சிவப்புப்பணம்- பாலகுமார் விஜயராமன்
எழுத்தாளர் பாலகுமார் விஜயராமன் எழுதிய , 'சிவப்புப்பணம்' நாவலை முன்வைத்து...
ஓர் இரவில் தங்கள் கையில் இருக்கும் பணம் செல்லாக்காசு என அறிவிப்பை நாட்டின் அரசாங்கம் வெளியிடுகிறது. ஒட்டுமொத்த தேசமும் பைத்தியம் பிடித்து அலைகிறது. கையிருப்புப் பணத்தைத் தக்க வைத்தலும் அதைச் செல்லும்படியாய் மாற்றவுமென ஒரு தேசமே அலைய ஆரம்பித்த வாதையின் காலம் அது. கடந்த பத்தாண்டுகளில் நடக்கும் வரலாற்றுச் சோகம் அது சார் நடந்த நிகழ்வுகள்.
சிவப்புப்பணம் நாவல் அந்த துன்பியல் சோகத்தின் ஒரு சிட்டிகை எடுத்து அதைப் பிரித்துக் காட்டுகிறது.
எழுத்தாளர் புனைவு என்று ஒப்புக்குக் கூறினாலும் தேசத்தின் மூலையில் எங்கோ நடந்திருந்த சம்பவமாகவே படுகிறது. வலிமை மிகுந்த எதேச்சதிகார ஆட்சியாட்களின் நெருக்கடிக்கு உள்ளாகும் பல பிரபலங்களை நினைவுபடுத்தியபடி
யாருமற்ற முதியவளுக்குத் தன் பணமே பலமென்ற நினைப்போடு இருந்த முதியவளுக்குப் பணமதிப்பிழப்பில் விழுந்த இடியின் வலியை உணரச்செய்தபடி
ஏதாவது ஒரு கட்டத்தில் எதையாவது பற்றி எழுந்திட எத்தனிக்கும் ஒரு குறுந் தாவர மனதோடு போராடும் சாமான்யர்களை கண் முன் நிறுத்தியபடி சிவப்புப்பணம் வண்ணம் பெறுகிறது.
தூங்காநகரமென மதுரைக்குப் பெயர் பெற்று தரும் சிம்மக்கல்லின் இடுக்குகளை புரோட்டாக்கடையின் வாசத்தை அச்சு அசலாக எழுத்தாக்கி புனைவிற்குள் இழுத்துச்செல்கிறது சிவப்புப்பணம்.
பூட்டியக் கதவும், கதவிற்கு அப்பால் ஒருவன் ஒருத்தி ,அடுத்த வரியில் அவளது வாசம் வீசும் அவன் என நெருடலற்ற கவித்துவமான நிகழ்வு பற்றிய வரிகள்.
மூன்று நபர்கள் இரண்டு நாய்கள் உள்ள ஒருவரைச் சந்திக்கிறார்கள். மூவரில் ஒருவரிடம் மட்டும் நாய்கள் குலாவ ஆரம்பிப்பது,
இரவு நாய்களுக்கு அவர் உணவிடுவது, மறுநாள் கழுதைகளின் நெற்றியை அவர் தடவி கொடுப்பது, கடைசியில் பிரிந்து செல்கையில் அந்த நாய்கள் திரும்பி அவரைப் பார்ப்பது என எந்த உரையாடலும் அற்று ஒருவனது மனதின் இலகுவான ஒரு தன்மையை வெறும் உணர்வுகளின் வழியே கடத்துகிறார் நாவலாசிரியர் பாலகுமார்விஜயராமன்.
எந்த முடிச்சுமற்று நெற்றிக்கு நேராய் ஒரு கதையைச் சொல்லுதல் சவாலானப் போக்கு. ஏதேனுமொரு இடத்தில் இப்படி நடக்குமோ இப்படி திருப்பம் வருமோ என எண்ணுகின்ற இடத்தில் கூட கதை பிறழாமல் சிவப்புப்பணத்தைத் தூக்கிச்சுமக்கிறது. சவாலான வாழ்க்கையின் தருணங்களில் கூட நாம் ஒத்துக்கொண்ட கடமைகளை அல்லது நம் கனவை அடைவதற்கான உத்திகளை நாம் பிரயோகித்துக்கொண்டே இருக்கவேண்டும். வியாபாரத் துறையில் பிரதிநிதிகளுக்கு வழங்கப்படும் பாலபாடங்களில் ஒன்று ,' ஒரு உத்தி தோற்றுபோய்விட்டால் அடுத்த உத்தி என்ன என்று உடனே யோசிக்கவேண்டும்'. அந்த முடிவை காலந்தாழ்த்தாது எடுக்கவேண்டும். executive decision என்று தான் அதை அழைப்பார்கள். வாழ்க்கை நம் முன் சோலிகளை உருட்டி போடும். வந்து விழுபவை எல்லாம் தாயங்களாக இருப்பதில்லை. நிகழும் நிகழ்வுகளைத் தனக்குச் சாதகமாக்க நாம் வினைபடுவதே வாழ்வின் அடிப்படை.
இந்தச் சூத்திரத்தில்தான் மூன்று நண்பர்கள் சிவப்புப்பணத்தைத் தூக்கிச்சுமக்கிறார்கள்.
அதை வாசிக்கையில் நீங்களும் கூட ஜவ்வுமிட்டாய் நிறத்து பணத்தாள்களை நுகரலாம். கிழங்கு மூட்டைகளுடன் பிரயாணிக்கலாம். ஏழாயிரம் அடிஉயர மலையின் சரிவில் நதியாடலாம். பெரும் பாரம் இறங்கிற்று என எண்ணுகையில் உங்களுக்கு அடுத்த வாய்ப்பைத் தருவிக்கலாம்.
சிவப்புப்பணம் - ஒரு தேசம் ஒரே இரவில் கலைத்த கோலத்திலிருந்து உருவப்பட்ட வண்ண ரேகை.
பழனிக்குமார், மதுரை.
கருத்துகள்
கருத்துரையிடுக