் ஒரு மேலதிகாரியாய் வந்திருக்கிறார். காட்டுக்குள் செல்லும் வேலை அவருக்கு இல்லாவிட்டாலும் விலங்குகளின் மீது இருந்த ஆர்வம், புகைப்படம் எடுக்கும் ஆர்வம் இவற்றின் காரணமாக அவரும் மருத்துவரும் நண்பர்கள் ஆயினர்.
அவ்வப்போது காட்டுக்குள் சென்று வரவும் இருந்தனர்.
அப்படி ஒருமுறை காட்டுக்குள் போனபோது...என்று மருத்துவர் சிகரெட்டை மறுபடியும் இழுத்து புகையை வெளியே விட்டார்...
டிரைவரின் கண்கள் அப்படியே காட்டிற்குள் நடந்ததை நினைத்துப்பார்ர்க்கும் படி பார்த்தன.
அப்படி ஒரு முறை காட்டிற்குள் சென்றபொழுது மழை பிடித்திருக்கிறது. அவரும், மருத்துவரும் மழையில் ஒதுங்க காட்டிற்குள்  தூரத்தில் வித்தியாசமான சத்தம் கேட்டது.
இருவரும் சென்று பார்த்தனர்.
அங்கே இரண்டு பூனைக்குட்டிகள். உடம்பில் பெரிய புள்ளிகளாய் அழகாய்...மழையில் நனைந்து நடுங்கிக்கொண்டிருந்தன. அவர் அவற்றை மெதுவாய் தூக்கிக்கொண்டு முன்னும் பின்னும் பார்த்தார். அந்த குட்டிகளின் அம்மாவைக் காணவில்லை. அந்தக் குட்டிகளுக்கு உடனடித்தேவை ஓர் அரவணைப்பும் கொஞ்சம் மழைக்கு ஒதுங்க இடமும் தான். அது அவரால் கிடைக்கும் என்று அப்பொழுதைக்கு அந்தக் குட்டிகளுக்குத் தெரியாது.

ஆளுக்கொரு குட்டியாய் தூக்கிக்கொண்டு முகாமிற்கு வந்தனர்.
 மருத்துவர் அவற்றை சோதித்துப் பார்த்து விட்டு சொன்னது அவருக்கு ஆச்சரியத்தையும் மகிழ்ச்சியையும் தந்தது.
அந்தக் குட்டிகள் பூனைக்குட்டிகள் இல்லை.
 க்ளௌடட் லியோபார்ட் (Clouded Leopard) என்று அழைக்கப்படும் அரிய வகை சிறுத்தை வ்கை என்ற செய்தி ன்தான் அது.
அடிப்படையில் பூனை புலி சிறுத்தை எல்லாமே ஒரு குடும்பம் தான்.இவை சிறுத்தைக் குடும்பத்தைச் சார்ந்தவை. இந்தியாவில் மிகவும் அரிதான வகை.
 ஆனால் அவர் அவற்றை ஒரு பூனையினமாகவே பார்த்தார்.

அடர் மஞ்சள் நிறமும் பெரிய கருப்பு நிற சதுரப்பொட்டுகளுமான உடம்பு, பெரிய மீசை...

தூக்கிக்கொண்டால் முகத்தை நுகர்ந்து பார்க்க முனைகின்றன. மீசையை பெரிதாக வைத்திருக்கின்றன.
அவர் அவற்றின் மீசையை தொட்டுப்பார்த்தார்.
தன் கைகளால் அதில் ஒன்று இவர் கையை தள்ளியது. வேக் என பெயரிட்டு அதன் மீசையைப் பிடித்தார். அதுவும் தன் கையால் அவரது கையை தள்ளியது,
மறுபடியும் பிடித்தார்,
மறுபடியும் தள்ளியது.
இம்முறை அவர் அதன் மீசையைப் பிடிப்பதற்கு முன்னதாக்வே அவரது கையைத் தள்ள முனைந்தது. அவ்வளவு கோபமாம்.
அவர் அதன் கைகளைப் பிடித்துக்கொண்டு கொஞ்ச ஆரம்பித்தார். அது தன் முகத்தை லாவகமாய் மாற்றிக்கொண்டது.

மற்றொன்று அவரது பாதத்தில் ஏறி தவ்வி அதையும் தூக்க வேண்டும் என்பதுபோல் நின்றது.
தேஜ் எனப் பெயர் சொல்லி வேக் ஐ இறக்கி விட்டு தேஜ்ஜைத் தூக்கினார். அது அவரது கண்களை உற்று பார்த்தது. அவரும் பார்த்தார். அது சிரிப்பது போல் அவருக்குத் தோன்றியிருக்கவேண்டும்.
 விலங்குகளால் சிரிக்கமுடியும் என்பதை அதன் மீது அன்பு செலுத்துவோர் அறிவர்
 அவர் அறிந்தார்.

முகாமில் அவரது அறை மட்டும் பிரகாசமாய் இருந்தது. மருத்துவர் சென்ற பிறகும் அனைவரும் சென்ற பிறகும் அவர் அங்கு தான் இருந்தார்.
 அவற்றிற்கு ஒரு கூண்டு தயார் செய்தார்,
 ஒரு பீடிங் பாட்டில் தயார் செய்து பால் நிரப்பி கொடுத்தார். தேஜ் தன் முன்னங்கையால் அந்த பாட்டிலை பிடித்துக்கொண்டு பால் குடித்ததை அவர் ரசித்துப் பார்த்தார்.
மறுநாள் மருத்துவர் மூலமாக தெரிந்த அதிகாரிகளை வைத்துக்கொண்டு அந்த அரிய வகைக் குட்டிகளைப் பராமரிக்கும் ஒரு குழுவை ஏற்படுத்தினார். மூன்று மாதங்களுக்கு அந்த குழு அந்தக் குட்டிகளைப் பராமரிக்கும் என்று உயர் அதிகாரியிடமிருந்து தகவல் பெற்றார், மூன்று மாதங்களுக்கு  அவற்றை தன் வசிப்பிடத்திற்கு அழைத்து வந்தார்.
 பராமரித்தார்.
 உணவளித்தார்.
சிரித்தார், சிரித்தன
கோபித்தார், கட்டுப்பட்டன...
விசில் அடித்து அழைத்தார் வந்தன
மூன்று மாதங்களும் கடந்தன.

இப்பொழுது அவருக்கு அந்தக் குட்டிகளைப் பிரியும் தருணம்.
 மருத்துவரும் மற்ற அதிகாரிகளும் வந்தனர். என்ன செய்வது. குட்டிகளை சரணாலயத்திற்கு அனுப்ப வேண்டும்.
அப்பொழுதுதான் அவர் ஒரு வெளிநாட்டுப் பத்திரிக்கையில் வந்த செய்தியைக் காண்பித்தார்.
 க்ளௌடட் லியோபார்ட்ஸ் இனம் அழிந்து வருவது பற்றிய கட்டுரை. இந்தியாவில் நூற்றுக்கும் குறைவான க்ளௌடட் தான் இருக்கின்றன என்றது அந்தக் கட்டுரை.
அனைவரும் அவர் என்ன சொல்லப்போகிறார் என்பதை ஆர்வமாகப் பார்த்தனர்.
அவர் சொன்னது இதைத்தான்....
சரணாலயத்திற்கு இந்தக் குட்டிகளை ஒப்படைத்து இவற்றை காட்சிப்பொருளாக வைப்பதை விட காட்டிற்கு அனுப்பி இனத்தை வளர்ப்பது தான் அவர் சொன்னது.
காட்டிற்கு அனு[ப்புகையில் தொழில்நுட்ப சிப்களை அவற்றின் உடம்பில செலுத்தி ஒரு வருடத்திற்கு பிறகு அவற்றின் வாழ்வின் மாற்றங்களை ஆய்விடல் இப்படியான நுட்ப ரீதியாக இருந்தது அவர் சொல்லியது.
ஆனால் அதற்கு மேலும் ஒரு விண்ணப்பம் வைத்தார்.
அது என்னவென்றால் காட்டிற்கு குட்டிகளை அனுப்ப மேலும் இரண்டு மாதங்கள் அவகாசம் வேண்டும்.
" இதற்கு அரசாங்கம் அனுமதிக்குமா" என்றார் மருத்துவர்
இரு அரியவ்கைசிறுத்தைக்குட்டிகளை வீட்டில் பூனைக்குட்டிகளாய் வளர்த்துவிட்டு திடீரென காட்டிற்குள் அனுப்பினால் அவற்றிற்கு அந்தச் சூழ்நிலை அபாயகரமாய் இருக்கும் என்று அவர் பயந்தார்.

அவரது அந்த பயத்தில் நியாயம் இருந்தது,

மருத்துவர்களும் மற்ற அதிகாரிகளும் அரசு அதிகாரிகளிடம் பேசி இரு நாட்களில் அனுமதி வாங்கினர். அரசின் அதிகாரி ஒருவரும் நியமிக்கப்பட்டார்.
ஒரு மாத கால அவகாசம்.

இரண்டு குட்டிகளையும் காட்டிற்கு அழைத்துச் சென்றனர்.
 மரத்தின் மேல் ஒரு கூண்டு அமைத்தனர்.
இரவில் அந்தக் கூட்டில் தான் அவை தங்க வேண்டும்.
இரவைக் காட்டில் பழக வேண்டும்.
 பகலில் காட்டிற்குள் உலவ வேண்டும்.
 ஒரு காவலர் இருந்தார்.
 அவரது வேலை அவற்றிற்குப் பாதுகாப்பு.
 அவர் காட்டிற்கு வந்தார், இப்பொழுது அவற்றிற்கு வேட்டையாடக் கற்றுக்கொடுக்க வேண்டும்.
முதலில் ஒரு கோழியைக் கொண்டு வந்துவிட்டார். வேக் கோழியின் பின்னாடியே ஓடியது. கோழி நின்றது. அதுவும் நின்றது. அவர் ஏமாந்தார். தேஜ்ஜை அனுப்பினார். கோழி ஓடியது. தேஜ்ஜும் விரட்டியது. கோழியைக் கவ்வியது. ஆனாக் கொல்லவில்லை. அது கோழியை ஒரு விளையாட்டுப்பொருளாக நினைத்துக்கொண்டது.
சில நாட்களில் வேட்டையாட பழகிக்கொண்டன.
 முடிவில் ஒரு சிப் பொருத்தப்பட்ட ஒரு பெல்ட் இரண்டு குட்டிகளின் கழுத்திலும் பொருத்தப்பட்டன.
இப்பொழுது காட்டிற்குள் திரும்பி விட வேண்டும் .
மருத்துவர் அவர் சில அதிகாரிகள் என அனைவரும் வந்தனர்.
அது ஒரு பிரிவு உபசார விழாவாக மற்ற அலுவலர்களுக்கு இருந்தது.
அவருக்கு மட்டும் தான் அது பிரிவு.

 குட்டிகள் கூண்டிலிருந்து வெளிவந்தன...
ஓட ஆரம்பித்தன...

தேஜ் மட்டும் திரும்பிப் பார்த்தது அவரை...
முதன்முதலாக அவர் அதைத் தூக்கியபோது அது பார்த்த பார்வை.

அவரும் அதைப் பார்த்தார்.

அந்தப் பார்வையில் ஏதோ ஒரு மொழி இருந்தது.
ஒரு உரையாடல் இருந்தது.
ஒரு பிரிவு இருந்தது.
ஒரு வலி இருந்தது.
முற்றிலுமாய் ஓர் அன்பு இருந்தது.
சில நேரங்களில் இரன்டும் ஓடி மறைந்தன.
ஒரு வருடம் ஆகிவிட்டது... இப்பொழுது அந்தக் குட்டிகளைத் தேட வேண்டும்.

அதைத் தேடித் தான் நானும் அவரும் செல்கிறோம்.

டிரைவருக்கு அவரது செயல்பாடுகள் ஆச்சரியத்தைத் தந்தன. வெறும் அரசாங்க சடங்குத்தனமாய் இந்த வேலையைச் செய்யாமல் கொஞ்சம் இரத்தமும் சதையும் கலந்து செய்வதுபோலவே டிரைவர் உணர்ந்தார்.

அடுத்த நாள் காலை டிரைவர், மருத்துவர், மற்றும் அவர் மூவரும் சேர்ந்து காட்டுப் பகுதிக்குள் சென்றனர்.
ஒரு தேன் எடுக்கும் காட்டுவாசி தென்பட்டான். அவனது பாஷையில் கேட்டனர்.
ஒரு புலி வித்தியாசமான புள்ளிகளுடன் தென்பட்டது என்று கூறினான். அவனுக்கு அவை கிளௌடட் எனச் சொல்லத்தெரியவில்லை.
இரண்டு புலிகளைப் பார்க்கவில்லை. ஒன்றைத் தான் பார்த்திருக்கிறான்.

தேஜ் அல்லது வேக்.
அவன் சொன்ன இடத்திற்கு அருகில் ஒரு சிறிய மலையும் காடும் சேர்ந்த ஒரு கிராமம் இருந்தது. அங்கு சென்று மக்களிடம் கேட்டுப் பார்ப்போம் என அங்கு சென்றனர்.

அவருக்கு காணாமல் போனது தேஜ்ஜா இல்லை வேக்கா என யோசித்துக்கொண்டே இருந்தார்.
முன்னங்கால்களால் தள்ளிவிட்டு பால் அருந்தும் குட்டிகளின் கண்கள் நினைவுக்கு வந்தன. கோழிக்குப் பயந்த பிறகு பாய்ந்த அந்தத் தருணங்கள் வந்து போயின அவருக்கு.
வேறு ஏதாவது பெரிய மிருகத்துடன் அவை விளையாடச்சென்று பலம் தெரியாமல் மாட்டிக்கொண்டிருக்குமா என்றெல்லாம் அவர் பயந்தார்.
இப்பொழுது அந்த ஊர் வந்தது.
ஊர் மக்களிடம் சென்று விசாரிக்கலாம் எனச் சென்றனர்.
அங்கு ஒரு காட்டுவாசி ஒரு பாய் விரித்து கடை விரித்திருந்தான். எல்லாம் மிருகங்களின் பாகங்கள். நரிப் பல், புலிப் பல், பறவையின் அலகு, கரடி நகம், இப்படி...
அவர் அவன் கடையின் முன் நின்று பார்த்தார்.
குத்துக்கால் வைத்து அவனது பாயைப் பார்த்தார்.
அதிர்ந்தார்.
ஒரு பறவையின் அலகைக் கையில் எடுத்து முன்னும் பின்னும் பார்த்தார். அது ஒரு அரிய பறவை. உலகத்திலேயே 500 தான் இருக்கும்.
இத ஏன்பா கொன்ன...
என்னா சார் இப்படி சொல்லிப்புட்டிங்க.... எந்த பூச்சி கடினாலும் அந்தத் தடிப்பு மேல இத வச்சீங்கனா அந்த விசம் முறிஞ்சிரும்...400 ரூபா..300னு வாங்கிகோங்க...
அவர் அதிர்ந்தார். 500 க்கும் எண்ணிக்கைக்குக் குறைவான் பறவையின் சடலம் வெறும் 300 ரூபா...
அதில் தன் வேக் மற்றும் தேஜ் இருக்குமா எனப் பார்த்தார்.
 கண்கள் படபடத்தன.
அவரால் அதைப் பார்க்கமுடியவில்லை...அங்கு அமர முடியவில்லை.
வேக் கும், தேஜ் க்கும் மிருகங்கள் மட்டும் எதிரி இல்லை. மனிதர்களும் தான்.
அவர்களிடம் விசாரித்தார்.
அந்த ஊர்க்காரர்கள் அவற்றைப் பார்த்தனரா என்று.....
அந்த காட்டுவாசியிடம் கேட்டார்.
அவன் ஒரு திசையைக் காண்பித்து பார்த்ததாகச் சொன்னான்....
நடந்தார்கள்...
நடந்தார்கள்...
ஒரு குன்று இருந்தது...
அதன் மேல் ஏறி ஒரு பைனாக் குலரில் பார்த்தனர்.
அடுத்த நாட்டின் எல்லை என தூரத்தில் ஒரு நதியைக் காண்பித்தார் டிரைவர்.

கிட்டத்தட்ட அருணாச்சலப் பிரதேசம் என்பது தெற்கு திபெத் தான். 
பழைய மேப்களில் 1900 வாக்கில் அந்தப் பகுதி சீனா எனவும் பர்மா எனவும் திபெத் எனவும் பரவிக்கிடக்கும்.
டிரைவர் காண்பித்தது திபெத்தின் இப்பொழுதையப் பகுதி.
மனிதனைத் தவிர மற்ற எந்த ஜீவராசிக்கும் இந்த எல்லை புரிவதில்லை.

அந்த நதியின் மறுகரையில் ஒரு கிளௌடட் ஆசுவாசமாகப் படுத்திருந்தது.
அவரால் அதைப் பார்க்கமுடிந்தது.
அழைத்தார்.
அந்த விலங்கால் கேட்கமுடியாதத் தூரம்...
செவிப்புலனிற்கு அப்பால்...
தேசத்திற்கு அப்பால்...
ஒரு நெருக்கம் மிகத் தூரமாய் நின்றுகொண்டிருந்ததைப் போல் உணர்ந்தார்.
பள்ளங்களில் குதிக்கவேண்டும்.
மலை இறங்க வேண்டும்
மரம் குனிய வேண்டும்.
அரை நாள் தூரம்.
அதுவரை அந்த கிளௌடட் அங்கு இருக்குமா...
அங்கே சென்றாலும் அது வேறு தேசத்து எல்லை..
தேசங்கள் அனுமதிக்குமா...சட்டதிட்டங்கள் அனுமதிக்குமா....
ஒரு சிறிய கோட்டின் அந்தப் புறம் ஒரு உயிர்
இந்தப் புறம் அந்த உயிருக்கான உயிர்..

அன்பின் லாவகத்தை வெறும் எல்லைகளால் பிரிக்கமுடியாது.
தேசங்கள் பிளவுபட்டுக்கிடப்பதை விலங்குகள் பறவைகள் பார்ப்பதில்லை.
சகலஜீவராசிகளைப் போல மனிதனும் எல்லையற்ற அன்பால் நிகழ்வது சாத்தியமில்லை.
முடிவில் ஒரு இயலாமையை அவர் உணர்ந்தார்.
சந்தோசத்திற்கும்  இயலாமைக்கும் நடுவே அவர் பயணித்துக்கொண்டிருந்தார்.
டிரைவரும், மருத்துவரும் அவரை முகாமிற்குத் திரும்ப வற்புறுத்திக்கொண்டிருந்தனர்.
காட்டுக்குள் அந்தக் காட்சியை மட்டும் நிலைநிறுத்திக்கொண்டு அவர் திரும்பினார்.
முகாம் வரும்வரை அவர் அந்த எல்லையில் இருந்தார் மனதளவில்.

விரக்தியை விழூங்கிக்கொள்ளுதல் தவம். அது அவருக்குள் நிகழ்வது நிதர்சனம்.

ஜீப் பெருஞ்சத்தத்துடன் நின்றது.
அயர்ச்சியுடன் எல்லோரும் இறங்கினர்.
அவரின் உதவியாளர் ஓடி வந்தார்.
காட்டில் ஒரு யானைக்குட்டி ஒரு பள்ளத்தில் சிக்கிவிட்டதாகவும் அதை மீட்புக்குழுவினர் மீட்டு வந்திருப்பதாகவும், அந்த யானைக்குட்டியின் தாய் யானை இறந்துவிட்டதாகவும், இப்பொழுது அந்த யானைக்குட்டி அவரது அறையின் வாசலில் ஒரு கம்பத்தில் கட்டிப்போடப்பட்டிருப்பதாகவும் கூறினார்.

அவரும் மருத்துவரும் டிரைவரும் விரைந்தனர் அங்கு.

ஒரு குட்டி யானை...இல்லை யானைக்குட்டி.
தலையை தலையை ஆட்டுகிறது...
துள்ளுகிறது.
உடல் முழுதும் ஈரமாய் இருக்கிறது...புதியதாய் பூமிக்கு வந்த ஒரு மழைத்துளியாய் ஒரு உயிரினம்....
அவர் அப்படித்தான் பார்த்தார்.

அவர் அதன் அருகில் சென்றார்.
அதன் கண்களைப் பார்த்தார்.
அதுவும் அவரின் கண்களைப் பார்த்தது...

தன் கையால் அதன் நெற்றியைத் தடவினார்.
தன் துதிக்கையால் அவரது கையை அது பற்றிக்கொண்டது.
பிறந்த குழந்தையின் கையில் நம் விரலை நீட்டினால் அது பற்றிக்கொள்ளுமே அப்படி ஒரு லாவகம்....

அன்பு எப்பொழுதும் ஒரு லாவகம் தானே.....
நெகிழ்ச்சியுடன் " நேத்ரா" எனப் பெயரிட்டார்....

மருத்துவருக்கும் டிரைவருக்கும் அந்த லாவகம் புரிந்தது.....





கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

A separation ஈரானிய மொழி திரைப்படம்

சைரன் 4

விற்பனைப் பிரதிநிதியின் தனிக்குறிப்புகள் 8