நெடு நாட்கள் கழித்து ஒரு கட்டுரை எழுத வேண்டும் என்று ஓர் ஆசை.

அதுவும் பேச்சுத் தமிழில் முழுக்க முழுக்க என் ஸ்டைலில். 
எத பத்தி எழுதணும்னு ரொம்ப யோசனை. ஒரு நாள் இல்ல ரெண்டு நாள் இல்ல...2 மாசம் யோசிச்சு யோசிச்சே போச்சு.

இப்பத் தான் நேத்து பேங்க் ஆப் இந்தியா, மதுரை கிளைக்கு ஒரு வேலை விசயமா போனேன்....

நறுக்கு னு ஒரு கட்டுரை கிடைக்குது.

ரொம்ப நாள் தொடர்பிலிருக்கும் இணைய நண்பர்களுக்குத் தெரியும் எனக்கும் வங்கிக்கும் எப்படி தொடர்பு னு( ஏற்கனவே வங்கி பத்தி ஒரு கட்டுரை எழுதுன அனுபவத்துல)

இப்ப உங்களுக்கு நான் ஒரு   பிளாஷ்பேக் சொல்லப்போறேன்.



வாங்க மதுரை அண்ணாநகர் பேங்க் ஆப் இந்தியா கிளைக்குச் செல்லலாம்.

ஒரு வருடத்திற்கு முன்னால் ஒரு 25000 ரூபாய fd (வைப்புத்தொகை) யா போடலாம் னு போனேன்.

அங்க இருக்குற ஒரு ஆபிஸர் அம்மாட்ட எனக்கு அக்கவுண்ட் இருக்கு. அதுல இருக்குற பணத்துல 25000 த டெபாசிட் பண்ணனும் னு சொன்னேன்.

ஒரு அப்ளிகேஷன் பார்ம் கொடுத்து நிரப்பச் சொல்லுச்சு.

பொதுவா பேங்க்ல செலான் தான் குழப்பமா இருக்கும். டிடி க்கு எது, பணம் கட்ட எது, பணம் எடுக்க எது....கலர் கலரா....அதுவும் ஒவ்வொரு பேங்க்கும் ஒவ்வொரு கலர்ல ஒவ்வொரு சைஸ்ல.......எது எதுக்கோ விளம்பரம் போடுற மோடி அரசாங்கம் இந்த பேங்க்ல இருக்குற கலர் கலர் செலான் களுக்கு ஒரு சட்டம் போட்டு விளம்பரம் போடக்கூடாதா....பணம் எடுக்க எல்லா பேங்க்குக்கும் ஒரே கலர் னு.....சரி விசயத்துக்கு வருவோம்.

அந்த ஆபிஸர் அம்மா கொடுத்துச்சே ஒர் அப்ளிகேஷன் பார்ம் அடேயப்பா....முந்தில்லாம் ஜெராக்ஸ் க்கு போகாம சைக்ளோஸ்டைல் மாதிரி பண்ணுவாங்க நியாபகம் இருக்கா.. வட்டமா ஒரு மெஷின் இருக்கும் அதுல மைய தடவி சுத்துவானுக....ஜெராக்ஸ் மாதிரி வந்து விழும். அந்த மாதிரி பிரிண்ட் போட்ட மாதிரி ஒரு அப்ளிகேஷன்....மதுரையிலேயே பேங்க் ஆப் இந்தியா மொத்தம் மூணோ நாலோ கிளை தான் இருக்கு..ஆனா அந்தம்மா கொடுத்த அப்ளிகேஷன் அச்சுல பேங்க் ஆப் இந்தியானு ஒரே இடத்துல அஞ்சா தெரியுது....என்னய்யா அப்ளிகேஷன் அடிக்குறீங்க...இதுல எங்க எழுத....
பேர் கேட்ருக்கானுக...எழுதிட்டேன்
அக்கவுண்ட் நம்பர் கேட் ருக்கானுக ...எழுதிட்டேன்
எவ்ளோ பணம் னு கேக்கல...எவ்ளோ தொகை னு கேக்கல...
அந்தம்மாட்டயே கேட்டேன்...இதுலாம் எங்க எழுதனு....
அதுலயே எழுதுங்க னு ஒர் பதில் சொல்லுச்சு பாக்கனுமே.....

(அதுலயேனா எங்க எழுத....னு கேக்கவா முடியும்.....பத்தாம் வகுப்பு படிக்குறப்ப அல்ஜீப்ரா கணக்கு ஒன்ன தீர்வு பண்ணச்சொல்லி ஜெயராஜ் வாத்தியார் ஒரு தடவ சாக்பீஸ என் கையில கொடுத்து கரும்பலகை கிட்ட அனுப்புனாரு....அப்ப எப்படி பேந்த பேந்த முழிச்சேனோ அப்படி முழிச்ச மாதிரி க்ளோசப் ஷாட்டுல என் முகமே என கண்ணுக்குத் தெரியுது.....)

அப்ளிகேஷன அந்தம்மாட்டயே காமிச்சேன்....அது பாத்துச்சு...பின்னாடி திருப்பியும் பாத்துச்சு...ஒரு நிமிஷம் என்ன பாத்துச்சு....

சாரி சார்...இது லோன் அப்ளிகேஷன்....அப்டினு இன்னொரு அப்ளிகேஷன் கொடுத்துச்சு...

ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ப்பா......எதிர்தாப்புல..அந்த வங்கியோட காலண்டர் நல்ல டிசைன் ல இருந்துச்சு..நல்ல வரி..நல்ல கலர்...நல்ல மாடல்....அப்பத்தான் தெரிஞ்சது...இந்த பேங்க்ல நல்லா வேலை பாக்குறவன்லாம் வட இந்தியால இருக்கான் போல னு....

அப்புறம் அப்ளிகேஷன் கொடுத்து அதுல எழுதி கொடுத்தேன். 
25000 ரூபாய்...ஆறுமாதம் கழித்து இருபத்தாறாயிரத்து பத்து....

எப்ப மேடம் ரிசிப்ட் வாங்கிக்கலாம்....
மதியம் வர்றீங்களா...
வர்றேன் மேடம்...( சரி தான்...அவங்களுக்கும் வேல இருக்கும்ல...புதுசா fd  போடனும்னா...ஒரு அக்கவுண்ட் ஓபன் பண்ற மாதிரி தான....)

மதியத்திற்கு மேல் பேங்கிற்கு போனேன்..இந்த பேங்குல எல்லாம் fd க்குனே ஜிகுனா போட்ட மாதிரி ஒரு ரிசிப்ட் வக்சிருக்கானுக...அந்த கலர் கலர் பேப்பர்ல.....கம்ப்யூட்டர்ல பிரிண்ட் போட்டுத்தரானுக.....அங்க அங்க இடைவெளி இருக்கும் அதுல பிரிண்ட் பண்ணிருவாங்க....கண்ணுக்கே தெரியாத ஒரு மை இவனுகளே செய்வானுகளோ என்னமோ தெரியல.... எப்படியோ அதுல ஆறு மாசம் கழிச்சு 26010 ரூபாய் கிடைக்கும்னு போட்டானுக...

ஆறு மாசம் 5 நாள் கழிச்சு நான் மறுபடியும் பேங்க் போறென். அந்த ரிசிப்ட காமிச்சு மேடம்...இத மறுபடியும் ஆறு மாசத்துக்கு புதுப்பிக்கணும். 
அந்தம்மா..வாங்கி பாத்துச்சு.....நாளைக்கு வாங்கனு சொல்லுச்சு....
சரி பெரிய வேலை தான...இத க்ளோஸ் பண்ணனும்....அப்புறம் புதுசா ஓபன் பண்ணனும்...அப்புறம் ரிசிப்ட் புதுசா தயார் பண்ணி பிரிண்ட் போடனும் னு விட்டுட்டேன்....
அடுத்த நாள் போனேன்...
நம்ம நேரம் எப்போதும் அப்படித்தான்...அந்த மேடம் லீவு.
பக்கத்து சீட் ல இருக்குற ஆபிஸர்ட்ட நேத்து இந்த மாதிரி கொடுத்தேன்...ரிசிப்ட வாங்கிக்கலாமா னு கேட்டேன்.
அதுக்கு அந்த பிரகஸ்பதி , மேடம் லீவே னு பதில் சொன்னாரு..
அந்தம்மா லீவுனு தான் அந்தாளுட்ட கேக்குறென். 
அவர் சொன்ன பதிலுக்கு என்ன அர்த்தம்னா...என்ட் கேக்காத னு அர்த்தம்.

தம்பி படத்துல...மாதவன் ஆக்ரோஷமா பூஜாட்ட கேப்பாரு....' இப்ப நான் என்ன பண்ண...' அதுமாதிரி அவர்ட்ட சாந்தமா ...நான் எப்ப வரணும்....
நாளைக்கு வாங்க.....

அடுத்த நாள் போனேன்...(25000 ஆச்சே...போய்த்தானே ஆகணும்)....
அந்த மேடம் இருந்தாங்க....
மேடம்.....
சொல்லுங்க சார் (இப்படி எந்த பேங்க்லயாவது கேட்பாங்களா...சொல்லுங்க சார் ன்ற மாதிரி பார்த்தாங்க...)
முந்தா நேத்து டெபாசிட் ரென்யுவலுக்கு கொடுத்தேனே.....
உங்க பேரு சார்
பழனிக்குமார்...
அது இன்னும் போடல.....ஒரு மணி நேரம் கழிச்சு வர்றீங்களா...இல்ல நாளைக்கு வர்றீங்களா....
அந்தம்மா கேள்வியிலேயே தெரியுது....நீ நாளைக்கு வாடானு....

சரிங்க மேடம்...நாளைக்கே வர்றேன் ...( சரி தான்....அவுங்களுக்கும் டைம் ஆகும்ல... பெரிய வேலை தான...இத க்ளோஸ் பண்ணனும்....அப்புறம் புதுசா ஓபன் பண்ணனும்...அப்புறம் ரிசிப்ட் புதுசா தயார் பண்ணி பிரிண்ட் போடனும் )

அடுத்த நாள் போனேன்...
நல்ல வேல! அந்தம்மா இருந்தாங்க...

மேடம்....
சொல்லுங்க சார்...( கரெக்டா கண்டுபிடிச்சுட்டீங்களா...கேக்கல...பாத்தாங்க...)
பழனிக்குமார் னு ரிசிப்ட்டு......னு இழுத்தேன்....(ஆக்சுவலா இழுத்தது அவுங்க தான்)
இந்தாங்க னு கொடுத்தாங்க...
அப்பாடா நன்றி சொல்லிட்டு கொஞ்சம் நகர்ந்து அந்த ரிசிப்ட்ட பார்த்தேன்....

பாத்தா- நான் எப்படி கொடுத்தேனோ அப்படியே கொடுத்துருக்கு அந்தம்மா....
டக்கு னு திரும்பி....' மேடம்....ரென்யூவல் பண்ணலயா மேம்...

' சார் திருப்பி பாருங்க..'
அந்த ரிசிப்ட்ட திருப்பி பார்த்தேன்.. அவனுகளே ரினெயூவல் பண்ண ஒரு கட்டம் வச்ச்ருக்கானுக.... அதுல அந்தம்மா  ஆறு மாசம் 27060 னு எழுதி 25-11-14 வரை னு எழுதிருக்கு.

இத எழுதத் தான் இவ்ளோ நேரமா னு (கேக்கவா முடியும்...வந்துட்டேன்)

மறுபடியும் ஆறுமாசம் 20 நாள் கழிச்சு அந்த ரிசிப்ட எடுத்துட்டு போறென். 

அதே இடம்...அதே மேடம்...
'மேடம்..' ( வேறென்ன அவங்க இடத்துக்கு போய் கூப்டுறேன்...)
'சொல்லுங்க சார்......( அதே தான்....கேக்கல....பாக்குது...)
இத ரென்யூவல் பண்ணனும்.....

எவ்ளோ நாளைக்கு சார்....
ஆறு மாசத்துக்கு....
ஒரு வருசத்துக்கு போடுங்க சார்...வட்டி கூட கிடைக்கும்....
சரிங்க மேம்....ஒரு வருசத்துக்கு பண்ணிருங்க.....
நாளைக்கு வர்றீங்களா.....( சரி தான்....அவுங்களுக்கும் டைம் ஆகும்ல... பெரிய வேலை தான...இத க்ளோஸ் பண்ணனும்....அப்புறம் புதுசா ஓபன் பண்ணனும்...அப்புறம் ரிசிப்ட் புதுசா தயார் பண்ணி பிரிண்ட் போடனும் ...இப்படி முந்துன பாரா ல எழுதுனதயே இப்ப காப்பி பேஸ்ட் பண்ணிட்டேன்.......)

அடுத்த நாள் கேமரா கட் பண்ணி ஆன் பண்ணா....பேங்க் ஆப் இந்தியா க்குள்ள காலையிலேயே இருக்கேன்...ஏன்னா இன்னும் பண்ணல....அப்புறம் வா னு சொல்லிட்டானுகனா....

மணி பத்து....வங்கி நேரம் 9.30...ஆனா ஆபிஸர்ஸ் யாரும் வரல.....
அந்தம்மா அரக்க பரக்க வந்தது...
இப்ப போயி உடனே இத கேட்டா...அந்தம்மா டென்ஸன் ஆயிரும்....இலக்கியவாதிக மொழில அந்தம்மா கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக்கட்டும்...அப்புறம் கேப்போம்...னு ஒரு டீ சாப்பிட போயிட்டென்...

அரை மணி நேரம் கழிச்சு பேங்க் உள்ள போனேன்...
நான் போன நேரம் பார்த்து அந்தம்மா க்கு டீ கொண்டு வந்து வச்சுட்டானுக...
இப்ப போய் கேட்டா டென்ஸனா ஆகுமோ....( என்னய்யா இப்படி பண்றீங்க....என் பணத்துக்கு இவ்ளோ அக்கப்போரா....போனதடவை 25000 தான் இப்ப 26010...)

சரி வெயிட் பண்ணுவோம்..னு பணம் எடுக்க வந்தவனுக டோக்கனோட உக்காந்திருக்குற வரிசையில டோக்கனே இல்லாம உக்காந்திருக்கேன்.
 வரிசையில உக்காந்துட்டே அந்தம்மா டீ குடிச்சுருச்சா னு பாக்குறென்...

நேத்து அவங்க கல்யாணத்துக்கு போனீங்களா....
அந்த கிரகப்பிரவேசத்துக்குத் தான் போனேன்...
வீடு சூப்பரா இருக்கு....ஆனா அவுட்டர் ஏரியா....
லோன் போட்டுத்தான் கட்டிருக்காங்களாம்....

என்ன சம்பந்தம் இல்லாம எழுதிருக்கேன் பாக்காதீங்க மக்களே...அந்தம்மா டீ  ய சாப்பிடாம பக்கத்துல இருக்குற பிரகஸ்பதிகட்ட பேசிட்டு இருக்கு..

.நான் அது எப்ப டீய குடிக்கும் னு பாத்துக்கிட்டு இருக்கேன்...என் பக்கத்துல ஒரு பெரியவர்...அனேகமா ரிடயர்டு தமிழ் டீச்சர் னு நினைக்கிறென்.....டோக்கன கையில வச்சுக்கிட்டு என்னையவே பாக்குறார்.

அந்த பார்வைக்கு என்ன அர்த்தம்னா....அந்தம்மாவ நான் சைட் அடிக்குறமாதிரியும்...அவர் என்னை முறைக்குற மாதிரியும்.....

எனக்கு பரவால....

அவருக்கு டோக்கன் கொடுத்துட்டு பணம் கொடுக்குற கேஷியர் கவுண்டர்லயே இல்ல...அந்தம்மா ட்ட வந்து பேசிட்டு இருக்காரு....
நியாயமா பாத்தா...அந்த பெரியவர் தான் அந்தம்மா வ பாத்து முறைக்கனும்....என்னைய முறைக்குறாரு.....

ஒரு வழியா டீ தீந்திருச்சு...

நான் போனேன்..

'சொல்லுங்க சார்  ( அதே தான்...கேக்கல...பாத்துச்சு...(காப்பி பேஸ்ட் தான்)

'மேடம்...அந்த ரிசிப்ட்....

பேர் சார்...

பழனிக்குமார்...

தேடுச்சு....
மறுபடியும் தேடுச்சு.....

அதுக்குள்ள...'மேடம் மதியம் லஞ்ச் க்கு ஏதும் சொல்லவா..' னு அந்த கேஷியர் அந்தம்மாட்ட பேச்சு கொடுக்குறாரு... (யோவ் நீ இன்னும் கவுண்டருக்கு போகவே இல்லையா...ஒரு நிமிஷம் இரு னு அந்த பெரியவர திரும்பி பாக்குறென்..)

அந்த பெரியவர் இப்பவும் என்னையவே பாக்குறாரு....( என்னய ஏன்யா பாக்குற....)

நான் இப்ப மேடம்ம பாத்தேன்....
அவங்க மறுபடியும் தேடுனாங்க....
போச்சா..என் 25000 சாரி இருபத்தாறாயிரத்து பத்து.....ஊஊஊஊஊஊஊ ஆ.....

' சார், நீங்க அந்த சார் ட்ட வாங்கிக்கோங்க னு பின்வரிசையில இருக்குற ஒரு சீனியர் ஆபிஸர் சார காண்பிச்சாங்க....

சரி னு உள்ள அவர்ட்ட போய் நின்னேன்....

அவர் அப்படியே தங்க கலர்....ஜிகு ஜிகு ஜிகு னு மின்னுறாரு...வயது அநேகமா ரிடையர்ட் க்கு பக்கத்துல இருக்கும்.....
காலையில பூசுன பவுடரும். திருநீறும் அப்படியே வந்திருக்கான் மனுஷன்...நல்லா ஏசியில இருக்குறனால ஜம்முனு இருக்காப்புல....

என்னடா ரிசிப்ட்ட கேக்காம அந்தாள ரசிக்குறேனு நினைக்காதீங்க மக்களே...
அந்தாளு டீ குடிச்சிட்டு இருக்காரு....
இப்ப கேக்கவா முடியும்...ஒரு ரூபா ரெண்டு ரூபா இல்ல....இருபத்தாறாயிரத்து பத்து.....

எவன் அந்த டீக்கடைக்காரன்னு தெரியல...
டீ ய கொதிக்க கொதிக்கக் குடுத்துருக்கான்.
ஊதி ஊதி குடிக்கிறாரு சார்....
பேசாம நானே டம்ளர வாங்கி ஊதி இல்லாட்டி ஆத்தி கொடுத்துட்டா வேகமா குடிச்சுருவாருனு நினைக்கிறேன்....

மெதுவா டீய குடிச்சுட்டு டம்ளர கீழ இருக்குற குப்பைத் தொட்டில போட்டுட்டு..........மெதுவா எழுந்து....எந்திரிக்கும்போது பின்னாடிருக்குற நாற்காலிய நகர்த்திவிட்டுட்டு.....அவரோட பேண்ட் பாக்கெட்ல கைய விட்டு.....கஷ்டப்பட்டு அந்த கைக்குட்டைய எடுத்து....அவரோட் வாய் தொடச்சுட்டு...அப்ப்றம் கைக்குட்டையோட மடிப்பு குலைஞ்சத சரி பண்ணிட்டு, அத மறுபடியும் பேண்ட் பாக்கெட்டுக்குள்ள கைய திணிச்சு வச்சுட்டு....பின்னாடி இருக்குற நாற்காலிய தன் பக்கம் இழுத்து உட்கார்றார்...
மக்களே...அவர் பண்ணத நான் வேகமா எழுதிட்டேன்....நீங்க படிச்சு முடிச்ச இந்நேரத்துக்கு அவர் கைக்குட்டைய கூட எடுத்துருக்க மாட்டார்...

மெதுவா உக்காந்து....என்னய பார்த்தார்...
fd  ரிசிப்ட் பத்தி சொன்னேன்...
அவர் உடனே....'கண்ணா..னு ஒரு பையன கூப்பிட்டார்..
காலேஜ் படிக்குற வயசுல ஒர் பையன் வேல பாக்குறான் அங்க...
அவன் வந்து ' சார்' னு நின்டான்.
' சார் பேர கேட்டு எடுத்துக்கொடு" னார்.
நான் உடனே...' பழனிக்குமார்...னு சொன்னேன்
அந்தப்பையன் ஒரு ட்ரே ல தேடுனான்....
நான் தான் சொன்னேன்ல...அந்த பிரின்ட் மை கண்ணுக்கே தெரியாதுனு....அவனால ஈசியா கண்டுபிடிக்கமுடியல....
எவ்ளோ பணம் அண்ணே னு கேட்டான்.....

( இது ஒரு நல்ல கேள்வி....மக்களே...இதுக்கு நீங்க சொல்லுங்க....முத முதல் போட்ட 25000 த்த சொல்லவா...இல்ல இருபத்தாறாயிரத்து பத்த சொல்லவா....இந்த பிரகஸ்பதிக என்னத்த பண்ணி வச்சிருக்கானுக ன என்னத்த சொல்ல...)

நான் மனச திடப்படுத்திட்டு....இருபத்தாறாயிரத்து பத்து னு சொன்னேன்....

அவன் தேடிட்டு...ஒரு மாதிரி என்ன பாத்து....25000 னு மட்டமா சொன்னான்.


கையில வாங்கி பாத்தா...அந்த பதர்க...அத மாத்தல...சும்மா பின்னாடி ஏற்கனவே எழுதுனதுக்கு கீழ எழுதிருக்குதுக.....

இனி அடுத்த தடவ வர்றப்ப நானே இந்த பணத்த எடுத்துரணும். ரென்யூவல் பண்ண முடியாது. ஏன்னா இந்த ரிசிப்ட்ல எழுத இடம் இல்ல...இப்ப பணம் எடுக்க வர்றப்ப இவங்க இல்லாட்டி அந்த இடத்துல இருக்குற ஆளுக்கு இத எப்படி சொல்லி புரிய வைக்கிறதுனு தெரியல.....

ஒழுங்கா பின்னாடி பாத்தாத்தான் அந்த தொகை தெரியும் இல்லாட்டி என்னோட

இருபத்தாறாயிரத்து பத்துக்கும் ஊஊஊஊஊஊஊஊ.......தான்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நானுனக்கு...

பூ தொடுத்தல்

இது தம்மு...இது ரம்மு....