அது ஒரு பேருந்துபயணம். அடுத்த இருக்கையில் அமர்ந்தவர் விற்பனைத்துறையில் மேலாளராயிருக்க வேண்டும்.

யாருக்கோ அலைபேசியில் தொடர்புகொள்கிறார். வண்டி வந்துவிட்டதா எனக்கேட்கிறார். இல்லை என பதில் வந்திருக்க வேண்டும். தான் விசாரித்துவிட்டு அழைப்பதாக அழைப்பைத் துண்டிக்கிறார். அலைபேசியில் மற்றொரு எண்ணைத் தேடித் துழாவி அழைக்கிறார். வண்டியின் ஓட்டுனரின் அலைபேசி எண்ணைக் கேட்கிறார். அந்த முனையில் எண் குறுஞ்செய்தியாக அனுப்புவதாகச் சொல்லியிரருக்கவேண்டும். அந்த அழைப்பைத் துண்டிப்பதற்குள் முதலாவதாக அவர் அழைத்த அனேகமாக அவர் வாடிக்கையாளராக இருத்தல் வேண்டும் அங்கிருந்து மறுபடியும் அழைப்பு வருகிறது. ஓட்டுனரின் எண்ணைக் கேட்டிருப்பதாகவும் பேசிவிட்டு அழைப்பதாகவும் துண்டித்துவிட்டு அலைபேசியையே பார்க்கிறார். அதற்குள் ஓர் அழைப்பு வருகிறது, மிகவும் சாந்தமாக பேச ஆரம்பிக்கிறார். வந்துகொண்டிருப்பதாகவும் இரவு உணவுக்காக காத்திருக்காதே சாப்பிட்டு விடு எனச் சொல்லிவிட்டு பாப்பா சாப்பிட்டாளா எனக் கேட்கும் தருவாயில் தொடர்பு எல்லைக்கு வௌியில் இவர் வந்திருக்கவேண்டும் ஏனென்றால் அந்தக் கேள்வியை இரண்டுமுறை கேட்டார். 
இப்பொழுது அலைபேசி அழைக்கிறது, எடுத்துப் பேச ஆரம்பிக்கிறார். அது அவரது வாடிக்கையாளர். பதில் அளித்துக்கொண்டே கன்னத்தில் ஒட்டியிருந்த அலைபேசியை நேராக பார்க்கிறார். 
அனேகமாக அது அவரது மனைவியின் காத்திருக்கும் அழைப்பாயிருக்கும். அவரது அன்புக்குழந்தை சாப்பிட்டாளா எனத்தெரிந்துகொள்ள அவர் பத்துகிலோ மீட்டர் நகர்ந்திருந்தார்.

சிலருக்கு பூமி சுழல்கிறது. சிலரை பூமி சுழற்றுகிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நானுனக்கு...

பூ தொடுத்தல்

இது தம்மு...இது ரம்மு....