காதல்ல்ல்ல்ல்ல்ல்....

அவர் ஒரு திருவாளர். பொதுஜனம்.
காலையில் வாக்கிங் செல்லும் 26 வயது பெரியமனுஷர்.
6 மணிக்கெல்லாம் வாக்கிங் செல்லும் ரிடையர்ட் ஆசாமிகள் எல்லாம் இவருக்கு ஜிகுடி ஜிகுடி தோஸ்த். வீட்டு வாசல்லுல காலையில் அமர்ந்திருக்கும் வயதானவர்கள்,  குழந்தைகள் அப்புறம் பால்காரர்கள் காய்கறிக்கடைகாரர்கள் எல்லாம் அத்திரி புத்திரி நண்பர்கள்.

நம்ம திருவாளர்.பொதுஜனம் ஒரு மருத்துவமனையில் அட்டெண்டர்.
 ஊசி போடுவார்.
 மாத்திர சீட்டுக்கு மருந்து எடுத்துத்தருவார். 
ஆப்ரேஷன் தியேட்டர்ல கொஞ்சம் எடுபிடி.
ஸ்டிட்ச்சிங் ட்ரெஸ்ஸிங் ன்னு நர்ஸிங் வேலைனாலும் , அய்யா ஏரியாக்குல டாக்டர் பந்தா தான்...
சும்மா டீக்கடை பக்கம் போவார்.
பச்சமுத்து அண்ணன் வடை போடுவார்.
என்ன பச்சமுத்து அண்ணே கால்ல காயம் பார்...
எண்ணெ தாளிக்குறப்ப பட்டுரூச்சும்பார் பச்சமுத்து அண்ணேன்...
உடனே நம்மாளு ....சில்வரெக்ஸ் ஆயின்ட்மெண்ட் போடுணே னு வாயிலேயே பிரிஸ்கிரிப்ஷன் கொடுத்துட்டுப்போவார் .
ச்ச...எவ்ளோ அறிவுனு பச்சபுள்ளையாட்டம் பார்ப்பார் நம்ம பச்சமுத்தண்ணன்...
தெருமுனைல இருக்குற கண்ணாத்தாள் பாட்டிக்கு நம்மாளு தான் கன்சல்டண்ட் டாக்டர்.  மூட்டுவலி தலைவலி வயித்தால தினம் ஒண்ணு பாட்டிக்கு. அய்யா தான் ஆல் இன் ஆல் கன்சல்டன்ட்.

சுகருக்கு ஊசி போடுறது, அவசரத்துக்கு குளுக்கோஸ் ஏத்துறது இப்படி போலிடாக்டர்கள் வரிசையில் பொதுஜனம் போலியான போலிடாக்டர்.

அதே தெருவில் வேதாச்சலம் ஐயா இருக்கிறார்.
காலையிலேயே எந்திரிச்சு வீட்டு வாசல கூட்டனும் தண்ணீர் தெளிக்கனும்ன்றதைக் கண்டுபிடித்த பாரம்பரியம். அதனால்தான் என்னவோ வேதாச்சலம் மனைவி கோசலையம்மாள் அந்த வேலையை அய்யாக்கிட்டையே கொடுத்துட்டாங்க.
காலையில் எழுந்ததும் வீட்டு வாசலில் கோலம் போடனும் னு வர்ற போற பால்காரர்களிடம் பேப்பர் போடும் பையங்களிடம் அய்யா சொல்வதைப் பார்த்து தலையில் தலையில் அடித்துக்கொள்வார் கோசலையம்மாள்.

வேதாச்சலம் அய்யாவிற்கு விடியல் காலையில யார் எந்திரிச்சாலும் பிடிக்கும். அதிலயும் நம்மாளு பொதுஜனத்த ரொம்ப.

ஒரு மாத காலமாகவே பொதுஜனம் வேதாச்சலம் ஐயாவ
 பாத்து அப்புறம் சிரிச்சு
 அப்புறம் வணக்கம் சொல்லி
 அப்புறம் பேசி
 இப்ப 65வயசு வேதாச்சலம்  ஐயாவிற்கு இரவு தூக்கம் இல்லாததற்கு மருந்து சொல்றளவுக்கு பழகிட்டார்.
காலைல வாக்கிங் போறப்ப ரெண்டு நிமிஷம் வர்றப்ப பத்து நிமிஷம் னு சினிமா கலை அரசியல்னு பழக்கமாயிட்டாங்க.
காய்கறி விலை, பருப்பு விலை, மாட்டுக்கறி னு அலசலோ அலசல் பண்ணுவாங்க...
சில நாட்களில் எல்லாம் முதல்நாளில் அவரவர் வாழ்வில் நடந்ததை இரண்டுபேரும் பேசிக்க ஆரம்பிச்சாங்க.
நம்ம பொதுஜனம் சொல்றது அவ்வளவு சுவாரஸ்யமாய் இருந்தது வேதாச்சலம் ஐயாவிற்கு.
ஒருநாள் காலை இப்பொழுது இருக்கும் இளவட்டங்கள் மற்றும் காதலர்களைப் பற்றி பேசுகையில் பொதுஜனம் ஆரம்பித்தார் -
அதே பகுதியைச் சார்ந்த ஒரு பெண் அவரைப் பார்த்துச் சிரித்ததாகவும் இவரும் சிரித்ததாகவும் கூறியவர் அந்தப் பழக்கம் பிறகு பேச்சாகவும் மாறியதைச் சொன்னார்.
அவள் வரும் நேரத்திற்கே இவரும் கிளம்ப ஆரம்பித்திருக்கிறார். அவளும் இவர் வரும் வரை காத்திருப்பதாகவும் கூறுகையில் அடுத்து என்ன ஆனது என்று கேட்பதற்காக வேதாச்சலம் ஐயாவும் காத்திருந்தார்.
உள்ளே தலையில் அடித்துக்கொண்டு கோசலையம்மாளும் காத்திருந்தார்.

ஒரு நாள் பொதுஜனம் வரத் தாமதமானதும் அவள் கோபித்ததாகச் சொல்கையில் சிலாகித்தது அவர் மட்டுமல்ல ஐயாவும் தான்.

இப்பொழுது தொலைபேசி எண்களைப் பகிர்ந்துகொண்டு இருவரும் பேச ஆரம்பித்துள்ளோம் எனச் சொல்லிவிட்டு நகர்ந்துவிட்டார் பொதுஜனம்.

அடுத்த நாள் காலை தொலைபேசியில் பேசிக்கொண்டே பொதுஜனம் நடந்து சென்றதை தலையை தலையை ஆட்டிக்கொண்டே பார்த்தார் வேதாச்சலம்.
மெல்ல மெல்ல ஒருவர் காதல் வயப்படுதல் என்பது காலைப்பொழுதைவிட ரம்யமாகவே இருந்ததை வேதாச்சலம் ஐயா உணர்ந்தார்.

வாக்கிங் முடிந்து வந்தவர் வேதாச்சலம் ஐயாவிடம் முதல்நாள் உணவகத்திற்கு அவரும் அவளும் சென்று  வந்தததைச் சொன்னார்.
அவளுக்குப் பிடித்த பதார்த்தங்களை அவரும் அவருக்குப் பிடித்தப் பதார்த்தங்களை அவளும் சாப்பிட்டதாகச் சொன்னார். இதைக் கேட்டதும் இப்படித்தான் இருக்கவேண்டும் என வேதாச்சலம் ஐயா தலையை தலையை ஆட்டினார்.
அடுத்த நாள் காலை வெறும் சிரித்தவாறே சென்ற பொதுஜனத்திடம் பேசவில்லையா என தொலைபேசி சைகையைக் காண்பித்தார் வேதாச்சாலம்.
இனி தான் என அவரும் சைகை காண்பித்து நகர்ந்தார். 
சில காலைப் பொழுதுகள் வாக்கிங் மற்றும் அலைபேச் டாக்கிங் என சிரித்துக்கொண்டே செல்வார் பொதுஜனம்.

ஒரு நாள் வெகு விரைவாகவே வாக்கிங் வந்த பொதுஜனம்,  அன்று அவள் பூங்கா செல்லலாம் என அழைத்ததாகவும், அவளது வற்புறுத்தல் தாங்காமல் செல்வதாகவும், அவ்வாறு செல்வது அவருக்குப் பிடிக்கவில்லை எனவும் கூறினார்.
இவ்வளவு  கட்டுக்கோப்பாய் பொதுஜனம் இருப்பதாக வேதாச்சலம் நினைத்துக்கொண்டார்.
ஒரு நாள் முழுக்க நாடு முழுவதும் எத்தனை பிரச்சினைகள் நடந்தாலும் காலங்காத்தால வேதாச்சலம் ஐயாவிற்கு ஒரு காதல் கதை தொடர் சீரியலாக வந்தது.
பூங்காவிற்கு சென்று வந்த பிறகு பொதுஜனம் என்ன சொல்வார் என்பது தான் வேதாச்சலம் ஐயாவின் தற்போதைய எதிர்பார்ப்பு.
அடுத்தநாள் பொதுஜனம் தூரத்தில் தெரிகையிலேயே துள்ளலாய் நடந்து வந்தார். வேதாச்சலம் ஐயாவின் அனுபவப் பார்வையில் இளவட்டங்களின் துள்ளலுக்கான அர்த்தம் தெரிந்தது.
பொதுஜனம் அவரது கண்களுக்கு இன்று கொஞ்சம் சிவப்பாகத் தெரிந்தார்.
வாக்கிங் முடித்துவிட்டு வருகையில்  பொதுஜனத்தின் பூங்கா அனுபவங்களை வெறும் பூரிப்பான வெடகப் புன்னகையுடன் காண்பித்து விட்டு நகர்ந்தார்.

பிறகு,
சில நாட்களாக அந்த பொதுஜனம் வருவதில்லை. அல்லது ஐயாவால் பார்க்கமுடியவில்லையா எனத் தெரியவில்லை.

ஐயாவும் வாசலில் நிற்கையில் கூடுதலாக இரண்டு நிமிடங்கள் பார்ப்பார். கோசலையம்மாள் சத்தம் கொடுத்ததும் உள்ளே சென்றுவிடுவார்.

திடீரென ஒருநாள் பொதுஜனம் வாக்கிங்
வந்தவர் ஐயாவின் வீட்டு வாசலுக்கு வந்து நின்றார். அந்தப் பெண் அவசரப்படுகிறார் என்றும் அறிவில்லை என்றும் வசைபாடினார். ஐயாவிற்கு என்ன சொல்வதெனத் தெரியவில்லை. சற்று எட்டி உள்நோக்கிப் பார்த்தார். கோசலையம்மாள் தலையில் அடித்துக்கொண்டார். ஐயாவால் எதையும் சொல்லமுடியவில்லை.

தொடர்ந்து அடுத்த நாள் பொதுஜனம் அதேபோல் வசை பாடிக்கொண்டார். காலையில் பார்த்துக்கொள்ளும் வழிப்போக்கராக ஐயா தன்னை நினைத்துக்கொள்வதுடன் அவரது எல்லை அவருக்கு நன்றாகவே தெரிந்திருந்தது. 
ஒரு காதலின் நிகழ்ச்சி நிரலில் கூடலும் ஊடலும் தவிர்க்க இயலாததை அவரால் பொதுஜனத்திற்கு அறிவுரையாகச் சொல்ல அவரது அனுபவ முந்திரிக்கொட்டை அறிவு துடித்தது.
மறுநாள் பொதுஜனம் அவள் திருமணம் முடிப்பதற்கு நிர்பந்திப்பதாகவும் அல்லது
வேறு ஊருக்கு ஓடிப்போகலாம் என அவள் வற்புறுத்துவதாகவும் கூறினார். இதில் சிரமம் குடும்பமா பொருளாதாரமா என ஐயா தனக்குள்ளேயே கேட்டுக்கொண்டார். இருந்தாலும் ஐயா அவரிடம் அதைக் கேட்கவில்லை.
அடுத்த நாள் அதற்கடுத்த நாள் என பொதுஜனம் பதட்டம் அடைந்தவராகவே இருந்தார். ஐயாவிற்கு தொண்டையில் அவ்வளவு அறிவுரைகள் அடைத்துக்கொண்டிருந்தன்.
 உங்களுக்கு இது தேவையில்லாத வேலை எனக் கோசலையம்மாள் கடிந்துகொண்டதால் அவர் அவற்றை முழுங்கிக்கொண்டார்.

ஆனாலும் அந்த இரவு ஒரு முடிவு  செய்தார்.
 நாளை அந்த பொதுஜனத்திற்கு தக்க அறிவுரை சொல்வது.
 பெற்றோர் பிரச்சினையா ஜாதி பிரச்சினையா பொருளாதாரப் பிரச்சினையா..எது வேண்டுமானாலும் அதற்கேற்றவாறு அறிவுரை சொல்லவேண்டும்.
 கண் முன்னே பொதுஜனத்தின் துள்ளலைப் பார்த்திருந்தவர் என்பதால் அவரது மனப்போக்கின்படி அந்தப் பெண்ணைத் திருமணம் செய்யச்சொல்லுதல் அதுவும் நாகரிகமாக அவரது மனம் கோணாதபடி சொல்லுதல் என எல்லாத் திட்டங்களையும் படுக்கையில் வைத்துக்கொண்டு புரண்டு புரண்டு படுத்தார். 
சீலிங் மின்விசிறியுடன் ஒரு ஒத்திகைப் பார்த்துக்கொண்டார். மின்விசிறியின் நடுமுகத்தில்  ஒருத்தி ஒருவனை நினைத்துவிட்டால் அந்த உறவுக்குப் பெயரென்ன...எனக் கேட்டதும் ஒரு குடத்தின் வாயில் நின்று கொண்டு எஸ் எஸ் ஆர் ..காதல்ல்ல்ல்ல்...அப்படினு இழுத்த தன் பால்யக் காதல் பாடல் போல...பொதுஜனத்தின் முகம் தெரிந்திருக்கவேண்டும் ஐயாவிற்கு.

அடுத்த நாள் காலை பொதுஜனம் வரும் திசையைப்பார்த்தார்.
 தூரமாய் அவர் வந்தார்.
ஐயா தயார் ஆகிக் கொண்டார். 
சற்று எட்டி உள்ளே பார்த்தார். ஷால் அணிந்துகொண்டு ஈஸி சேர்ரில் உட்கார்ந்தபடி தலையில் அடித்துக்கொள்ளத் தயாராகும் கோசலையம்மாள்.

இப்பொழுது பொதுஜனம் ஓரளவிற்கு அருகில் வந்தார்.
ஐயா எடுத்ததும் எப்படி ஆரம்பிப்பது பற்றி மனதிற்குள் இரவு எஸ் எஸ் ஆரின் பாடல் ஒத்திகையை நினைவு கூர்ந்தார்.

அனைத்தும் கச்சிதமாய் இருந்தது.

ஐயா பொதுஜனத்தைப் பார்க்க அவர் மிகப் பதட்டமாக இருந்தார்.

என்ன விசயம் என ஐயா கேட்க அவர் சொல்ல,
 பிறகு ஐயாவும் பதட்டமடைந்தார்.

ஐயாவிற்கு பேச்சே வரவில்லை.

உள்ளே இருந்து கோசலையம்மாள் சத்தம் இல்லாமல் ஒரு ஊமைப்படத்தைப் பார்ப்பதுபோல் பார்த்தார்.

ஐயா அப்படியே உறைந்து நின்றதைக் கோசலையம்மாள் கவனித்தார்.
மிகுந்த ஏமாற்றத்துடனும் கவலையுடனும் ஐயா உள்ளே நுழைந்தார்.
ஒரு சோஃபாவில் சரிந்து அமர்ந்தார்.
 ஒரு வாய் கூட பேசவில்லை.
கோசலையம்மாள் கேட்க ஐயா கூறினார்.
பொதுஜனத்தின் காதல்  விசயம் கேள்விப்பட்டு பொதுஜனத்தின் மனைவி கோபத்துடன் அவளது அம்மா வீட்டிற்கு சென்றுவிட்டதாகவும் அவளைச் சமாதானப்படுத்த அவரும் போகிறார் எனக் கூறியதும் கோசலையம்மாள் தலையில் தலையில் அடித்துக்கொண்டார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நானுனக்கு...

பூ தொடுத்தல்

இது தம்மு...இது ரம்மு....